கேரளத்தின் கொல்லம் ரயில் நிலையத்தில் நின்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அமர்ந்தேன். சற்று நேரத்தில் மிகப் பெரிய டிராலி பெட்டிகளும் பைகளும் ஏற்றப்பட்டன. ஏதோ வெளிநாடு செல்கிறவர்களாக இருக்கும் என்று நினைத்தேன். வயதான பெண்கள் ஏறினார்கள். அவர்களில் ஒருவர் ‘அயோத்தி’ போகிறோம் என்றார் முகம் எல்லாம் புன்னகையுடன். ஆன்மிகச் சுற்றுலா செல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
காலை மேல் பர்த்தில் படுத்திருந்த இளைஞர் ஒருவர் எழுந்து வந்து உட்கார்ந்தார். ’நான் ஆந்திராவைச் சேர்ந்தவன். சென்னையில் பணி யாற்றுகிறேன். சோலோ டிராவலர். இதுவரை 22 மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். இப்போது கோட்டயத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறேன்.
நீங்கள் எல்லாம் எங்கே செல்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் கயா செல்வதாகச் சொன்னார்கள். ஆன்மிகச் சுற்றுலாவாக மட்டுமல்லாமல், பல இடங்களையும் பாருங்கள் என்றார் அந்த இளைஞர். “கயா, காசி என்றதும் நாங்கள் ஆன்மிகச் சுற்றுலா செல்வதாக நினைத்து விட்டீர்களா? எங்கள் சுற்றுலாவில் கோயில்களும் உண்டு.
இது ஆன்மிகச் சுற்றுலா அல்ல. பல ஆண்டுகளாகச் சென்று கொண்டிருக்கிறோம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இப்படிச் சுற்றுலா புறப்பட்டுவிடுவோம். என் அக்காதான் டிராவல்ஸ் மூலம் ஏற்பாடு செய்வார். நான் பெங்களூருவிலிருந்து இவர்களுடன் சேர்ந்துகொள்வேன். இவர் என் அக்காவின் நாத்தனார். மற்றவர்களில் எங்கள் தோழிகள் சிலரும் இருக்கிறார்கள்.
மீதமுள்ள வர்களிடம் இனிமேல்தான் அறிமுகம் ஆக வேண்டும். 13 நாள் சுற்றுலா. ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வார்கள். நல்ல உணவு வழங்குவார்கள். போட்டிகள் வைத்து, அதில் ஜெயிப்பவருக்கு அடுத்த சுற்றுலா இலவசம். நான் சென்ற முறை ஜெயித்தேன். எல்லாருக்கும் கட்டுப்படியாக வேண்டும் என்பதற்காகத்தான் ரயிலில் பயணிக்கிறோம்” என்றார் அந்தக் குழுவில் இளையவரான 63 வயதுப் பெண். அவர் அக்காவுக்கு 77 வயது. மற்றவர்களும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களே. அத்தனை பேரும் பெண்கள்.
“உங்க குடும்பத்தோடு வந்திருந்தால் இன்னும் நல்லா இருக்குமே” என்று கேட்டார் அந்த இளைஞர். “குடும்பத்தோடு வந்தால் சுற்றுலாவிலும் குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டும். இப்படித் தனியாக வரும்போது குடும்பப் பொறுப்பு இல்லை. எதையும் நாமே முடிவெடுக்க முடியும்.
சுற்றிப் பார்ப்பதைவிட இந்தச் சுதந்திரம் எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல்” என்றார் அந்த இளைய பெண்மணி! மற்ற இருவரும் அதை ஆமோதித்தார்கள். அவர்களின் பயணம் சிறக்க வாழ்த்துகளைக் கூறிவிட்டு, ரயிலில் இருந்து இறங்கினேன். மனம் உற்சாகமாக இருந்தது!