வாழ்வு இனிது

‘கருவேப்பிலான் கேட்’ - பெயர் வந்தது எப்படி?

அண்டனூர் சுரா

புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் ‘கரு வேப்பிலான் கேட்’ என்றோர் இடம் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வெளியேறும் அல்லது புதுக்கோட்டைக்குள் நுழையும் வாயில் இது. போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் நடை பெறும் இடமும்கூட. வேலை வாய்ப்பு அலுவலகம், ஐடிஐ, நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், சிப்காட் எனப் பல முக்கிய அலுவலகங்களுக்கு இந்த கேட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

கடைகளின் பெயர்ப்பலகைகளில் இந்த இடம் ‘கருவேப்பிளான் கேட்’ என்றும் ‘கருவேப்பிலான் கேட்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. பெயர்க் காரணம் குறித்துப் பலரிடம் விசாரித்தபோது ஒருவர், ‘இந்த ரயில்வே கேட்டில் கருவேப்பிலான் என்கிற பெயரில் ஒருவர் இருந்தார்.

அவர் ரயில் வருகையில் கேட்டைத் திறந்து மூடுவார். ஆகவே அவரது பெயரால் இந்த கேட் ‘கருவேப்பிலான் கேட்’ என்று அழைக்கப்படுகிறது” என்றார். இதை ஆராய்ந்தபோது அப்படியான ஒரு பெயர் இருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்தது. ரயில்வே கட்டுப்பாட்டில் இயங்கும் ஓரிடம் தனி ஒருவரின் பெயரால் அழைக்கப்பட வாய்ப்பில்லை.

தொடர்ந்து விசாரித்தபோது தொல்லியல் துறை சார்ந்த ஒருவர், “ஒரு காலத்தில் இந்த இடத்தில் கறிவேப்பிலை பத்தைகள் மண்டி வளர்ந்திருந்தன. அந்தப் பத்தையின் பெயரால் கறிவேப்பிலை கேட் என்று அழைக்கப்பட்டு, அது திரிந்து கருவப்பிலான் கேட் ஆகி, பிறகு கருவேப்பிலான் கேட் என்றாகிவிட்டது” என்றார்.

இந்தப் பெயர் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும் கேட் என்கிற சொல் எப்படி வந்தது? கறிவேப்பிலையின் பெயரால் இந்த இடம் அழைக்கப்படுமாயின் கறிவேப்பிலை பத்தை, கறிவேப்பிலை வாசல், கறிவேப்பிலை வாயில், கறிவேப்பிலை திறப்பு என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கும்.

இது ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயராக இருக்கவே வாய்ப்புண்டு என்று தோன்றியது. ஒரு நாள் அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்தேன். புதுக்கோட்டை - திருக்கோகர்ணம்-திருவப்பூர் கடந்துவரும் பேருந்துகள், ஒரு சிறு அரைவட்ட வளைவைக் கடந்து, திருச்சி - காரைக்குடி சாலையில் ஏறின. மேலும் அந்த இடம் தாழ்வான பகுதியாக இருந்தது. இவ்விடம் இப்போதே இவ்வளவு தாழ்வு என்றால், இந்த ரயில் பாதை அமைக் கப்பட்ட காலத்தில் இன்னும்கூடத் தாழ்வாக இருந்திருக்கும்.

இந்த இடத்தில் ஒரு பாதாளச் சுரங்கப் பாதை உள்ளது. மேலே ரயிலும் கீழே இரு சக்கர வாகனங்கள், சொகுசு வாகனங்கள் செல்லும் பாதை இது. இந்தப் பாதாளப் பாதையின் வழியேதான் அருகிலுள்ள தெருக்களுக்குச் செல்ல முடியும்.

இந்த இடத்திற்கு அருகே குடியிருந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர், “அது கருவேப்பிலான் கேட் அல்ல. Curve way below gate. அதாவது வளைவும் தாழ்வுப் பாதையும் கொண்ட திறப்பு. ‘கர்வ் வே பிலோ கேட்’ என்பதுதான் ‘கர்வேபிலோ கேட்’ என்று அழைக்கப்பட்டு, தற்போது ‘கருவேப்பிலான் கேட்’ ஆக மாறியிருக்கிறது என்றார்!

SCROLL FOR NEXT