கல்லூரிக் காலத்தில் வெயில் வீணாகப் போகிறதென்று உச்சிப் பொழுதிலும் ஊரைச் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தால், `உனக்கு ஒரு பதிவுத் தபால் வந்திருக்கிறதாம், நீ கையெழுத்துப் போட்டால்தான் தபால்காரர் தருவா ராம்’ என்று அம்மா சொன்னார். உடனே சைக்கிளில் பறந்தேன். வழியில் ஒரு கோயில் நிழலில் வெயிலுக்காக ஒதுங்கியிருந்தார் தபால்காரர்.
என்னைப் பார்த்ததும் சிரித்த படியே, `எம்.ஜி.ஆருக்குக் கடிதம் போட்டிருந்தீங்களோ, அவங்கல்லாம் பதிவுத் தபாலை வாங்க மாட்டாங்க, கடிதம் திரும்பி வந்துட்டு’ என்று கொடுத்தார். நான் அவரின் படத்துடன் கனமான தபாலை எதிர்பார்த்துப் போனால், நான் போட்ட கடிதமே திரும்ப வந்திருக்கிறது.
வாங்கி வந்த கையோடு ஒரு சாதாரணத் தபாலில் அதே சங்கதியை எழுதிப் போட்டேன். தவறாமல் பதிவு அஞ்சலில் அனுப்பிய கடிதம் திரும்பி வந்துவிட்டதையும் விசனமாகக் குறிப்பிட்டிருந்தேன்.
‘பதிவுத் தபாலில் நான் அனுப்பிய கதையைத்தான் படமாக எடுத்துள்ளீர்கள். அந்த அஞ்சலைப் பெற்றுக்கொண்ட ஒப்புகைச் சான்று என்னிடம் உள்ளது என்று பொய்யாக வழக்குகள் வருவதால் அவற்றை வாங்குவதில்லை’ என்று விளக்கி `சர்ட்டிபிகேட் ஆஃப் போஸ்டிங்’கில் பதில் கடிதம் வந்தது.
Certificate of posting என்றால் நான் இன்னாருக்கு கடிதம் போட்டிருக் கிறேன் என்பதற்கு ஓர் அத்தாட்சி. தபால் அலு வலகத்தில் கிடைக்கும் ஒரு படிவத்தில் நாம் அனுப்ப வேண்டிய முக வரியை எழுதி பத்துப் பைசா அஞ்சல் தலை ஒட்டினால் அதில் முத்திரை குத்தி நம்மிடமே சான்றாகத் தருவார்கள்.
அதேபோல விரைவு அஞ்சல் என்று ஒன்று. நாம் ஒட்ட வேண்டிய அஞ்சல்தலை போக அதிகமாக 25 பைசா ஒட்டி விரைவு அஞ்சல் என்று எழுதவோ அல்லது `Express delivery’ என்று அஞ்சலகத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஒரு வில்லையை வாங்கி ஒட்டினாலோ போதும்.
கடிதத்தை, தந்தி போல பெறுநர் கையில் எந்த நேரமானாலும் விநியோகித்து விடுவார்கள். எனக்கு மதுரைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு விரைவு அஞ்சல் வந்தது. ஒரு தேர்வை நன்றாகவே எழுதியிருந்தேன். ஆனால், தோற்று விட்டதாக நாளிதழ்களில் எண் வரவில்லை.
அப்போதெல்லாம் லட்சக் கணக்கில் எழுதுகிற எஸ்.எஸ்.எல்.சி., பி.யு.சி. (புகுமுக வகுப்பு), பி.ஏ., பி.எஸ்சி. போன்ற தேர்வு முடிவுகள் நாளிதழ்களில் வரும். விசேஷப் பதிப்பாகவும் வரும். பேப்பருக்கு அடிபிடியாக இருக்கும் சமயத்தில் தவறுதலாக எண் விடுபட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் அவசரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வார்கள். கொடுமையாக இருக்கும்.
அதனாலோ என்னவோ நாளிதழில் முடிவுகள் வந்த மறுநாள் எனக்கொரு விரைவுத் தபால் வந்தது. `சம்பந்தப் பட்ட புள்ளியியல் தேர்வில் நீ வெற்றி பெற்றுவிட்டாய், உனக்கு அடுத்த எண்தான் தோல்வி. நாளிதழ்களில் தவறுதலாக வந்துவிட்டது’ என்று அவசரத் தபால் ஒன்றைத் தந்திச் சேவகர் கொண்டு வந்து கொடுத்தார்.
அவருக்கு 25 காசு அன்பளிப்பு வழங்கினேன். அவர் முகத்தில் அவரே தேர்வில் வெற்றி பெற்ற சந்தோஷம். கடிதம் எழுதுவது அப்போது பெரிய பொழுதுபோக்கு. உள்நாடு, வெளிநாடு என்று நிறைய பேனா நண்பர்கள் இருப்பார்கள்.
நான் பத்தாம் வகுப்புப் படிக்கையில் எனக்கு இலங்கை மட்டக்களப்பிலிருந்து கோபால ராசா என்று ஒருவர் பேனா நண்பராயி ருந்தார். அவர் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்திருந்த என் ஓவியம் ஒன்றிலிருந்து என் முகவரியை எடுத்துக் கடிதம் போட்டிருந்தார். ரொம்ப நாட்களாக இருவரும் பேனா நண்பர்களாக இருந்தோம். அவருக்கு உள்நாட்டு அஞ்சல் உறையில் (Inland letter) ஒரு கடிதம் எழுதி, அஞ்சல் பெட்டியில் தபால் எடுக்கப்போகும் நேரத்தில் கையில் கொடுத்தேன்.
‘உள்நாட்டு அஞ்சல்’’ எப்படித் தம்பி வெளிநாடு போகுமென்று சுட்டிக்காட்டினார் அந்த ஊழியர். அதேபோல உள்நாட்டு அஞ்சல் கவரினுள் தாளில் எழுதி வைக்கக் கூடாது. அப்படி ஒரு தரம் வைத்து அது வெளியே முகவரி இல்லாத காரணத்தால் நேராகத் திரும்பி வராமல், பம்பாய் Dead letter Officeக்குப் போய், அங்கே உடைத்துப் படிக்கப்பட்டு, என் முகவரிக்குத் தெண்டத் துடன் திரும்பிவந்தது. `உன் பத்துப் பைசா இன்லேண்ட் கடிதம் பாம்பே வரை பாத் துட்டுடே’ என்று அண்ணன் கேலி செய்தான்.
நீ கவருக்கு வெளியே முகவரி எழுதியிருந்தா அது Return letter Office சென்னைக்குப் போய்த் திரும்பி வந்திருக்கும் என்று விளக்கினான். எப்படியோ தப்புப் பண்ணி Return letter Office, Dead letter Office என்பதெல்லாம் என்னவெனத் தெரிந்து கொண்டேன். 10 பைசா தெண்டம் வாங்க என்னவெல்லாமோ தபால் ஆபீஸ் செய்யும். 5 பைசா அஞ்சல் தலை குறைவாக ஒட்டிவிட்டால், இருமடங்கு (பத்துப் பைசா) தெண்டத்தை (Due) வாங்கப் பெறுநரிடம் நேரில் பதிவுத் தபால் போலக் கொடுத்து வசூலித்து விடுவார்கள்.
எழுத்தாளர் சுஜாதா விளையாட்டாகச் சொல்வார், ‘கடிதம் பத்திரமாகப் போக வேண்டு மென்றால் 5 பைசா ஸ்டாம்ப் குறைச்சு ஒட்டுங்க’ என்று. எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, தீப நடராஜன், வல்லிக்கண்ணன் ஆகியோரிடையே `ஊஞ்சல்’ என்கிற கடித இலக்கியப் பரிமாற்றமே நடைபெற்றது. கி.ரா. ஒரு நோட் புக்கில் கடிதம் எழுதி அடுத்தவருக்கு அனுப்ப, அவர் அதில் எழுதி, அடுத்தவருக்கு அனுப்ப, கடைசியில் கிராவுக்கே திரும்பவரும் ஊஞ்சல்போல.
அந்தக் கடிதங்களின் காலத்தில் ஆர்.எம்.எஸ் என்கிற ரயில்வே மெயில் சர்வீஸ் ரயில் நிலையத்தில் செயல்படும். ரயிலிலும் ஒரு RMS கோச் இருக்கும். தாமதக்கட்டணம் (late fee stamp ) ஒட்டி ரயில் புறப்படும்வரை போடலாம். மறுநாள் சேர்ந்துவிடும். மின்னஞ்சலும், ஆண்ட்ராய்டு போனும் வாட்ஸ்அப் செயலியும் வந்த பின் கடிதங்களின் அவசியங்களும் காற்றோடு போய்விட்டன.
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com