வாழ்வு இனிது

காசாகும் கரி

பெ.சுப்ரமணியன்

வீண் செலவு செய்பவர்களை, ‘காசைக் கரியாக்காதே’ என்பார்கள். ஆனால், இருளர்கள் கரியைக் காசாக்கு கிறார்கள். தரைமட்ட அளவுக்கு வெட்டப்பட்ட மரங்களில் இருந்து வேர்ப்பகுதியைத் தோண்டி எடுத்து, அதை ஒழுங்குபடுத்தி கரியாக்கி விற்பனை செய்கிறார்கள். சிறிய தேநீர் கடைகள், நகை செய்பவர்கள், சிறிய உணவகங்கள், பட்டறைகள் போன்றவற்றில் மரக்கரியைத் தான் இன்றும் பயன்படுத்துகிறார்கள்.

அதனால் மரக்கரிக்குத் தேவை இருக்கிறது. வேளாண் நிலங்களிலும் நிலத்தின் ஓரப்பகுதிகளிலும் வளர்ந்து நிற்கும் மரங்களை விற்பனை செய்யும்போது, பெரும் பாலும் அதன் வேர்ப்பகுதியைத் தோண்டி எடுப்பதில்லை. அது போன்ற மரங்களின் வேர்ப்பகுதிகளை அப்புறப்படுத்தினால் போதும் என்பதற்காக நிலத்தின் உரிமையாளர்கள் அனுமதிப்பார்கள்.

அதேபோல யூகலிப்டஸ், சவுக்கு போன்ற மரங்களைத்தரைமட்டத்துடன்தான் அறுவடை செய்வார்கள். வேர்ப் பகுதியை நில உரிமையாளர்கள்தான் அப்புறப்படுத்த வேண்டும் என்பதால், மிகக் குறைந்த விலைக்கு அவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிப்பார்கள். இப்படிச் சேகரித்த மரக்கட்டைகளையும் ஏரிகள், ஓடைகளில் வளர்ந்து நிற்கும் கருவேல மரங்களையும் வெட்டி இருளர்கள் மரக்கரி தயாரிக்கின்றனர்.

கிராமங்களில் ஏரிகளின் மையப்பகுதியிலோ அல்லது கரையோரத்திலோ விறகு கட்டைகளை வட்ட வடிவில் அழகாக அடுக்கி வைத்து, அதன் மேல் ஈரத்துடன் கூடிய கரும்புத் தோகையைப் பரப்பி வைத்து, அதன் மேற்புறத்தில் களிமண்ணைப் பூசி, தீ வைக்கின்றனர். இதற்குக் கரி மூட்டம் என்று பெயர். இதற்காக ஒரு வார காலத்துக்கும் மேலாக கூடாரம் அமைத்து, தங்கிவிடுகின்றனர்.

மரக்கட்டைகள் கரியானதும் மண்ணை ஒதுக்கி வைத்து, கரிக்கட்டைகளைச் சேகரித்து, மூட்டைகட்டி விற்பனை செய்கின்றனர். அரைகுறையாகக் கருகிய கட்டைகளை மீண்டும் சேகரித்து, மீண்டும் கரி மூட்டம் போடுகின்றனர். மழைக் காலத்தைத் தவிர, மற்ற காலங்களில் இதுவே இவர்களின் பிரதான தொழிலாக உள்ளது. இருளர் இன மக்கள் இன்று வேளாண்மை, கால்நடை வளர்ப்பு எனப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் மரக்கரி தயாரிப்பதையும் முதன்மைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT