வாழ்வு இனிது

அற்புதமான நாசி லெமாக்! | புதுமையான சுவை

நந்தவனம் சந்திரசேகரன்

கடந்த பத்தாண்டுகளாக மலேசியா சென்று வருகிறேன். ஒவ்வொரு முறையும் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மலேசியாவுக்குச் சுற்றுலா செல்பவர்கள் பத்துமலை முருகன் கோயில், இரட்டைக்கோபுரம் போன்ற இடங்களுக்குத் தவறாமல் செல்வார்கள், இந்தியாவிலிருந்து மலேசியா செல்பவர்கள் பெரும்பாலும் இந்திய உணவு வகைகளையே தேடுவார்கள்.

மலேசியா உணவு வகைகள் சுவையாக இருக்கும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. புதுப்புது உணவு வகைகளை அங்கே காணலாம். மலேசியா உணவு வகைகளில் முக்கியமானது ’நாசி லெமாக்.’ இது மலேசியாவின் தேசிய உணவு. மலாய் மக்களின் முக்கியமான உணவு., மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இது புகழ்பெற்ற உணவு! நாசி லெமாக் என்கிற பெயர் மலாய் மொழியிலிருந்து வந்தது.

          

நாசி என்றால் அரிசி, லெமாக் என்றால் கொழுப்பு அல்லது கொழுப்பான பொருள். தேங்காய்ப் பாலில் வேகவைத்த சோறும், காரமான சம்பல், மொறு மொறுப்பான நெத்திலி, வறுத்த வேர்க்கடலை, குளிர்விக்கும் வெள்ளரித்துண்டு, வேகவைத்த முட்டை அல்லது ஆம்லெட் ஆகியவற்றுடன் இணைந்த சுவையான உணவு. வாழை இலையில் மடித்து அழகாகக் கட்டி வைத்திருப்பதைப் பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றும்.

மலேசியர்கள் காலை உணவாக நாசி லெமாக் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எளிமையான ஆனால், சுவையான நாசி லெமாக்கை, பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகவே பாதுகாக்கின்றனர். மலேசியாவில் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை எல்லா இடங்களிலும் இந்த உணவு கிடைக்கும்.

நான் மலேசியா செல்லும் போதெல்லாம் தினமும் நாசி லெமாக் சாப்பிடுவதற்காக உணவகங்களைத் தேடிச் செல்வேன். ஒரு முறை சாப்பிட்டு அதன் சுவையை உணர்ந்தால் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்கிற ஆசை வரும். மலேசியா செல்லும் போதெல்லாம் நாசி லெமாக் சாப்பிடாமல் வந்தால் மலேசியா சென்று வந்தது முழுமை பெறாதது போலவே தோன்றும். இனி மலேசியா செல்பவர்கள் ஒரு முறையாவது நாசி லெமாக் உணவைச் சுவைத்துப் பாருங்கள். சென்னையிலும் இது கிடைக்கிறது.

SCROLL FOR NEXT