வாழ்வு இனிது

பூமியே ஒரு கிராமம்! | பாற்கடல் 23

கலாப்ரியா

இப்போதெல்லாம் சுவாரசிய மில்லாமல் செய்திகள் ஓடும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில், திடீரென்று ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று விறுவிறுப்பாக எதையாவது காட்டுவார்கள். ஒன்று தொட்டு ஒன்று என்று அனைத்து மொழி, அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பான செய்திகள் மின்னத் தொடங்கிவிடும்.

நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் சகிதம் சம்பவ இடத்தை மொய்த்து வெவ்வேறு கோணங்களில் பதிவுசெய்து காண்பிக்கத் தொடங்கிவிடுவார்கள். நொடி நேரத்தில் செய்தி உலகெங்கும் நேரில் காணும் காட்சியாகப் பரவிவிடும். காணாததற்கு, ஃபேஸ்புக், ட்விட்டர், ரீல்ஸ், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் ஒலியின் வேகத்தோடு பரவி செல்லுமிடமெல்லாம் செய்தியும் காட்சியும் தொடர்ந்துவரும்.

2004இல் சுனாமி தாக்கிய அன்று நான் நண்பர்களுடன் கன்னியாகுமரியிலிருந்து ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒருவர் மாற்றி ஒருவருக்கு அலை பேசியில் உறவினர்கள் அழைத்து, “எங்கிருக்கிறீர்கள்? பத்திரமாக இருக்கிறீர் களா, குமரியில் ராட்சசக் கடல் சீற்றமாமே, டிவியில் காட்டுகி றார்கள்” என்றெல்லாம் பதற்றமாகக் கேட்கத் தொடங்கினார்கள். அப்போதையை பட்டன் அலைபேசியில் தொலைக்காட்சியைப் பார்ப்பதாவது ஒன்றாவது.

திருநெல்வேலியில் நண்பர் லெனா குமார் வீட்டிற்குக் காரைத் திருப்பினோம். அவருக்கும் எங்கள் பயணம் பற்றித் தெரியும். பயத்தில் மூழ்கிப் போய் அருகில் உள்ள வீடுகளில் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந் தார்கள். எங்களைப் பார்த்ததும் நண்பர், “ஐயோ... தப்பிச்சீங்களே, பாருங்க இந்தக் கோரத் தாண்டவத்தை” என்றபடி அப்படியே கட்டிக்கொண்டார். மறுபடி மறுபடி காண்பித்த காட்சிகளை நாங்களும் பார்த்து விக்கித்துப் போனோம். நாங்கள் குமரியிலிருந்து கிளம்பி வரவர சுனாமி துரத்திக்கொண்டே வந்திருக்கிறது.

1964இல் தனுஷ்கோடியைத் தாக்கிய புயல் பற்றிய செய்திப் படங்கள் இரண்டு, மூன்று நாள்கள் கழித்தே பத்திரிகைளில் வெளிவந்தன. அநேக மாக இரண்டு வாரங்கள் கழித்து அப்போது திரையரங்குகளில் காட்டப்படுகிற இந்தியன் நியூஸ் ரீலில் இரண்டு, மூன்று நிமிடங்கள் காட்டினார் கள். அதுவும் அழிந்து போன ரயில் பாதை, தொடர்பின்றி நிற்கிற பாம்பன் பாலம், தலைச்சுமையாக மிஞ்சினவற்றைத் தூக்கிக் கொண்டு படகுகளில் ஏறும் ஜனங்கள் என்று மங்கலாக நினைவில் நிற்கிறது.

பிஹாரில் வெள்ளம், ஒடிசாவில் வெள்ளம் என்று இந்தியன் நியூஸ் ரீலில் ஓரிரு நிமிடங்கள் காண்பிப்பார்கள். நாட்டின் வட பகுதி பற்றி நொடிக் கணக்கி லேயே பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும். இந்தியன் நியூஸ் ரீல் என்று காண்பிக்க ஆரம்பித்ததுமே தியேட்டரில் ‘பிஹாரில் வெள்ளம்’ என்று மக்கள் குரல் கொடுப்பார்கள்.

ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் நாட்டில் திறக்கப்படுகிற பக்ராநங்கல் அணை, குந்தா மின்விசைத் திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகளை நேருவோ மத்திய அமைச்சர்களோ திறந்து வைக்கிற காட்சிகளை அதிகம் காண்பிப்பார்கள். பன்னிரண்டு நிமிடம் செய்திப் படம் ஓடினால் பதினோராவது நிமிடம் விளையாட்டுச் செய்திகள் காண்பிப் பார்கள்.

டென்னிஸ் விளையாட்டில் ராமநாதன் கிருஷ்ணன் வின்னிங் ஷாட் அடித்துவிட்டுக் கைகுலுக்குவார். அல்லது கிரிக்கெட்டில் மன்சூர் அலிகான் பட்டோடி ஒரு சிக்ஸர் அடிப்பார். எனக்கு நினைவு தெரிந்து அவர் அடிக்கிற ஒரு சிக்ஸர், பார்வையாளரான ஒரு பெண்ணின் கன்னத்தில் பட்டு அது கன்றிப் போன காட்சிக்காக மறுநாளும் ஐ.என்.ஆர். (இந்தியன் நியூஸ் ரீல்) பார்க்கப் போனோம்.

ஒரு நியூஸ் ரீலை ஒரு வாரமே காண்பிப்பார்கள். வெள்ளிக் கிழமை தோறும் மாறி விடும். சில நாள்களில் நியூஸ் ரீலே காண்பிக்க மாட்டார்கள். ஆனால், சினிமா சட்டப்படி கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும். மத்திய கள விளம்பர அலுவலர்கள் இதைக் கண்காணிக்க வேண்டும் என்று அங்கு பணியாற்றிய நண்பர் சொல்வார். செய்திகளைத் தயாரித்து வழங்கும் பிலிம்ஸ் டிவிஷன் அவ்வப்போது டாக்குமெண்டரி என்கிற பதினைந்து நிமிட ஆவணப்படங்களையும் திரையிடும். அப்படியான ஆவணப்படங்கள் சில நேரத்தில் சிறப்பாக அமைந்துவிடும்.

`தபலா கல்கத்தா’ என்று ஓர் ஆவணப் படம். படத்தில் செய்தி வாசிப்பாளரின் பின்னணிக் குரலுக்குப் பதிலாக உஸ்தாத் அல்லா ரக்காவின் தபலா இசை மட்டுமே ஒலிக்கும். அவ்வப்போது ஸிதார் இசையும் கேட்கும். பதினைந்து நிமிடங்களும் கல்கத்தாவின் பிரசித்திப் பெற்ற இடங்களையும் வீதிகளையும் தாகூர் இல்லத்தையும் ஹௌரா பாலத்தையும், காளியையும் கேமரா அற்புதமான கோணங்களில் சுற்றிச்சுற்றிக் காண்பிக்கும்.

சிறந்த ஒளிப்பதிவு, தலையாட்ட வைக்கும் தாள இசை, பிரமாதமான படம். நான், வண்ணதாசன் எல்லாரும் பார்த்தோம். மறுநாளும் போகலாம் என்று திட்டமிட்டோம். ஆனால், அங்கு ஓடிக் கொண்டிருந்த படம் துலாபாரம். மறுநாளும் அந்தச் சோகத்தைத் தாங்க முடியாதென்று விட்டுவிட்டோம்.

அதேபோல் `WE’ என்றொரு படம். அதை இந்தியாவின் கலை, பண்பாட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம் என்றே சொல்லலாம். இமயம் தொடங்கிக் குமரி வரையில், ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்கிற தொனியில் பலவிதமான பண்பாட்டு நிகழ்வுகளைக் காட்டியிருப்பார்கள். தமிழ்நாடு என்று வருகிற போது, `நம் நாடு’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் படப்பிடிப்பைக் காண்பிப்பார்கள். இது வந்தது 1970களில்.

அதேபோல நான் பார்த்த அபூர்வமான ஆவணப்படம், ஐ.என்.ஏ. என்கிற நேதாஜியின் புரட்சிப் படை பற்றியது. அதில் பல பழைய பர்மிய யுத்தங்களின் காட்சிகளைக் காண்பித்தார்கள். நேதாஜி படை வீரர்கள் மரியாதையை ஏற்று, சிலருடன் கைகுலுக்குவது போலக் காண்பிப்பார்கள். அதைக்கூட ‘இந்தியன்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒட்ட வைத்திருப்பார்கள். ஆனால், கவிஞர் புவியரசு சொன்னார், அந்த நியூஸ் ரீலைத் தடை செய்து வைத்திருக்கிறார்கள் என்று. கேட்கவே கலக்கமாக இருந்தது.

இப்படி அபூர்வமான பிலிம்ஸ் டிவிஷன் ஆவணப்படங்களில் சுமார் பத்துப் படங்களைச் சேர்த்து சனி, ஞாயிறு காலைக் காட்சியில் 1960களில் நெல்லை ராயலில் குறைந்த கட்டணத்தில் போடு வார்கள். (தரை டிக்கெட் பதினைந்து நயா பைசா). நான் தவறாது போய்விடுவேன்.

அதில் அந்தமான் தீவைப் பற்றிய வண்ணப்படம் நன்றாக இருக்கும். இப்போது இப்படியெல்லாம் ஓடியோடி செய்திப் படங்கள் பார்க்க வாய்ப்புமில்லை, வேண்டவும் வேண்டாம். திறன்பேசியிலேயே சகல செய்திகளையும் ஆவணங்களையும் பார்த்துவிடலாம், தொலைத்தொடர்பின் முன்னேற்றத்தால் பூமிதான் ஒரே கிராமம் (Global village) ஆகிவிட்டதே!

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT