வாழ்வு இனிது

வாழ்த்துத் தந்தி...

பாரதி திலகர்

தந்தி சேவை என ஒன்று அஞ்சலகத்தில் இருந்ததையும் சில ஆண்டுகளுக்கு முன் அது நிறுத்தப்பட்டதையும் அறிவோம்.
திருமணத்திற்கு வாழ்த்துத் தந்தி அடிக்கும் (அனுப்பும்) வழக்கம் தொண்ணூறுகள்வரை இருந்தது. கடிதத்தில் வாழ்த்துத் தெரிவித்தால், ‘நாலணா கவரில் எழுதிப் போட்டுவிட்டார்.

ஒரு வாழ்த்துத் தந்தி அடிக்கக் கூடாது?’ என்று சொல்லும் வழக்கம் இருந்தது. அதனால் திருமணம் என்றால் வாழ்த்துத் தந்திகள் குவியும். பெரும்பாலும் தந்திகள் இறப்புச் செய்தியைக் கொண்டுவந்ததால், தந்தியைக் கொண்டு வருபவரை ஒருவித பயத்துடன் பார்க்கும் வழக்கம் இருந்தது. வாழ்த்துத் தந்தியாக இருந்தால், யார் அவரை எட்டிப்பார்த்தாலும், ‘வாழ்த்துத் தந்தி’ என்று சொல்லிக்கொண்டே செல்வார்.

எங்கள் ஊரில் காலை மீன்கடை கூடும் நேரம் அஞ்சல் கொண்டு வருபவர் அந்தப் பகுதியைக் கடப்பார். அப்போது மீன்கடைக்கு யார் யார் வந்திருக்கிறார்களோ அவர்களுக்கான கடிதங்களைக் கொடுத்து விடுவார். அப்படி ஒரு நாள் என் அம்மா மீன்கடைக்குப் போய்விட்டு வந்து, ‘உனக்கு ஒரு கல்யாண கார்டு (திருமண அழைப்பிதழ்) வந்திருக்கு. மாப்பிள்ளை வீட்டு கார்டு. பெயர் திலக்’ என்றார்.

நான் அம்மியில் அரைத்துக் கொண்டிருந்ததால் அதை வாங்காமல், ‘எனக்காக இருக்காது. அப்படி யாரையும் எனக்குத் தெரியாது. அத்தான் (அக்காவின் கணவர்) சொந்தங்களாக இருக்கும்’ என்றேன்.‘அத்தான் சொந்தக்காரர் உன் பெயருக்கு ஏன் அனுப்புகிறார்? உனக்குத்தான்’ என்றார் அம்மா.

அப்போதும் ‘இல்லைம்மா, ஒருவேளை பாரத்துக்காக வந்திருக்கும்’ என்றேன். பாரத், பாரதி ஆகியவை ஏறக்குறைய ஒரே மாதிரி பெயர் என்பதால் சில நாள்கள் கடிதம் மாறிவிடும். அதற்கும் அம்மா, ‘வீட்டு எண் எல்லாம் சரியாகப் போட்டு வந்திருக்கிறது’ என்று சொல்ல, நானோ ‘எனக்குத் தெரியாது. ஒரு வாழ்த்துத் தந்தி அடித்துவிடுங்கள்’ என்றேன். நிதானமாக வேலை எல்லாம் முடித்துவிட்டு, அழைப்பிதழைத் திறந்து பார்த்தால், கள்ளிகுளம் என்று இருந்தது. என் ஊர்ப் பெயர்.

அப்படியென்றால் மணமகளுக்கு என் ஊர். ‘அது யாரப்பா நமக்குத் தெரியாத பெண்’ எனச் சொல்லிக்கொண்டே பார்த்தேன். ‘அமிர்தராஜ் மகள் பாரதி’ என்று இருந்தது. அந்த பாரதி நான்தான்! ஊரில் கணவரை ‘திலகர்’ எனவும் மும்பையில் ‘திலக்’ எனவும் அழைப்பது வழக்கம்.

அப்போது இது எனக்குத் தெரியாது. மும்பை நண்பர்களுக்கு அடித்த அழைப்பிதழ் என்பதால் அவர் அப்படி அடித்திருக்கிறார். அம்மாவிடம் சொல்ல, ‘அது சரி, உலகிலேயே தன் திருமணத்திற்கு வாழ்த்துத் தந்தி கேட்ட ஒரே ஆள் நீயாகத்தான் இருப்பாய்!’ என்று சொல்ல, வீடே சிரித்துவிட்டது.

- bhathilahar@gmail.com

SCROLL FOR NEXT