வாழ்வு இனிது

செய்வாய் - பெயர் வந்தது எப்படி?

அண்டனூர் சுரா

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடிக்கு அருகில் ‘செவ்வாய் பட்டி’ என்றோர் ஊர் இருக்கிறது. இந்த ஊரின் பெயரைக் கேட்கும் யாருக்கும் இது ஒரு கிழமையின் பெயரோ என்று தோன்றும். ஆனால், ஓர் ஊரின் பெயருக்கு அந்த ஊரின் அமைவிடம் மிக முக்கியமானது.

கரம்பக்குடியை ஒட்டி ஒரு நீண்ட ஏரி உள்ளது. எந்த ஓர் ஏரிக்கும் வாய்ப்பகுதியும் கால்ப்பகுதியும் உண்டு. அந்த ஏரி தொடங்குமிடத்தில், வாயின் கரையில் நன்கு விளையக்கூடிய நிலம் இருக்கிறது. அந்த நிலப்பகுதியில்தான் இந்த ஊர் உள்ளது.

வேளாண்மைக்குப் பயன்படும் நிலத்தை நம் முன்னோர்கள் பூமி, செய், செறு, குண்டில், அறை, தடி, துடவை, பட்டி, நன்செய், புன்செய், கருஞ்செய் என்று பல்வேறு பெயர்களால் அழைத்திருக்கிறார்கள். நிலம் என்பதற்கு, 'செய்' என்று பொருள். நன்செய், புன்செய் இதிலிருந்து பிறந்தவைதான்.

தமிழ் இலக்கிய வடிவமான செய்யுள், 'செய்' எனும் நிலத்திலிருந்து பிறந்ததுதான். இதைத்தான் தொல்காப்பியர் ‘எழு நிலத்து எழுந்த செய்யுள்’ என்கிறார். அவர் குறிப்பிடும் எழு நிலம் என்பது பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுமொழி. இந்த எழு வகையான நிலத்தை உழுது செய்யப்படுவதே செய்யுள்.

எந்தவொரு நிலமும் தொடக்கத்தில் பாழாகவோ கரம்பாகவோ இருக்கும். அதை உழுது செப்பனிட்டு உழவுத் தொழிலுக்கு உகந்தவாறு மாற்றுவதே செய். ‘செய்’ எனும் பெயரால் பல வகை நிலங்கள் உள்ளன. ‘செய்கால்’ நிலம் என்று ஒரு வகையான சாகுபடி நிலம் இருக்கிறது. கால்வாயில் தண்ணீர்ப் பாசனம் கொண்ட நிலம். 'செய்கால்கரம்பு' என்பது தரிசாக விடப்பட்ட நிலம்.

செய்வாய் என்பது செய்யும் வாயும் சேர்ந்த நிலப்பகுதி. அதாவது நிலமும் நீர்ப்பாசன வசதியும் கொண்ட ஊர் என்று பொருள். வாய் என்பது கால்வாய். கால்வாய், வாய்க்கால் இரண்டிலும் வாய் உள்ளது. 'செய்வாய்ப்பட்டி'யிலுள்ள வாய் என்பது கால்வாயா, வாய்க்காலா? ஆற்றிலிருந்து கால்கள் பிரிந்து, அதை வெட்டி, அதன் வழியே நீர் கொண்டுசென்றால் அது கால்வாய்.

அந்தக் கால்வாயிலிருந்து வயலுக் குள் கால்கள் பிரித்து வெட்டி, நீர்க் கொண்டு சென்றால் அது வாய்க்கால். செய்வாய் என்கிற ஊரிலுள்ள வாய் என்பது கால்வாயைக் குறிக்கிறது. அதாவது செய் எனும் நிலமும் வாய் எனும் கால்வாயும் கொண்ட ஊர் 'செய்வாய்ப்பட்டி'. அவ்வூர் இன்று 'செவ்வாய்ப்பட்டி' என்றும் 'செவ்வாப்பட்டி' என்றும் அழைக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT