எமர்ஜென்சி அமலில் இருந்தபோது நான் பத்தாம் வகுப்பு மாணவன். எனக்கு அரசியல் தெரியாது. அப்போது ரயில்கள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் எல்லாம் குறித்த நேரத்தில் சரியாக இயங்கியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
அடுத்து வந்த தேர்தலில் எங்கள் கிராமத்தில் இந்திராவைத் தாக்கி, ஓர் அரசியல் கட்சியால் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதைக் கண்டதும் எனக்குக் கோபம் வந்துவிட்டது. மாத காலண்டரைப் பிய்த்து, பின்பக்கம் இந்திராவை வாழ்த்தி எழுதினேன். இரவோடு இரவாக என் தம்பியின் துணையுடன் அந்த போஸ்டர்கள் மீது ஒட்டிவிட்டேன்.
மறுநாள் போஸ்டர் ஒட்டியவர்கள் பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட, அவர் இந்தப் பிரச்சினையைத் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டார்.
யாராலும் என்னைக் கண்டறிய முடியாது என்று நம்பிக் கொண்டிருந்தபோது, கிழித்த போஸ்டர்களோடு எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார் பஞ்சாயத்து தலைவர்.
என்னைப் பார்த்து, “உனக்கு ஏன் இந்த வேலை?" என்று கேட்டார். “இதை நான் செய்யவில்லை, நீங்கள் எப்படி நான்தான் செய்தேன் என்கிற முடிவுக்கு வரலாம்?” என்று துணிச்சலாகக் கேட்டேன். “உன் கையெழுத்து எனக்குத் தெரியாதா? இது போல வாசகங்கள் எழுத உனக்கு மட்டுமே தெரியும்.
அரசியல் என்பது சாதாரணமில்லேப்பா. நீதான் இந்த வேலையை செய்தாய் என்று தெரிந்தால் என்ன ஆகும்? தேர்தல் நேரத்துல போஸ்டர் மேல போஸ்டர் ஒட்டினா ஒரு வருஷம் ஜெயில் தெரியுமா? ஒழுங்கா படிக்கிற வேலையைப் பார்" என்று சற்றுக் கோபமாகச் சொல்லிவிட்டுச் சென்றார் பஞ்சாயத்து தலைவர். அன்றோடு இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். இன்று வரை ஒரு பார்வையாள னாக மட்டுமே அரசியலைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
- அண்ணா அன்பழகன்.