“வே அன்னா கிழக்கெ பாரும், கருகருன்னு மேகம் அடைக்க நிக்கி, கீத்துப் போல ஒண்ணு ரெண்டு மின்னலும் மின்னுது. ரெண்டு நாளு முந்தி, கிழக்கனக்கி (கிழக்கு நோக்கி) கடக்கரையாண்டி கோயிலுக்குப் போயிருந்தவக சொன்னாங்க, அங்க மழை வெளுவெளுன்னு வெளுத்திட்டாம்வே, கிழக்கு மழை அங்க பெஞ்சுதானே இங்க வரணும். இன்னைக்கி இங்கயும் மழைக்கு ஒரு கூராப்பா இருக்கு.”
“ஆமாய்யா, கருகருன்னுதான் நிக்கி ‘தெவக்க மில்லாம’ (தடங்கல் இல்லாமல்) பெஞ்சி குளம் நிரம்பிட்டா சந்தோசந்தாம்.” ``வெதை நெல்லைத்தின்னவன் வெளங்குவானாங்கிற மாதிரி இல்லாம, பசியும் பட்டினியு மாகக் கிடந்து நெல்லைப் பத்திரப் படுத்தி வச்சிருக்கோம். மழை விழுந்தா ரெண்டு ஏரு உழுது, விதைச்சு விட்டா மாரியாத்தா பாடு,”
இரண்டு விவசாயிகள் கிராமத்துப் பக்கம் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் மொழியில் வார்த்தைகளே அளவாகத் தான் இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் ஒருவருக்கு இன்னொருவர் பேசிக்கொள்வது விளங்காமலா இருக்கிறது? இது பேச்சு மொழி, பேச்சு மொழிக்கென்றே தீப்பெட்டி அளவில் ஓர் அகராதி இருக்கிறது.
ஆனால், அதுக்குள்ளே இருக்கிறது நிஜமான அக்கினிக் குஞ்சு. பொதுவாக வட்டார வழக்கு என்பது உணர்ச்சியை அப்படியே சொல்லக்கூடியதும், வார்த்தை கிடைக்காமல் திண்டாடும்போது ஒரு சின்ன வார்த்தையே விரிவான பொருளைத் தந்து உதவிக்கு வரக்கூடியதுமாக இருக்கும்.
ஆரம்பத்தில் விவசாயிகள் இருவர் பேசிக்கொள்வதை, ``ஐயா அங்கே கிழக்குத் திசையில் பார்த்தீர்களா, கரிய மேகங்கள் வானை அடைத்து நிற்கின்றன. மின்னலும் மின்னுகிறது. மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன் திருச்செந்தூருக்குப் போனவர்கள் கூறினார்கள், அங்கே நல்ல மழை பெய்தது என்று. வடகிழக்குப் பருவ மழை அங்கே பெய்துதானே இங்கே வர வேண்டும்” என்று எழுத்து மொழியில் சொல்லலாம்.
ரசிகமணி டி.கே.சி. சொல்வது போல, ‘பேச்சு மொழிக்கு மனுசங்ககூட ஒரு நெருக்கம் உண்டு.’ இலக்கணச் சுத்தமாக எழுத்து மொழியில் பேசும்போது, ஓர் அந்நியத் தன்மையும் பேச்சு வழக்கில் சொல்லும் போது, ஓர் அந்நியோன்யமும் ஏற்பட்டுவிடுவ தாகத் தோன்றுகிற கட்சி அவருடையது.
எழுத்தாளர் கி.ரா. கட்சியும்கூட இதுதான். பேச்சுமொழியின் சொற்கள், ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு, ‘எழுதாக்கிளவி’ போல காலகாலமாகப் பாமரர்கள் மத்தியில் புழங்கி வருவது. உண் மையில் அதுதான் மக்களின் மொழி. நிச்சய மாகச் சங்க காலத்தில்கூட எல்லாரும் எப்போதும் நற்றிணைத் தமிழிலோ, நல்ல குறுந்தொகைத் தமிழிலோ பேசிக்கொண்டு இருந்திருக்க மட்டார்கள்.
ஒழுங்குமிக்க ராணுவ இசைக்கும், பாடத் தெரியாத தாயின் தாலாட்டுப் பாடலுக்கும் உள்ள வித்தியாசம்போல இது. தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி ஆகியோர் மேடைகளில் பெரு முழக்கமாக முழங்காமல், சாதாரண மாகப் பேசுவது போலத்தானே பேசி, புரட்சி பண்ணினார்கள் என்று அடிக்கடிச் சொல்வார் கி.ராஜ நாராயணன்.
கி.ராவுடன் பேசிக் கொண்டிருப் பதே ஒரு சொகம். `பால் தொட்டுப் பால கறப்பதுபோல’, சுவாரசியமா ஒன்று தொட்டு மறுபேச்சு என்று சுரந்து கொண்டே இருக்கும். ஒருநாள், ``எப்பா மருமகனே நீ கேள்விப்பட்டிருக்கியா, இங்கிலாந்தில எழுதப் படிக்கத் தெரியாதவங்க இருந்தாங்கன்னு?” என்றார்.
“என்ன மாமா, உலகத்துக்கே எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்த வங்க, ஊர்ல எழுதத் தெரியாத வங்களா” என்றேன். “ஆமாப்பா, எரநூறு வருஷம் முந்தி அங்கயும் கடிதமெழுதிக் கொடுக்கறதுக்கின்னே போஸ்டாபீஸ்ல, டைப்ரைட்டர் வச்சுக்கிட்டு ஆளு இருப்பாங்களாம்.
அவங்க கிட்டப் போயி நாம் எழுத வேண்டியதைச் சொன்னா, காசு வாங்கிக்கிட்டு கடிதம் எழுதி, விலாசம் நிரப்பித் தபாலில் போடச் சொல்லிக் குடுத்திருவாங்களாம்.” “அதிகமும் பெண்கள்தான் வருவாங்க. அப்படி ஒரு பொண்ணு கடிதம் எழுதச் சொன்னாள். கடிதம் எழுதி வாசிச்சு, சரியா இருக்கான்னு கேட்டாராம். இல்லைன்னாளாம்.
திரும்பவும் சொல்லச் சொல்லி டைப் அடிச்சு வாசிச்சுக் காண்பிச்சாராம். இல்லை, சரியில்லை நான் சொன்ன மாதிரி எழுதலைன்னு சாதிச்சாளாம். அப்பத்தான் அவருக்குப் பொறி தட்டுச்சு. அவ பேச்சுமொழியில் எழுதும் படிச் சொல்லுதா. அதுதான் மொழின்னுஅவ புரிஞ்சு வச்சிருக்கான்னு, இவரு புரிஞ்சுக்கிட்டு அது போலவே எழுதிக்காண்பிச்சு இப்ப சரியான்னு கேக்கவும், ரொம்பக் கரெக்டுன்னுளாம்.”
“இந்தச் சம்பவத்தைத் தன் மக கிட்ட வந்து சொன்னாராம் அந்த ஆள். அவ இது ரொம்பப் புதுசா இருக்கே, இந்த மொழியில ஒரு கதையே எழுதாலேமேன்னாளாம். அந்த ஆளும் எழுதினாராம். அதுதான் முதல் ஆங்கில நாவலாம்.” கடிதம் எழுதற மாதிரி, கி.ரா. மாமா மொழியில் ‘காயிதம்’ எழுதற மாதிரி எழுதின முதல் நாவல் Pamela, epistolary novel by Samuel Richardson. மாமா இந்தக் கதையை என்னுடைய இலக்கிய வாழ்வின் ஐம்பதாவது ஆண்டுவிழா நிகழ்விலும் பேசினார்.
‘பால் தொட்டுப் பால் கறக்கறது’ என்கிற இந்தச் சொலவடையும் மாமா சொல்றதுதான். பால் கறக்கும் மடுவில் கொஞ்சம் எண்ணெய் தொட்டுக்கிட்டால் கறக்கறது `சுளுவா’ இருக்கும். எண்ணெய் இல்லாத நேரத்தில் பாலைக் கொஞ்சம் கையில் பீச்சிக்கிட்டுக் கறந்தாலும் எளிதாக இருக்கும்.
அது இங்கிலாந்தோ நெல்லை வட்டாரமோ அல்லது எந்த வட்டாரமோ பெண்கள் அவர்கள் மத்தியில் புழங்கும் பேச்சு மொழியில் ஆயிரம் செய்திகளைப் பரிமாறிக் கொள்வார்கள். இதை அடுக்களை மொழி என்றுகூடச் சொல்லலாம். நெல்லை வழக்கில் அடுக்களை என்றால் சமையல் செய்யும் அறை.
அடுப்படி என்றும் சொல்வார்கள். அந்தக் காலத்தில் அடுப்பு வேலைகளைத் தரையில் உட்கார்ந்துதான் பார்ப்பார்கள். அதுதான் நீளமான விறகு வைத்து எரிக்கத் ‘தோது’வாக இருக்கும். ‘தோது’ என்பது நெல்லை வட்டார மொழி. அது comfortable, convenient, easy என்று பல வார்த்தைகளால் விளக்கப் பெறுவதை ஒரே வார்த்தையில் சொல்லும்.
“எனக்கு நாளைக்கு விசேசத்துக்கு வர ’தோது’ படாதே” என்பார்கள். இதையே என்னால் விசேசத்துக்கு வர முடியாது என்று சொல்லும்போது, `முடியாது’ என்கிற வார்த்தையைப் பணிவோடு சொல்ல வேண்டியிருக்கும்.
’முடியாது’ என்று சற்றே குரல் `உசந்து’ (உயர்ந்து) தொனி வித்தியாசப்பட்டால், ‘எதிராளி’ இவன் என்ன ‘அகம்பாதம்’ (அகம்பாவம்=கர்வம்) புடிச்சவனா இருக்கானே என்று நினைக்க இடமுண்டு. ஆனால், ‘தோது’ படாது என்று சொன்னால். அடடே எனக்கு வேற வேலையிருக்கு என்னால் வரக் ‘கழியாது’ என்கிற பணிவும் சேர்ந்தே வந்துவிடும்!
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com