சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், அண்ணா சாலையின் நடுவே அமைந்திருக்கும் மிகப் பெரிய மசூதியைப் (ஷியா அஷுர்கானா) பார்க்கும்போதெல்லாம், ஒருமுறை உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றும். அந்த எண்ணம் மொஹரம் பண்டிகைக்கு முதல் நாள் இரவு, கோம்பை அன்வர் ஏற்பாடு செய்திருந்த மரபுநடை மூலம் நிறைவேறியது.
இரவு 7.30 மணிக்கு அஷுர்கானாவில் ஒன்றுகூடினோம். ஒரு பாட்டில் தண்ணீரும் ஓர் அத்தர் பாட்டிலும் கொடுத்து வரவேற்றனர். வெளிநாட்டினரும் இந்த மரபுநடையில் பங்கேற்றதால் ஆங்கிலத்தில் இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டது.
இஸ்லாமியராக இருந்தாலும் அனைவரும் அனைத்து மசூதிகளுக்கும் செல்ல முடியாது என்பதும் தமிழ்நாட்டில் போரா முஸ்லிம்கள் எட்டாயிரம் பேர் வசிக்கிறார்கள் என்பதும் அவர்கள் வீட்டில் சமைக்காமல், ‘கம்யூனிட்டி கிச்சனில்’ சமைத்த உணவைத்தான் சாப்பிடுவார்கள் என்பதும் ஆச்சரியத்தை அளித்தது.
எதிரில் இருந்த மசூதிக்குள் நுழைந்தோம். ஜெர்மனியிலிருந்து கொண்டு வரப்பட்ட இரும்புத் தூண்களுடன் கம்பீர மாக நின்றுகொண்டிருந்தது கட்டிடம். ஆண்களும் பெண்களும் கறுப்பு உடை அணிந்து வந்துகொண்டே இருந்தனர். மசூதியின் அனைத்து இடங்களையும் சென்று பார்ப்பதற்கு எந்தவிதத் தடையும் இல்லை.
வெளியில் வந்த போது, கர்பலா போரில் உயிர்நீத்த தியாகிகளுக்காக மார்பில் அடித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆண்கள் ஊர்வலமாக வந்தனர். பிறகு, எங்கள் அனைவருக்கும் சுடச் சுட போண்டா பிரியாணியும் வெங்காயத் தயிர்ப்பச்சடியும் பரிமாறப்பட்டன. காய்கறிகளுடன் போண்டாக் களும் சேர்ந்து பிரியாணிக்கு அற்புதமான சுவையை வழங்கின.
சாப்பிட்ட பிறகு வேன்களில் புறப்பட்டோம். ராயப்பேட்டையில் உள்ள பெரிய மசூதிக்குள் நுழையும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் பன்னையும் சன்னா மசாலாவையும் கைகளில் ஏந்தியபடி சென்றுகொண்டிருந்தனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மசூதியில் தனித்தனிப் பகுதிகள் இருந்தன. பெண்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தோம்.
முந்திரியும் திராட்சையும் கொடுத்து ஆசி வழங்கினர். சில நிமிடங்களில் பெண்களும் மார்பில் அடித்துக்கொண்டு, அழுதுகொண்டே பாட ஆரம்பித்தனர். அந்தப் பாடலும் இசையும் மனதை உருக்கின. அங்கிருந்து வண்ணாரப்பேட்டை நோக்கிச் சென்றோம். வழியெல்லாம் மக்கள் கூட்டம்கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தனர்.
தெருவுக்கு ஒரு பஞ்சா அமைத்து, ஆலிம்கள் மயிலிறகால் மக்களை ஆசிர்வதித்து, சந்தனம் பூசிவிட்டனர். இஸ்லாமியர் மட்டுமன்றி, அனைத்து மதத்தினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆலிம்களிடம் ஆசிர்வாதம் வாங்கிச் சென்ற காட்சி அடடா! ஒருபுறம் குலாப்ஜாமுன் போன்ற தின்பண்டங்களை இஸ்லாமியர்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர்.
இன்னொரு புறம் இந்துக்கள் உப்பு, மிளகு, சுள்ளி, பூக்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் சுள்ளிகளையும் உப்பு, மிளகையும் போட்டு நெருப்பு வளர்த்து, தீயில் இறங்குவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
இரவு பன்னிரண்டு மணிக்குப் பகல் போல் இரவிலும் மக்கள் நடமாட்டத்துடன் வீதிகள் களைகட்டியிருந்தன. மரபுநடையை முடித்துக்கொண்டு, மீண்டும் அண்ணா சாலைக்குள் நுழைந்தபோது உணவகங்களின் வாயில்களில் மக்கள் கூட்டத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. புதிய அனுபவங்களைப் பெற்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பினோம்.