வாழ்வு இனிது

திருநெல்வேலியான் தேர் பாரான் | பாற்கடல் 27

கலாப்ரியா

`திருநெல்வேலியான் தேர் பாரான் திருச்செந்தூரான் கடலாடான்' என்றொரு சொலவடை சொல்வார்கள். ஒரு விஷயம் ஓர் ஊரில் பிரபலமாக இருக்கும், நான்கு ஊரில் அதைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அந்த ஊர் மக்கள் அதை விரும்பிப் பார்க்க மாட்டார்கள். திருநெல்வேலியில் தேரோட்டம் பிரபலம், ஆனால் அங்கே சிலர், `எங்கே போயிரப்போகுது, நம்ம ஊரு தேருதானே எப்படியும் ரெண்டு, மூணு நாளு நம்ம சனங்க தேரை இழுத்துத் தெருவில நிப்பாட்டி வச்சிருப்பாங்க.

நாளைக்குப் பாத்துக்கிட்டாப் போச்சு’ என்று மெத் தனமா இருப்பார்கள். அவர்கள் நினைக் கிற மாதிரி ஆனித் தேரோட்டத்தில் அப்போதெல்லாம் ஒரு நாளில் தேர் நிலையம் சேரவும் சேராது. குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும். முதல் நாள் மட்டும்தான் நல்ல நேரம் பார்த்துக் காலை நேரத்தில் தேர்இழுப்பார்கள். மற்ற நாட்களில் தேர் இழுப்பதெல்லாம் மாலை நான்கு மணிக்கு மேல் `வெயில் தாழத்’தான், அதாவது சூரியன் தாழ்ந்து மலையில் விழும் சாயங்காலத்தில்தான் இழுப்பார்கள்.

தேர் இழுக்கும்போது கடைகள் எல்லாம் அடைத்துக் கிடக்கும். ஐந்து மணி வாக்கில் கடைகளை அடைத்து, இருட்டி ஏழு மணி வாக்கில் திறக்கும்வரை கடை ஊழியர்களுக்கு ஓய்வு. அதேபோல் பள்ளிக்கூடத்திலும் கடைசி பீரியடான மூணே முக்கால் முதல் நாலரை வரையிலான வகுப்பு இருக்காது.

மூணே முக்காலுக்கு லாங் பெல் அடித்து விடுவார்கள். அப்போது உண்டாகிற சந்தோஷம் இருக்கே, அதைப் போல கொண்டாட்டம் எத்தனை வயசானாலும் வராது. `வீட்டுக்கு விட் டாச்சு..’ என்று கத்திக்கொண்டே தேர் இழுக்க ஓடிவிடுவோம். தேர் இழுக்கறது ரெண்டு நாள் தாமதமானால் படிக்கிற பசங்களும் கடை ஊழியர்களும் கொஞ்சம் சந்தோஷப்படுவார்கள்.

தேரின் பின் சக்கரங்களைப் பெரிய `தடி’யை வைத்து நெம்பித்தான் நகர்த்துவார்கள். அதற்குத் `தடி போடுதல்’ என்று பெயர். அப்படித் தடி போட்டால்தான் தேரை இழுக்க முடியும். தடி போடுவதற் கென்றே பழக்கப்பட்ட ஆட்கள் இருப் பார்கள். எல்லாராலும் போட முடியாது. அவர்களில் சிலரும் அந்த வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் அதிக வருமானம் வராதே என்று யோசித்து, கொஞ்சம் வேலையில் சுணக்கம் காண்பிப்பார்கள்.

ஆனித் திருவிழாவை ஒட்டிதான் நெல்லையில் பொருட்காட்சி நடைபெறும். பொருட்காட்சியில் ஸ்டால் போட்டிருப்ப வர்களும் தடி போடுபவர்களுக்குக் காசு கொடுத்து தாமதப்படுத்துவார்கள் என்றும் பேச்சு உண்டு. அப்போதுதான் பொருட்காட்சி ஓரிரண்டு நாட்கள் நீடிக்கும், அதற்குக் கூட்டம் வரும். இதெல்லாம் காத்துவாக்கில் காதில் விழும் செய்திகள்தான்.

ஆனால், தேரோட்டத்திற்குக் கொடி யேறி விட்டாலே நான்கு ரத வீதிகளிலும் பஸ்கள் ஓடாது. நான்கு ரத வீதிகளும் கோயிலுக்குச் சொந்தமானவை. பஸ்கள் ரதவீதிக்குள் நுழையும் கோயில்வாசல் மண்டபத்தின் குறுக்கே பெரிய பனைமர தடியைப் போட்டுவிடுவார்கள். சைக்கிள்கூட அது வழியே, போக வர முடியாது. பஸ்கள் சுற்றுவழியாகவே டவுனுக்கு வந்து போகும்.

அதனால் ஜங்ஷன், பாளையங்கோட்டை அலுவலகம் செல்பவர்கள், ரயிலில் வெளியூர் செல்பவர்கள் எல்லாருக்கும் நேரத்திற்குச் செல்ல முடியாத சிரமம். ஒரு வருடம் அடிக்கடி தேர் பதிந்து வாரக்கணக்கில் தேர் இழுக்கப்படாமல் நிற்க, ஊரைச் சுற்றியுள்ள சுமார் நான்கு நூற்பாலைகளின் தொழிலாளர்களுக்கு எல்லாம் விடுமுறை அளித்து, அவர்களை வைத்து இழுத்தார்கள்.

தேர் நிலையம் சேரும்வரை போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளில் உண்டாகும் சிரமங்களால் காவல்துறைக்கும் கடும் நெருக்கடி உண்டாகும். அவர்கள் தேர் இழுக்கும்போது பக்தர்களிடம் கெடுபிடி காட்ட மாட்டார்கள். ஆனால், தேரை இழுக்கவிடாமல் தேர் வடத்தைத் தூக்கிப் போடுபவர்கள், ஒருவருக்கு இன்னொருவர் தள்ளி விடுபவர்களை எல்லாம் நோட்டமிட்டு வைத்திருப்பார்கள்.

தேர் நிலையம் சேர்ந்து சாமிக்குத் தீப ஆராதனை காட்டியதும் அவர்களையெல்லாம் செமத்தியாகக் கவனித்துவிடு வார்கள். அப்போது தவறு செய்யாத அப்பாவிகளும் நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பாய்வதுபோலக் கவனிக்கப்பட்டு விடுவார்கள். இந்த விவரம் தெரிந்த நாங்கள் தேர் நிலையத்தை நெருங்குகிறதென்றால் ரத வீதியிலேயே நிற்க மாட்டோம், வீட்டுக்கே போய்விடுவோம்.

தூரத்திலிருந்து பார்க்கையில் தேர் ஆடி அசைந்து வருவதும், தேரில் தொங்கும் துணிக்குழல்கள் காற்றில் ஆடுவதும், தேர் கூட்டத்தினர் தலைகள் மீதாக மிதந்து வருவது போலத்தோன்றும் காட்சியும் காணக் காணத்திகட்டாதது. `தேர் வந்தது போலிருந்தது, நீ வந்த போது’ என்று கண்ணதாசன் சும்மாவா பாடினார் என்று தோன்றும். அதுவும் திருநெல்வேலி தேர் தமிழ் நாட்டிலேயே மூன்றாவது பெரிய தேர். அது செய்யப்பட்டு கிட்டத்தட்ட நானூற்றி இருபது வருடங்கள் ஆகின்றன.

அதைக் கோயிலுக்குக் காணிக்கை வழங்கியது ஒரு திருப்பணிப் பண்டாரம் என்பார்கள். தேர்த்திருவிழாவின் ஆர்ப்பாட்டம், கொண்டாட்டமெல்லாம் தேருக்கு முன்னால்தான். தேர் கைவிட்டு நகரும்போது பின்புறத்து வீதிகளில் ஓர் அதீத அகலமும் மாயமான வெறுமையும் குடிகொண்டுவிடும்.

தேர் இழுக்கும்போது வீதிக்குக் குறுக்கே செல்லும் மின்சார வயர்களையெல்லாம் நீக்கிவிட்டு மின்சாரத்தையும் துண்டித்து விடுவார்கள். அதைச் சரிசெய்ய சற்று நேரமாகும். இப்போதெல்லாம் தேரின் மரச்சக்கரங்களை எல்லாம் இரும்பில் மாற்றி, தேர் ஒரே நாளில் இழுக்கப்பட்டு நிலையம் சேர்ந்து விடுகிறது. தேரோட்டத்தைப் பெரும் பாலோர் தொலைக்காட்சியில் நேரலையாக வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்கிறார்கள்.

பிரச்சினையே இல்லை. அப்போதைய திருவிழாக்களில் குழந்தைகள் தொலைவதும் கிடைப்பதும் வாடிக்கை. நாங்களே ஒன்றிரண்டு குழந்தைகளைக் காப்பாற்றி பெற்றோரிடம் சேர்த்தி ருக்கிறோம். அப்படி ஒரு வருடம் காப்பாற்றிச் சேர்த்தபோது, வீட்டுக்கு வந்ததும் தேரோட்டத்தை வைத்து ஒரு நீண்ட கவிதை எழுதினேன்.

அந்தத் தேரோட்டத்திற்கு அதிசயமாக என் சிநேகிதி வந்திருந்தாள். ஆனால், பார்த்தும் பாராத மாதிரி சென்றுவிட்டாள் ராட்சசி. அதையும் வைத்துத்தான் கவிதை எழுதினேன். `நீ சிரிக்கையில் நடக்கும் திருவிழாக்களில் நான்வழி தப்பும் குழந்தையாகிறேன்!’ கவிதை பிரபலமாயிற்று, காதல் ஏமாற்றிவிட்டது.

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT