வாழ்வு இனிது

விடுகாசு பெற்றவரின் உயில்! | பாற்கடல் 26

கலாப்ரியா

என் அப்பா, அவருடைய அப்பாவிற்கு ஒற்றை ஆண் பிள்ளை. அதனால் ஏகப்பட்ட `செல்லமும்’ செல்வமும் கொடுத்து வளர்த்திருக்கிறார் தாத்தா. அதைக் குறித்து தாத்தாவே அச்சுஅச்சான கையெழுத்தில் ஓர் உயிலில் எழுதி வைத்திருக்கிறார்.

அதில் அவர் சொல்கிறார், `ஆறறி வுடைய அரியதோர் மானுடப்பிறவியை அடைந்தவர்கள் அத்தியாவசியமாக அறிய வேண்டிய உண்மையான `நீரில் எழுத்தாகும் யாக்கை’ எனும் நீதி நெறியைக் கடைப்பிடித்து, நான் நல்லறிவோடும், நல்ல எண்ணத் தோடும், நல்ல நிலையில் இருக்கும் பொழுதே எழுதிவைத்த உயில்.

இப்போது உயில் எழுதும் அவசியம் என்னவெனில் எனக்கிப்பொழுது உள்ளன ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தைகள் மூவருமே. அவ்விதம் ஆண் ஒன்றுமேயிருக்க, இது எழுதுவானேன் என்றால், `பையன் அகால புத்திரனாய், வயதுக்குத் தக்கசூட்டிக்கம் இல்லாதவனாய், எல்லாரையும் ஒன்றாய் வைத்துப் பாதுகாத்து வரும் பான்மையிப் பொழுது வாய்க்கப்பெறாத முன்கோபியாய், பாலில் வளர்ந்தவனாய், வரவுக்கு மிஞ்சிய செலவழிக்கும் வள்ளல் தன்மையுள்ளவனாய்க் காணப்படுகிற படியாலும்தான்.’ இது 99 வருடங்களுக்கு முன் எழுதி வைக்கப்பட்ட உயில்.

பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத காலத்தில் எழுதப்பட்டது, தாத்தா அந்தக் காலத்து பி.ஏ. படித்தவர். அவர் F.A. (Fellow of Arts) வரை திருநெல்வேலியில் படித்துவிட்டு, பி.ஏ.வுக்குச் சென்னை சென்று படித்துள்ளார். அப்போது பி.ஏ. சென்னையில்தான் உண்டு. அவர் பத்திரப்பதிவு அதிகாரி யாக இருந்து ஓய்வுபெற்றவர்.

`குஹ தாசன்’ என்கிற புனைபெயரில் நிறைய சமய நூல்கள் எழுதியிருக்கிறார். குஹன் என்றால் முருகன். அந்நூல் களில் பத்திரப்பதிவில் `விடுகாசு’ பெற்றவர் என்று, தான் ஓய்வுபெற்று பென்ஷன் வாங்குவதைக் குறிப்பிடுகிறார். அவருடைய அப்பா குறிப்பிட்டது போல, என்னுடைய அப்பா `பாலில் வளர்ந்தவனாயும்’, `நெய்யில் அப்பம் மிதந்தாற்’ போல’ என்று சொலவடை சொல்வதுபோலவும், பணத்தைத் தாராளமாகச் செலவு செய்கிறவராகத் தான் இருந்திருக்கிறார்.

அப்பா எப்போதும் சிநேகிதர்கள் புடை சூழத்தான் இருப்பார். நானறியவே அவரின் கடைசிக் காலம்வரை அவரை விட்டு விலகாத நல்ல சிநேகிதர்கள் சிலர் உண்டு. ராமானுஜம் என்று ஒருவர் மதுரைப் பல்கலைக் கழகத்தின் பதிவாளராகப் பணி யாற்றி ஓய்வுபெற்றவர்.

அப்பா இண்டெர்மிடியட்வரை படித்ததாகச் சொல்வார்கள் அவரது நண்பர்கள். அவர் எதையும் சொல்லிக்கொள்ள மாட்டார். அவரின் செயல்களில் ஒரு கெட்டிக் காரத்தனம் இருக்கும். முழு சைக்கிளையும் கழற்றி மாட்டிவிடுவார். பத்து மிஷின்கள் போட்டு, தொழிலாளிகளையும் வைத்து, பெரிய தையல் கடை வைத்திருந்தார். தன் வள்ளல் தன்மை காரணமாக அதை விற்றுவிட்டார். தையல் மிஷினில் ஏற்படும்பழுதுகளையும் அவரே பார்த்துவிடு வார்.

அதற்குண்டான அனைத்துக் கருவிகளும் கடையில் இருக்கும். அப்பா எங்கேயும் வெளியே செல்லும் போது, நானும்கூட வருகிறேன் என்றால் சம்மதித்துவிடுவார். வீட்டில் நிறைய கொலு பொம்மைகள் உண்டு. வருடந்தோறும் புதிதாக பொம்மைகள் வாங்கிச் சேகரிப்பார். பொம்மை வாங்க என்னையும் அழைத்துப் போவார். அவருடைய தேர்வுகளே ஆச்சரியமாக இருக்கும். நல்ல லட்சணமான பொம்மைகளையே வாங்குவார்.

பளபளவென்றில்லாத, வண்ணத்தி லுள்ள பொம்மைகளே அவருக்குப் பிடிக்கும். மாடியில் தென்வடலாக அமைந்த பெரிய ஹாலில் தெற்கே பார்த்த மாதிரி கொலுவை அடுக்குவார். அதற்காகவே ஓர் ஆலமரத்தடியில் இருக்கும் தென்திசைக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிலை ஒன்றைக் கொலுவில் நடுநாயகமாக வைத்திருப் பார். அவர் கொலு அடுக்குவதே ஒரு நறுவிசான அழகுடன் இருக்கும். மாடியின் நான்கு வாசல்களின் எட்டுக்கதவுகளையும் கொலுவின் தட்டு களாக மாற்றிவிடுவார்.

அதற்கென்று படிகள் கிடையாது. கொலு அடுக்குவதற்கு என்னைக் கூட வைத்துக்கொள்வார். கொலுவின் மேல்த் தட்டில் பொம்மைகள் அடுக்க சிறுவனான நான் உபயோகமாக இருப்பேன். அப்பாவின் சிநேகிதர் குற்றாலிங்கம் என்று ஒருவர் பண்ருட்டி பக்கம் வேலை பார்த்தார். அவர் அங்குள்ள விசேஷமான வண்ணங்களுடைய பொம்மைகளை வாங்கிப் பரிசாகத் தந்திருக்கிறார்.

அதேபோல் வண்ண வண்ண ஓவிய காலண்டர்களை அன்றைய ஹார்வி மில்லில் பணிபுரிந்த ராஜு என்பவர் எங்கிருந்தாவது வாங்கிவருவார். அப்பாவுக்கு அவற்றை ரொம்பப் பிடிக்கும். ரவி வர்மாவின் லட்சுமி, சரஸ்வதி, பரமசிவன்-பார்வதி, கருடன்
மீதமர்ந்திருக்கும் விஷ்ணு மகாலட்சுமி, மேனகை-விஸ்வாமித்திரர், துஷ்யந்தன் நினவில் தன்னை மறந்தமர்ந்த சகுந்தலையைத் துர்வாசர் சபிக்கும் ஓவியங்கள்.

வட இந்திய ஓவியர் `வாசுதேவ ஹீரலால் பாண்ட்யா’ வரைந்த கிருஷ்ணரின் ராசலீலா ஓவியம். அதில் யமுனைக்கரையில் பூரணநிலவில் கிருஷ்ணர், தன்னை விரும்புகிற கோபியர் களுக்காகப் பல வடிவங்கள் எடுத்து ஒவ்வொருவருடனும் ஆடிக் கொண்டிருப்பார்.

அத்தனையும் ஜெர்மனில் ஓலியோகிராஃபிக் முறையில் 19ஆம் நூற்றாண்டில் அச்சடித்த ஓவியங்கள். அப்புறம் பிரபலமான எஸ்.எம். பண்டிட்டின் பசு மேல் சாய்ந்தபடி குழலூதும் கிருஷ்ணர் என ஒரு கேலரிபோல மாடியின் நான்கு சுவர்களிலும் அழகான வரிசையில் மாட்டியிருப்பார்.

அதேபோல் ஊருக்குப் பயணம் போகையில் பெட்டியில் ஆடைகளையும் பொருட்களையும் அடுக்குவதில் ஒரு கச்சிதம் இருக்கும். மூன்று நாட்கள் பயணம் என்றால், முதல் நாள் என்ன தேவையோ அது மேலே இருக்கும். அடுத்து இரண்டாம் நாளுக்கானவை. உபயோகப்படுத்தியவை கீழே போய்விடும்.

சுருட்டி மடக்கித் திணிக்க மாட்டார். நாம் இரண்டு பெட்டிகளிலோ பைகளிலோ அடுக்குவதை ஒன்றி லேயே அடக்கிவிடுவார். ஊசி நூல், சேஃப்டி பின், டார்ச், பேனாக்கத்தி என்று பயணத்தின் தூரத்தைப் பொறுத்துத் தேவையானவை எல்லாமே இருக்கும்.

ரயிலில் காசிக்குப் போகையில் அப்பாவின் பழைய காலநண்பரின் குடும்பமும் கூடவே சென் றார்கள். அவர் வீட்டுக்குப் போய் பயணப்பொதிகளை அப்பாவே கட்டிக் கொடுத்து அழைத்துப் போனார். நண்பர் செயின் ஸ்மோக்கர். அதற்கு வேண்டியதை மட்டும் ஒரு தோல் பையில் அவர் வைத்து எடுத்துக் கொண்டார். காசிக்குப் போனவர்கள் எதையா வது கைவிட்டு வர வேண்டும் என்பார்கள்.

அப்பா தனது நண்பரின் அந்தப் பையை அவர் தலையைச் சுற்றிக் கங்கையில் எறிந்து, ``நீ சிகரெட்டை விட்டுவிட்டேன் என்று கங்கை மீது சத்தியம் செய்” என்று சொல்லி, சிகரெட்டைக் கைவிட வைத்துவிட்டார். வழியெல்லாம் அவர்‘என்னப்பா கந்தா, இப்படிச் சத்தியம் வாங்கிட்டியே’ என்று புலம்பிக் கொண்டே வந்தாராம்.

அதற்குப் பின் அவர் சிகரெட்டைத் தொடவே இல்லை. அன்றிலிருந்து அவர் மனைவிக்கும் மகளுக்கும் அப்பா தெய்வம்போலத் தோன்றினார். அந்த மகள் தன் பிள்ளைக்கு என் அப்பாவின் பெயரை வைத்திருப்பதாக அப்பாவின் துஷ்டிக்கு வந்தபோது சொன்னார்கள்.

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT