நான் ஐந்தாம் வகுப்பு படிக்கை யில் (1959) `அரை’ அணா (மூன்று நயா பைசா) விலையில் `அணில்’ என்று ஒரு சிறார் பத்திரிகை வரும். தினசரி நாளிதழைக் குறுக்கே மடித்த Tabloid மாதிரி நான்கு பக்கங்கள். சக்தி வை.கோவிந்தன் தான் ஆசிரியர். (பின்னர் அணில் அண்ணா என்கிற பெயரில் புத்தக வடிவில் பாண்டிச்சேரியில் இருந்து ஓர் இதழ் வந்தது). அணில் பத்திரிகை வாங்கக் கடையில் சொல்லி வைக்க வேண்டும். வருகிற மூன்று பத்திரிகை களை இரண்டு பேர் வாடிக்கையாக வாங்குவார்கள். நான் அவ்வப்போது என் அப்பாவின் கடன் கணக்கில் வாங்குவேன்.
கடைக்கார அண்ணாச்சி, ``உனக்குக் கொடுத்தால் கடனுக்குத் தரணும், அவங்களாம் `ரொக்கப் புள்ளி’ல்லா, (ரெடியாகக் காசு தருபவர்கள்). ஆனால், நீ மிட்டாய் வாங்கித் திங்கிறதைவிட இது நல்ல விஷயம்தான், ஒண்ணு செய்யி ஓரமா நின்னு படிச்சிட்டுக் குடுத்திரு” என்பார். ஆனால், நான் வாங்கிவிடு வேன். நண்பர்களுக்குத் தர வேண்டுமே.
பிறகு அணில் நீண்ட நாட்களாக வரவில்லை. 1950-60களில் பிரபலமான சிறுவர் பத்திரிகைகள் அம்புலிமாமா, கண்ணன் ஆகிய இரண்டும்தான். பின்னர் `ரத்னபாலா’ வந்தது. அம்புலி மாமா பொது நூலகத்துக்கு வரும். ஆனால், நம் கைக்குக் கிட்டும்வரை காத்திருக்க வேண்டும். நான் பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்த நல்ல வழுவழுப்பான கற்களை ஆற்றிலிருந்து எடுத்துவந்து நூலகரிடம் தருவேன்.
அதனால் அம்புலிமாமா வந்ததுமே எனக்குத் தருவார். இதே உத்தியைப் பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட் டார்கள். அப்புறம், குடிப்பதற்கு மண் பானையில் ஆற்றுத் தண்ணீரைக் குழாயில் இருந்து பிடித்து வைப்பது, புதுப் புத்தகங்களுக்கு நூலகத்தின் ரப்பர் ஸ்டாம்ப் அடிப்பது போன்ற சேவைகள் செய்தோம்.
இதெல்லாம் அம்புலிமாமா, கண்ணன் பத்திரிகைகளை முந்திப் படிக்க. அம்புலி மாமாவில் சங்கர் ஓவியங்களுடன் `டணால் கோட்டை’, ‘வால் நட்சத்திரம்’ ஆகிய தொடர்கள் அப்போது பிரபலம். சந்திரா ஓவியங்களுடன் விக்கிர மாதித்தன் தொடரும் பிரபலம். சங்கர் ஓவியம் வரைந்தால் அந்தக் கதை அதிகத் தரமாக இருக்கும் என்று ஓர் அபிப்ராயம். `கண்ணன்’ பத்திரிகைக்கு `ஆர்வி’தான் ஆசிரியர். அதில் ஆர்வி எழுதிய சித்திரக் கதைகள், `அந்தச் சிலை’ `சுறா மீன்’ எல்லாம் பிரபலம். அவை நூலாகவும் வந்தன.
கண்ணன்/ கலைமகள் வெளியீடான `காளிக்கோட்டை ரகசியம்’ எனக்கு விருப்பமான ஒன்று. கண்ணனில் `சுப்பு’ ஓவியர். அதேபோல் கல்கியில் வெளியான வாண்டுமாமாவின் சித்திரக் கதைகள் `வீர விஜயன்’, `மரகதச் சிலை’ எல்லாம் `வினு’வின் ஓவியங்களோடு கண்ணிலேயே நிற்கின்றன. விகடனில் 1960களில் கோபுலு ஓவியங்களுடன் ‘சிறுவர் வண்ண மலர்’ என்று தனிப்பகுதியே வெளியிட்டார்கள். இல்லஸ்ட் ரேடட் வீக்லியில் வருகிற `வேதாளன்’ சித்திரத் தொடரைக்கூட எழுத்துக் கூட்டிப்படித்துவிடுவேன்.
கண்ணன் இதழில் வரும் ‘விஞ்ஞானி’ எழுதும் தொடரான `டிரான்சிஸ்டர் ரேடியோ செய்வது எப்படி?’ என்பதைப் படித்து எங்கள் பக்கத்துத் தெரு பிச்சு மணி, காலி சோப்பு டப்பாவில் ரேடியோ செய்தான். அதில் திருநெல்வேலி வானொலி நிலையம் மட்டும் நன்றாகவே எடுக்கும். கோயிலருகே `மகிழ்ச்சி மன்றம்’ என்றொரு புத்தகக் கடை.
அதில் ஒரு ரூபாய் நோட்டை இரண்டாக மடித்தது போன்ற அளவிலான சின்னஞ்சிறிய புத்தகம், `சிங்கமும் நான்கு எருதுகளும்’ கதை குட்டிக் குட்டிப் படங்களுடன் பத்துப் பைசா விலையில் கிடைக்கிறது என்று வாங்கப் போனால், சிகரெட் பெட்டியின் அளவில் வேறொரு புத்தகம் தான் இருந்தது. விலை 25 நயா பைசா. தலைப்பே ஈர்த்தது. `கூழாங்கல் பாயசம்’.
கூட வந்தவர்களிடம் இருந்த காசை யெல்லாம் சேர்த்து அழகான அந்தக் குட்டிப் புத்தகத்தை வாங்கிவிட்டேன். வாங்கின கையோடு நெல்லையப்பர் கோயில் பொற்றாமரைக் குளப் படி களில் உட்கார்ந்து காசு போட்டவர்கள் எல்லாம் கூட்டாகப் படித்தோம்.
ஒரு வழிப்போக்கன் புதிய கிராமம் ஒன்றிற்கு வருகிறான். ஊருக்குள் நுழைகையில் ஒரு சந்தைமடம். வேலை வெட்டியில்லாதவர்கள் படுத்தும் அமர்ந்தும் ஊர்க்கதை பேசியும் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார் கள். முதலில் இவனை வாவென்று ஒருவரும் அழைக்கவில்லை.
நின்று கொண்டேயிருந்தான். வெயிலில் வந்த களைப்பும் பசியும். ஒரே ஒரு கிழவர், `யாரு நீ, என்ன விஷயமா வந்தீரு, ஓரமா உக்காந்து ஆசுவாச மானதும் போயிரும்’ என்றார். குத்துக் காலிட்டு உட்கார்ந்தான். அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து அவர்கள் அப்படி ஒன்றும் புத்திசாலிகள் போல் தெரிய வில்லை. ஆனால், தாகத்துக்குத் தண் ணீர் ஈயாத கஞ்சர்கள் என்பது புரிந்தது.
உட்கார்ந்தே இருந்தவன் நான்கைந்து கூழாங்கற்களை எடுத்துக் கையில் உருட்டியவாறே, `அழகான கல்லா இருக்கே, ஒரு பாத்திரமும் கொஞ்சம் தண்ணியும் கரண்டியும் இருந்தா இந்தக்கூழாங்கல்லை வச்சே பாயசம் காய்ச்சிரலாமே’ என்றான். கூட்டத்தில ஒருத்தன், `அது என்ன கல்லை வச்சுப் பாயசம் காய்ச்சுவேரு’ என்றான்.
`நீங்க பாத்திரமும் தண்ணியும் குடுத்துட்டு அடுப்புகிட்ட வராம இருந்தா, மந்திரத்தில காய்ச்சிரலாம்’ என்றான். கொடுத்தனர். மூன்று செங்கல்களைக் கூட்டி அடுப்பாக்கி, பாத்திரத்தை வைத்து, தண்ணீர் கொதித்ததும் கூழாங்கல்லைப் போட்டு மூடி வைத்தான். அவர்கள் கதை பேசிக்கொண்டே பாயசச் சட்டிமேல் ஒரு கண் வைத்திருந்தார்கள். எட்டிப் பார்த்தால் மந்திரம் பலிக்காதோ என்று எட்டிப் பார்க்கவில்லை!
கரண்டியில் கொஞ்சம் எடுத்து ருசி பார்க்கிற மாதிரி செய்துவிட்டு, `அடடா, கொஞ்சம் தண்ணி கூடிப் போச்சே, கொஞ்சம் அவல் இருந்தா நல்லா ருக்குமே’ என்றான். கொடுத்தார்கள். அடுத்த முறை ருசி பார்த்துட்டு, ‘கொஞ்சம் இனிப்புக் காணாதே, கொஞ்சூண்டு வெல்லம் இருந்தா நல்லா ருக்குமே’ என்றான்.
கொடுத்தார்கள். ‘அவல் போட்டாச்சு, இனிப்புப் போட்டாச்சு, பொறவு பாயசம் ஆகாம இருக்குமா? பாயசம் ரெடியாய்ட்டு. வந்த வனும் ருசி பாக்கேன் பாக்கேன்னு சாப்பிட்டு முடிச்சிட்டான். மற்றவர் களுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்துட்டு, தப்பிச்சேன் பொழைச் சேன்னு நடையைக் கட்டினான்.
அவன் போனப்புறம் சட்டியை எட்டிப் பார்த்தா கூழாங்கல்லுக அப்படியே கிடக்கு!’ இந்தக் கதையை மகள்களிடம் அடிக்கடி சொல்வேன். அவர்கள் காலத்தில் வாண்டுமாமா ஆசிரியராக இருந்த `பூந்தளிரும்’ பைக்கோ கிளாசிக்காக `ட்ரெஷர் ஐலண்ட்’, ‘தி ஹௌண்ட் ஆஃப் பாஸ்கர்வில்லிஸ்’, ‘மகாபாரதம்’ போன்றவையெல்லாம் வந்தன. ஆங்கில இந்துவின் இணைப்பாக Young World வந்தது.
எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். அனைத்தையும் விரும்பிப் படிப்பார்கள். அவர்கள் பிள்ளைகள் ஹாரிபாட்டர், பெர்ஸி ஜாக்ஸன், மேக்னஸ் சேஸ் என்று ஆங்கில சாகச காமிக்ஸ் படிப்பதோடு, புத்தகக்காட்சிதோறும் ஏகப்பட்டவை வாங்குகிறார்கள். தமிழும் படியுங்கள் என்றால், `இங்கிலீஷ்ல எழுதுங்க தாத்தா’ என்கிறார்கள்!
- kalapria@gmail.com