வாழ்வு இனிது

மூத்தோர் சொல் | பாற்கடல் 33

கலாப்ரியா

‘பெரியவங்க பேசுகிற இடத்தில் சின்னப் பயலுக்கு என்னலே வேலை, ஓடுங்க’ என்று விரட்டி விடுவதுதான் பெரியவர்களின் பொதுவான இயல்பு. ஆனால், என் அப்பாவும் அவர் நண்பர்களும் பேசிக் கொண்டிருக்கையில், நான் அங்கே போனால் அப்பா விரட்ட மாட்டார். என்னைவிட மூத்தவர்களிடம் எனக்குக் கொஞ்சம் நல்ல பெயர் உண்டு. அதனால் என்னைக் கண்டதும், `வேமைனர் என்ன நடக்கு, இப்ப என்ன படிக்கேரு’ என்று விசாரிப்பார்கள். நானும் பதில் சொல்வேன்.

பாட சம்பந்தமாகவோ, பொது அறிவு சம்பந்த மாகவோ கேள்வி கேட்டால் பெரும்பாலும் சரியான பதில் சொல்வேன். அதனால் அப்பாவின் சிநேகிதர்களும் என்னை அவர்கள் மத்தியில் சற்று நேரம் அனுமதிப்பார்கள். சமயத்தில், அதிகப்பிரசங்கமாகப் பதில் சொல்லும்போது, சித்தப்பா மட்டும், `டேய் `அ.பி’ (அதிகப்பிரசங்கி) போ, போய் உன் சேக்காளிங்ககூட விளையாடு’ என்று அனுப்பிவிடுவார். அவர்கள் பாராட்டி னாலும் கடிந்துகொண்டாலும் அப்பா மௌ னமாகவே இருப்பார்.

அப்பாவின் நண்பர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்ததில் சில நல்ல விஷயங்கள் எனக்கு அறிமுகமாயிற்று. ஒருநாள் ரவிவர்மா காலண்டர் கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் அவர் பெரிய ராஜா என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

அப்படியே காலண்டர் ஓவியர்கள் பெயரெல்லாம் அடிபட்டது. கொண்டையா ராஜு, மு. ராமலிங்கம், டி.எஸ். சுப்பையா என்று ஆளுக்கொரு பெயர் சொல்லி ரவிவர்மாவைவிட, கொண்டையா ராஜு படங்கள்தான் நல்லாருக்கும், `அந்தக் கஜேந்திர மோட்சம் படம் எவ்வளவு உயிரோட இருக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர். அப்பாவின் சிநேகிதர்களில் அவர் நிறையப் படித்தவர்.

அவர் ஒருநாள் என்னையும் அப்பாவையும் வினோபா பாவே பேசும் கீதைப் பேருரைக் கூட்டத்திற்குக் கூட்டிப் போயிருந்தார். நான் சும்மா உட்கார்ந்திருந்தேன். அதற்கே அந்த அண்ணாச்சி என்னைப் பாராட்டினார். ஒரு ரூபாய் விலையில் வினோபா எழுதிய `கீதைப் பேருரை’ புத்தகம் விற்றுக் கொண்டிருந்ததை வாங்கி என்னிடம் தந்தார். பத்திரமா வச்சுக்கடே என்றார். ரொம்ப நாள் அது என் பாடப் புத்தகங்களுடன் கூடவே இருந்தது. பிற்காலத்தில் கொஞ்சம் வாசித்தேன்.

வினோபா கூட்டம்போல ராஜாஜி சுதந்திரா கட்சி ஆரம்பித்த புதிதில் நடைபெற்ற பிரம்மாண்டக் கூட்டத்திற்கும் நான் போனது நினைவிருக்கிறது. அவர் அன்று `நேரு மாமாவை’ விமர்சித்துப் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை. அப்பாவின் நண்பரிடம் சொன்னேன். நீ பெரிய அரசியல் வாதியா வருவேடே என்று சிரித்துக் கொண்டார். அப்படி ஆகவில்லை என்றாலும் அரசியல் உணர்வுடன் இருக்க, இந்திய அரசியல் பற்றித் தெரிந்துகொள்ள அதெல்லாம் அடிக்கற்களாக இருந்தன.

பிறகு தெரு நண்பர்களுடன் பழகுகிற வயதை எட்டிவிட்டேன். தெருவில் என் வயதொத்தவர்கள் ரொம்பக் குறைவு. சி.என்.சுப்பிரமணியனும் லெனா சுப்பிரமணியனும்தான் என் வயசு. லெனா சுப்பிரமணியன் என்கிற மில்லு முதலாளி வீட்டு மணி, சிவாஜி ரசிகன்.

அதனால் அவ்வளவு ஒத்துப் போகாது. பழனி என் வகுப்பில் படித்தாலும், என்னைவிட ஒரு வயது மூத்தவன். எங்களுக்கு வாய்த்த மிக நல்ல மூத்த நண்பர்கள் என்றால், எழுத்தாளர் வண்ணதாசனையும் அவர் அண்ணன் கணபதியையும்தான் சொல்ல வேண்டும்.

என்னைவிட நான்கு வயது மூத்தவர் வண்ணதாசன். அவரிலும் இரண்டு வயது மூத்தவர் கணபதியண்ணன். அவர்கள் வீட்டில்தான் விடுமுறைக் காலங்கள் கழியும். அவர்கள் வீட்டில் செங்கல் வைத்துக் கட்டிய தற்குப் பதில் புத்தகங்கள் வைத்துக் கட்டிய சுவர்களே அதிகம்! சுவர் அலமாரிகளில் எல்லாம் புத்தகங்கள் நிரம்பி வழியும்.

விகடன், குமுதம் இதழ்களில் வந்த கதைகள், தொடர்கதைகளின் பைண்ட் வால்யூம்கள், கண்ணன் இதழில் வந்த சித்திரக் கதைகள், கலைமகள் வெளியீடாக வந்த புத்தகங்கள், தாமரை, சோவியத் லிட்டரேச்சர், சைனீஸ் லிட்டரேச்சர், தீபம், எழுத்து, நடை இலக்கிய இதழ்கள் என்று அங்கு இல்லாத புத்தகங்களே கிடையாது. இந்தியா - சீனா போர் மூளும்வரை சைனீஸ் லிட்டரேச்சர் வந்துகொண்டிருந்தது.

வண்ணதாசன், கணபதி இருவருமே நல்ல ஓவியர்கள். கணபதியண்ணன் குமுதம் இதழில் வரும் ஓவியர் வர்ணம் படங்களின் ரசிகர். அவற்றை அப்படியே வரைவார். வண்ணதாசன் கோபுலு ஓவியங்களின் ரசிகர். அவருடைய கோடுகளில் கோபுலுவின் கைவண்ணம் தெரியும். வண்ணதாசனின் சிநேகிதராயிருந்து எனக்கும் மூத்த சிநேகிதரானவர், சக்தி கணபதி என்கிற ஓவியர். அவர் வண்ணதாசனின் வகுப்புத் தோழரும்கூட.

அவர் மகிழ்ச்சிக்கண்ணன் என்கிற அனந்தகிருஷ்ணனுடன் இணைந்து, ஆங்கிலத்தில் வரும் ஷங்கர்ஸ் வீக்லி கார்ட்டூன் இதழ்போலத் தமிழில் ‘கிண்டல்’ என்றொரு கார்ட்டூன் பத்திரிகை கொண்டுவந்தார். பின்னாளில் மகிழ்ச்சிக்கண்ணன் துக்ளக்கில் `அனந்து’, `விசிட்டர்’ என்கிற பெயரில் பல கட்டுரைகள் எழுதிவந்தார். அவரே விசிட்டர் என்கிற பெயரில் பத்திரிகையும் நடத்தினார். உண்மையில் துக்ளக் பத்திரிகைக்கு முன்னோடியே ‘கிண்டல்’ பத்திரிகை என்றால் மிகையாகாது.

வண்ணதாசனின் நண்பரான எல்.பாலு அண்ணன் அருமையான ஆங்கிலத்திற்குச் சொந்தக்காரர். என்னிடம் இப்போதுகூட அன்பாயிருப் பவர். அதேபோல வண்ண தாசனைத் தேடிவரும் முருக வேள் என்னும் வழக்கறிஞர், எங்களின் நம்பிக்கைகளை வளர்த்தவர்.

அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலே நமக்கும் நம்பிக்கை வரும். வண்ணதாசன் வீட்டிற்கு, நண்பகல் பன்னிரண்டே முக்காலுக்கு ஒலிபரப்பாகும் இலங்கை தேசிய ஒலிபரப்பினைக் கேட்பதற்கென்றே வரும் அலெக்சாண்டர் அண்ணனுக்கு மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் அப்போதே அத்துப்படி. இலங்கை வானொலியில் அந்தச் செய்திகளையே அதிகம் சொல்வார்கள்.

ஈழப் போராட்டங்களுக்குப் பின்னரும் தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னரும் அந்த ஒலிபரப்பெல்லாம் கேட்க முடியாமலே போயிற்று. ‘அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்’ என்று வள்ளுவம் கூறுவதைப்போல, நான் என் மூத்தோர்களிடம் கற்றதும் பெற்றதும் நிறைய உண்டு.

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT