வாழ்வு இனிது

செவ்வந்தி போல இருந்தியளே... செகம் பூரா ஆளலாமே... | பாற்கடல் 31

கலாப்ரியா

என் சிறு வயதில் பக்கத்து வீட்டில் ஒரு வயதான தம்பதி இருந்தனர். இருவருக்கும் குழந்தைகள் கிடையாது. தாத்தாவும் ஆச்சியும் மட்டும்தான். தாத்தா கண்டிப்பான பேர்வழி. ஆனால், அவர் உண்டு அவர் ஜோலி உண்டு என்று இருப்பவர். தூத்துக்குடி ஹார்வி மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். காலையில் ஒன்பது மணிக்கு வெளியே கிளம்பினால் நேராக நூலகத்துக்குப் போவார்.

தினமணி, ஹிண்டு பேப்பர்களைப் படிப்பார். பதினோரு மணிக்குப் பெரிய கோயில் போய், ஊஞ்சல் மண்டப நடையில் அமர்ந்து அவரையொத்த நண்பர்களுடன் நாட்டு நடப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். பிரயோசனமான அரட்டையில் தினமணி ‘கணக்கன்’ கட்டுரைகளைப் படித்துவிட்டு விவாதிப்பார்கள். அங்கே கூடுபவர்களில் ஒருவர் அடிக்கடி ஹிண்டுவுக்குக் கடிதம் எழுதுபவர்.

தாத்தா என்னிடம் நல்லநல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். திடீரென்று, `பேரப்பிள்ளை, ஒரு ரூபாய்க்கு எத்தனை பைசா’ என்பார். `இது தெரியாதா 100 பைசா’ என்றால், `அதுதான் இல்லை, ரூபாய்க்கு மதிப்பு குறைஞ்சு போச்சு இப்ப 84 பைசாதான் உலகச் சந்தையில்’ என்பார். பார்த்தால் அன்றைய தினமணியில், `ரூபாய் நாணய மதிப்பு வீழ்ந்ததேன்’ என்று கணக்கன் கட்டுரை வந்திருக்கும்.

திடீரென்று சைக்கிள் சக்கரத்தில் எத்தனை ஸ்போக்ஸ் கம்பி என்று கேட்பார். திகைத்து நிற்கையில், `எண்ணிச் சொல்லும்’ என்பார். இன்னொரு நாள் A.M., P.M. என்றால் என்ன என்பார்.

தெரியாவிட்டால் விளக்குவார். அவர்தான் முதன் முதலில் M.L.A என்பதன் விரிவாக்கத்தைச் சொல்லித் தந்தார். சுருக்கம் (abbreviation), விரிவாக்கம் (expansion) என்றால் என்ன என்றே அவர்தான் சொல்லித் தந்தார். பொருட்காட்சியில் ஆண்டுதோறும் பொதுப் பணித்துறை சார்பில் ஸ்டால் போடுவார்கள். இப்போதுதான் பொதுப் பணித் துறை என்று அழகிய தமிழில் அழைக்கிறார்கள்.

அப்போது ஸ்டாலில் பெரிய நியான் விளக்கில் P.W.D. என்று தான் விளம்பரம் இருக்கும். ஒரு முறை புதிய மணிமுத்தாறு அணைக்கட்டின் அழகிய மாதிரி ஒன்றைச் செய்து வைத்திருந்தார்கள். அருவியும் மலையும் அணைக்கட்டும் அத்தனை அழகு. அதை அந்தத் தாத்தாவுடன் போய் வேடிக்கை பார்த்துவந்தேன். P.W.D. என்றால் என்ன என்று தாத்தாவிடம்தான் கேட்டேன். Pulbic Works Department என்றார்.

வீட்டில் ஏற்படும் குழாய் அடைப்பு, அடி பம்பில் வாஷர் தேய்ந்து போனால் மாற்றுவது என்று சிறுசிறு வேலைகளை அவரே செய்து விடுவார். அதற்குண்டான ஸ்பேனர், சுத்தியல், பற்றும் குறடு என்கிற பத்தக் குறடு, ஸ்குரூ டிரைவர், தகரங்களை வெட்ட வெட்டிரும்பு, உளி என்று சகல கருவிகளும் வைத்திருப்பார். பழைய தகர டின்களை வெட்டி மரப்பொடி (ரம்பத்தூள்) அடுப்பு செய்துவிடுவார். முகப்பவுடர் தகர டப்பாவை வெட்டி ஓர் அழகிய முறம் செய்துவிடுவார்.

நான் காலியான பெரிய பவுடர் தகர டப்பா ஒன்றைத் தாறுமாறாக உருட்டி விளையாடி நெளித்துக் கொண்டிருந்த போது, அதை ஏன் வீணாக்குகிறாய், இங்கே கொண்டா என்று வாங்கிக் குறுக்காகப் பாதியில் வெட்டி, சீப்பு ஹேர்ப்பின் போட்டு வைக்கும் சுவரில் மாட்டிக்கொள்ளும் படியான ஸ்டாண்ட் ஒன்றைச் செய்து கொடுத்தார்.

அவர் வீட்டில் இருந்தவை எல்லாமே ஹாலந்து பிலிப்ஸ் ரேடியோ, ஜப்பான் ஓரியண்ட் ஃபேன், ஜெர்மன் கத்திரிக்கோல் என்று பிரிட்டிஷ் காலத்துப் பொருட்கள்தான். அவரே பிரிட்டிஷ் காலத்து ஆள்தான். எல்லாப் பொருட்களுமே கொஞ்சங்கூட ரிப்பேர் ஆகாமல் வைத்திருந்தார். அப்படி ஜாக்கிரதையாகப் பேணுவார்.

ஜாடிக்கேத்த மூடி மாதிரி தாத்தா வுக்கு ஏற்றாற்போல ஆச்சியும் வீட்டை யும் பொருட்களையும் அவ்வளவு நறுவி சாக வைத்திருப்பார். அவர் அடுப்புக் காரியம் பார்த்தாலும் அத்தனை கறுக்காக இருக்கும். மரப்பொடி அடுப்பில் பொடி அடைப்பதே அவ்வளவு அழகாக இருக்கும்.

பன்னீர் போலத் தண்ணீரை மரப்பொடியில் தெளித்து அடுப்பின் நடுவில் பழைய மண் ணெண்ணெய் பாட்டிலை வைத்துச்சுற்றிலும் மரப்பொடியைப் போட்டு அமுக்கி அடைப்பார். துளி மரத்தூள் சிந்தாது சிதறாது. பாட்டிலை மெதுவாக உருவினால் பொடி கலைந்து விழாமல் ஆச்சி கைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அப்படியே நிற்கும். இப்போது மரப்பொடி அடுப்பு என்றால் என்னவென்றாவது தெரியுமா? வீட்டுச் சுவர்களும் சுத்தமாக இருக்கும்.

அநாவசியமான படங்களோ ஆணிகளோ இருக்காது. அப்போதைய வீடுகளில் தவறாமல் காணப்படும் மூட்டைப்பூச்சி நசுக்கப்பட்ட கறைகள் எல்லாம் இருக்காது. நூலகம் தவிர பொது இடங்கள் எதற்கும் போக மாட் டார். அங்கேயும் நின்று கொண்டே படிப்பார்.

எல்லாரும் சினிமா கொட்டகை களிலிருந்துதான் மூட்டைப் பூச்சியை இழுத்து வருகிறார்கள். அவருக்கும் சினிமாவுக்கும் வெகு தூரம். கோயிலில் அமர்ந்து பேசுவாரே தவிர, சாமி சந்நிதிக்குள்ளோ திருவிழாக்களுக்கோ போக மாட்டார். ஆனால், ஆச்சி திருவிழா ஒன்றும் தவறவிட மாட்டார்.

அது ஒன்றுதான் ரெண்டு பேருக்கும் வேறுபாடு. சுவரில் அவருக்கு அஞ்ச லில் வரும் ஹார்வி மில் (பின்னாளில் மதுரா கோட்ஸ்) காலண்டர் மட்டும் பெரிதாகத் தொங் கும். அதுபோக `ஆரெம்கேவி’ தினசரி காலண்டர் ஒன்று. அப்போது ஆரெம்கேவி ஜவுளிக் கடையிலிருந்து ஊழியர்கள் வந்து கைப்பட வாடிக்கை யாளர்கள் வீட்டில் மாட்டிவிட்டுப் போவார்கள். தாத்தா, ஆச்சி ரெண்டு பேரும் அப்படிக் கறாரான பேர்வழிகள். விருந்தாளிகள்கூட வரமாட்டார்கள்.

அவர்கள் வீட்டின் பின்னால் சிறிய குச்சு வீடு ஒன்று உண்டு. அதில் ரொம்ப நாட்களாக மில்லில் வேலை பார்க்கும் ஒருவர் குடும்பத்துடன் குடியிருந்தார். அவரும் மனைவியும் குழந்தைகளும் இருப்பது தெரியாமல் இருப்பார்கள். குழந்தைகள் எப்போதும் விரல் சூப்பிக் கொண்டுதான் இருப்பார்கள், சத்தமே வராது. ஒரு குழந்தை நாலுநாள் காய்ச்சலில் இறந்து போனது. தாத்தா அழக்கூட விடவில்லை. எடுத்துச்செல்ல அவசரப் படுத்தினார்.

ஒரு நீளக்கம்பில் போர்வையைத் தொட்டில் போலக் கட்டி குழந்தையை அதில் போட்டு அப்பாவும் மாமனுமே தோள் கொடுத்து எடுத்துப்போய்விட்டார்கள். குழந்தையின் அம்மா வாயை முந்தானையால் பொத்திக்கொண்டு அழுதார். கண்ணீர் மட்டும் பொங்கிப் பொங்கி வந்தது. கேவல் சத்தம்கூட வரவில்லை. ‘அழுதாக் கண்டா போன உசுரு திரும்பி வரப் போகுதா’ என்று ஆச்சியும் கூடச் சேர்ந்து சொல்லி விட்டார்.

துக்கம் கேட்க வந்தவர்கள் இப்படியும் ஆட்கள் உண்டா என்று குசுகுசுத்தார் களே தவிர, சிறு ஒப்பாரிகூட வைக்கவில்லை. ஆனால், தாத்தா செத்த அன்று அந்தப் பெண் அவ்வளவு வக்கணை யாகக் குழந்தைக்கும் சேர்த்து ஒப்பாரி வைத்து, ஊருக்கே கேட்கும்படி அழுதார். `செவ்வந்தி போல இருந்தியளே, சிரிக்காமக் கொள்ளாமப் போறியளே, செகம் பூரா ஆளலாமே, திரும்பி நல்லாச் சாகலாமே…’

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT