வாழ்வு இனிது

உங்கள் வாக்கு எந்த அபேட்சகருக்கு? | பாற்கடல் 24

கலாப்ரியா

நான் முதன் முதலாக ஒரு தேர்தலில் வாக்களித்தது என்னுடைய பத்தொன்பதாவது வயதில். அது நகர்மன்றத்துக்கு நடந்த தேர்தல். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க 18 வயது போதும். ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்களிக்க 21 வயதாக வேண்டும். ராஜீவ்காந்தி அரசால், 61வது அரசமைப்பு சட்டத் திருத்தப்படி 1989 மார்ச் முதல் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப் பட்டது.

ஆனால், நாங்களெல்லாம் பத்து வயதிலிருந்தாவது தேர்தலோடு ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்போம். எனக்கு ஏழு வயது. மத்தியானம் சாப்பிட்டு வேலையெல்லாம் முடிந்த பிறகு, அவசரமேயின்றி சர்வ அலங் காரங்களுடன் அம்மா, அக்கா, பக்கத்து
வீட்டு உறவுப் பெண்கள் சிலர் நெருக்கியடித்து உட்கார்ந்து கொண்டிருந்த ஸ்டாண்டர்ட் 10 காரில், நானும் வரு வேன் என்று திணித்துக்கொண்டு ஓட்டுச்சாவடிக்குப் போனேன். அப்போதெல்லாம் அபேட்சகர்களின் (வேட்பாளர்கள்) காரில், மாட்டு வண்டியில், குதிரை வண்டியில் எல்லாம் `பூத்’ வரை போய் வாக்களிக்கலாம்.

காரின் முன் கண்ணாடியில் டிரைவர் பார்ப்பதற்கு மட்டும் இடம்விட்டு, இடது பாதியில் இரட்டைக் காளைச் சின்னத்தோடு கீழே காங்கிரஸுக்கே `ஓட்' செய்யுங்கள் என்று அச்சடித்த நோட்டீஸ் ஒட்டியிருந்தது. திருநெல்வேலி டவுன் மார்க்கெட்டுக்கு மாடியிலிருக்கும் நூலகம்தான் ஓட்டுச்சாவடி. நானும் அம்மாவின் பின்னா லேயே உள்ளே போய்விட்டேன். யாரும் தடுக்கவில்லை. இரட்டைக் காளைச் சின்னம் ஒட்டிய இரண்டு பெட்டிகள், ரோஜாப்பூ சின்னம் ஒட்டிய பெட்டி ஒன்று, இன்னும் சில பெட்டிகள்.

அவற்றின் மீதான சின்னங்கள் நினைவில்லை. அம்மாவுக்குத் தரப்பட்ட மூன்று ஓட்டுச் சீட்டுகளையும் மூன்று இரட்டைக் காளைச் சின்னம் ஒட்டிய ஓட்டுப் பெட்டியில் போட்டுவிட்டு வந்தார். நான் விவரம் தெரியாமல், ஏன் ஒரு ஓட்டை ரோஜாப்பூவில் போட்டால் என்ன என்று கேட்டேன். 1957இல் ஒவ்வோர் `அபேட்சக’ருக்கும் ஒவ்வொரு பெட்டி, அதில் அவர்கள் சின்னம் ஒட்டப்பட்டிருக்கும். அதில் விழுகிற ஓட்டுகள் எல்லாம் அவர்களுக்கு.

மேலும் திருநெல்வேலி அப்போது இரட்டைத் தொகுதி, ஒரு பொது அபேட்சகர், ஒரு பட்டியலின `அபேட்சகர்’, இருவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி 62 தொகுதிகள் தமிழ்நாட்டில். இதேபோல் நான்கு தொகுதிகள் பழங்குடி அபேட்ச கர்களுக்கு.

ஆக மொத்தம் 66 இரட்டைத் தொகுதிகள். அது போக மூன்றாவது ஓட்டு பார்லிமெண்ட் அபேட்சகருக்கு. `அபேட்சகர்’ `ஓட்டு’, `பூத்’ எல்லாம் அப்போதைய சொல்லாடல்கள். இவை யெல்லாம், 1962 தேர்தலில் உத்வேகம் பெற்று தி.மு.க மும்முரமாகப் போட்டி யிட்டபோது அபேட்சகர் - வேட்பாளர், ஓட் செய்யுங்கள் - வாக்களியுங்கள் பூத் - வாக்குச்சாவடி என்று மாறியது. இரட்டைத் தொகுதி முறை 1962இல் கைவிடப்பட்டு, தனித் தொகுதிகள் (ரிசர்வ்) வந்தன.

அதற்கு முந்திய பிரிட்டிஷ் காலங்களில் காங்கிரஸுக்கு மஞ்சள் பெட்டி, கம்யூ னிஸ்ட் கட்சிக்குச் சிவப்புப் பெட்டி, முஸ்லிம் லீகிற்குப் பச்சைப் பெட்டி. இப்போது இந்த முறை அமலில் இருந்தால் ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் எங்களுக்குப் பச்சைப் பெட்டி வேண்டுமென்று கேட்கலாம், வேறொருவர் மஞ்சள் பெட்டி கேட்கலாம்.

என் அம்மா ஓட்டுப் போடுவதைப் பார்த்துவிட்டு வந்து, பக்கத்து வீட்டு நண்பனுடன் சேர்ந்து ஆளுக்கோர் அட்டைப் பெட்டியும் எடுத்துக்கொண்டு, தெருவில் அவரவருக்குத் தெரிந்த ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து, துண்டுத்தாளில் பெயர் எழுதி, பெட்டிக் குள் போடச் சொல்லி, ஓட்டுச் சேகரிப்பு விளையாட்டு நடத்தினோம். நான் போகும் வீட்டுக்கு அவன் போகக் கூடாது.

சீட்டில் ஓட்டுப் போடுபவர்களின் பெயரை எழுத வேண்டும் என்று பேச்சு. நண்பனுக்கு நிறைய ஓட்டுகள் விழுந்திருந்தன. அப்புறம்தான் தெரிந்தது, அவனே பெயர்களை எழுதி கள்ள ஓட்டுப் போட்டுக்கொண்டது. கள்ள ஓட்டுகளும் ஓட்டுக்குக் காசு கொடுப்பதும் எல்லாக் காலங்களிலும் உண்டு.

சுதந்திரத்திற்கு முன்னான தேர்தலில் பெரும்பாலும் பண்ணை யார்கள், ஜமீந்தார்கள் போன்ற வசதி யானவர்களே போட்டியிடுவார்கள். இப்போது தொழிலதிபர்கள். அப்படியான ஒரு தேர்தலில் ஒரு பண்ணையார் பெரிய சாப்பாட்டுப் பந்தி ஏற்பாடு செய்து, இலையில் சாப்பாடு பரிமாறும்போது முதலில் வைக்கப்படும் உப்பின் மேல் ஒவ்வொரு பவுன் வைத்தாராம். அப்போது ஒரு பவுன் விலை கிட்டத்தட்ட 15 ரூபாய்.

அப்படிக் கொடுத்த வேட்பாளர், எங்கள் தெருவைச் சேர்ந்தவரும்கூட. இந்தத் தகவலை அம்மா அடிக்கடிச் சொல்வார், தேர்தலில் நின்றுவிட்டால் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற வெறி வந்துவிடும். கூடவே இருப்பவர்கள் உசுப்பேற்றி விட்டுவிட்டு, தேர்தல் காய்ச்சலில் இப்படிச் செய்ய வைத்து விடுவார்கள்.

அதிலும் நகர சபைத் தேர்தலில் நின்று பணத்தை அள்ளி விட்டுத் தோற்றுப்போய், தங்கள் சொந்த வியாபாரத்தை இழந்த பலரை எனக்குத் தெரியும். அந்தக் காலத்தில் தேர்தலில் பணம் கொடுக்கவில்லை என்று யாரும் சொன்னால் அது ‘தேர்ந்தெடுத்த’ பொய். ஒரு நகராட்சித் தேர்தலில் சிறுவயதில் விளையாட்டுப் போல நாங்களே பணம் விநியோகம் செய்யும் கைங்கர்யத்தைச் செய்திருக் கிறோம். சிறுவர்கள் என்பதால் வீட்டின் அடுக்களைவரை போக முடியும், எதிர்க்கட்சியினர் தடுக்கவும் முடியாது என்று அனுப்பி வைத்தார்.

பாவப்பட்டவர்கள் முப்பது, நாற்பது பேருக்கு, ஒரு ஓட்டுக்குப் பெரிய தொகை யாக இரண்டு ரூபாய் கொடுத்தும் அவர் தோற்றுவிட்டார். எதிர்த்துப் போட்டி யிட்டவர் நல்ல பெயரெடுத்தவர் என்பதை மறந்து `சின்ன பசங்க ரூபாயைக் கொடுத்திருக்க மாட்டானுங்க’ என்று சொல்லித் திட்டினார். ஆனால், நாங்கள் கொடுத்ததுதான் உண்மை.

1967 வரைகூடப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பெரிய போட்டி இருக்காது. சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவரவே வாக்குச்சீட்டு எண்ணும் நாளின் பின் மாலைப் பொழுது வரை ஆகிவிடும். பாராளுமன்ற முடிவு தெரிய மூன்று, நான்கு நாள்கள்கூட ஆகும். இப்போதைய மின்னணு வாக்குப் பதிவில் வாக்கு எண்ணும் நாளன்றே பாராளுமன்ற முடிவுகளே தெரிந்து விடும். வண்ணப் பெட்டியில் போட்டதும் நம் மக்களே, படம் பார்த்துக் கதை சொல்வதுபோல சின்னம் வரைந்த பெட்டியில் போட்டதும் நம் மக்களே, மின்னணுவில் பொத்தானை அழுத்தி விட்டுக் கைவீசி வருவதும் நம் மக்களே! ஆனால் என்ன, தலைமுறைகள்தான் வேறு வேறு!

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT