‘விரைவில் வருகிறது’ என்று ஒரு திரைப்படத்தின் சுவரொட்டி தியேட்டரின் வெளிச்சுவரில் ஒட்டப்பட்டதுமே மக்களுக்குப் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதிலும் சம்பந்தப்பட்ட ரசிகப் பெருமக்களுக்குக் காய்ச்சலே வந்துவிடும். அந்தச் சுவரொட்டிகளில் படங்கள்கூட இருக்காது. படத்தின் பெயர் மட்டும் அழகான டிசைனில் எழுத்துகளாக இருக்கும். அந்த டிசைனையே மக்கள் கடக்கும் போதெல்லாம் நின்று பார்த்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
சமயத்தில் அந்த ‘வருகிறது' போஸ்டர் ஒட்டிய படம் குறிப்பிட்ட தியேட்டரில் வராமலேகூடப் போகும். திரையரங்கினுள் இடைவேளையின்போது படத்துடன் `வருகிறது’ ஸ்லைடும் போடுவார்கள். அதைப் பார்க்கவே ரசிகர்கள், வேறு என்ன குப்பைப்படம் ஓடிக் கொண்டிருந்தாலும் போவார்கள்.
ஸ்லைடைக் காண்பிக்கும்போது விசில் சத்தம் காதைப் பிளக்கும். போஸ்டருக்கும் ஸ்லைடுக்குமே பரபரப்புக் காட்டுகிறவர்கள், தியேட்டரில் ஸ்டில்ஸ் வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் ஓடாத குறையாகப் போய்ப் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் ஆங்கிலப் படங்களுக்குத்தான் டிரெய்லர் என்கிற முன் னோட்டப் படம் போடுவார்கள். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு, முக்கியமாக விட்டலாச்சார்யா படங்களுக்கும் டிரெய்லர் போடுவார்கள்.
அது வேடிக்கையாக இருக்கும். விட்டலாச்சார்யா விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர். `ஏல இந்தப் படமெல்லாம் இப்படித்தான் இருக்கும்’ என்று சமாதானம் சொல்லிக் கொள்வார்கள். அதெல்லாம் அதிகம் போனால் ஒரு வாரம் ஓடும். அதற்கும் ஒரு காட்சிக்கு இருநூறு ரூபாய் வசூலானால் அதிகம். அபூர்வமாக 'மாயமோதிரம்' என்கிற விட்டலாச்சார்யா படம் நன்கு ஓடியது. மதுரையின் மிகப் பெரிய தியேட்டரான 'தங்க'த்தில் நான்கு வாரங்களில், அப்போதைய திலக நடிகர்களின் படங்களைப் போல ஒரு லட்சம் வசூலானது.
அன்றெல்லாம் வசூல் என்பது இப்போதையக் காலக்கட்டத்தை ஒப்பிட்டால் மிகக் குறைவு. டிக்கெட்டுகள் விலை, மலிவோ மலிவு. 1,200 பேர் பார்க்கக்கூடிய பெரிய தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆனால் 1500 ரூபாய் வரும். இன்று ஒரு டிக்கெட்டிற்கே 250, 300 ரூபாய் வரை ஆகிறது. இன்னும் பாப்கார்ன், ஐஸ்கிரீம் வகையறாக்கள் சேர்த்தால் கேட்கவே வேண்டாம்.
சமீபத்தில் ஐந்து பேராகப் பேரன், பேத்திகளுடன் தியேட்டருக்குப் போயிருந்தேன். ஓர் ஒப்புக்கு நான் டிக்கெட்டுக்குப் பணம் தருகிறேன் என்றேன். ‘தாத்தா, ரூபாயைக் குடு’ என்றாள் ஒரு பேத்தி. நான் ஐநூறு ரூபாயை நீட்டினேன். ’பத்திரமா உண்டியலில் வச்சுக்கோ, இது பாப்கார்ன் வாங்கக்கூடக் காணாது. நாங்க ஆன்லைனில் புக் பண்ணிட்டோம்’ என்றாள். அன்றையச் செலவு 1,500 ரூபாய்.
எங்கள் காலத்தில் 300 ரூபாய் இருந்தால் பூமி டிக்கெட் என்கிற தரை டிக்கெட்டில் 1,000 படங்கள் பார்க்கலாம். ஒரு தரை டிக்கெட்டின் தமிழக சராசரி விலை 31 நயா பைசா. அதிகபட்ச டிக்கெட்டே மூன்று ரூபாய் தான் இருக்கும். அந்த மூன்று ரூபாய் டிக்கெட்டிற்கே முதல்நாள் முதல் காட்சிக்கு அப்படி ஓர் அடிபிடியான கூட்டம் இருக்கும். ஸ்லைடு பார்க்கவும் ஸ்டில்ஸ் பார்க்கவுமே முண்டியடிக்கும் கூட்டம், படம் வெளியானால் விட்டா வைக்கும்! உயர் வகுப்புகளுக்கு முன்பதிவு உண்டு.
அது கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவாகும். கூட்டம் இருக்காது. ஆகாய டிக்கெட் என்னும் உயர் வகுப்பிற்குப் போக எல்லாரிடமும் காசு இருக்காது. முண்டியடிக்காமல் படைக்குள் நுழையும் பாம்பு போல குறைந்த டிக்கெட் கவுண்டருக்குள்லாவகமாகப் புகுந்து புறப்படும் திறமையும், உடல் பலத்தில் நம்பிக்கையும் உள்ளவர்கள் டிக்கெட் பற்றிப் பரபரப்பின்றி இருப்பார்கள். கடைசி நொடியில்தான் கியூவில் புகுவார்கள்.
ஆனால், பாவப்பட்ட தெம்மாடியான ஆள்கள் காலையிலேயே போய் பூமி டிக்கெட் வரிசையில் முன்னால் நசுங்கிக் காத்திருப்பார்கள், அவர்களைப் பாலாடை போல ஒதுக்கிவிட்டு இவர்கள் டிக்கெட் எடுப்பதே ஆச்சரியமாக இருக்கும். சட்டை கூடக் கசங்காது. ஆனால், மணிக்கணக்கில் காத்திருந்து, கியூவில் மாட்டிக்கொண்டு சட்டை கசங்கி, பட்டன்களெல்லாம் பிய்ந்து வியர்வையில் குளித்து ஒரு டிக்கெட்டைக் கையில் இறுகப் பொத்திக் கொண்டு கவுண்டரைவிட்டு வெளி யேறுகிற வர்களைப் பார்க்கையில் ஒருபுறம் பரிதாபமாக இருக்கும். அவர்கள் முகத்தில் தெரியும் வெற்றிப் பெருமிதம் மறுபுறம் ஆச்சரியமாகவும் இருக்கும்.
தீபாவளி, பொங்கல் போன்ற திருநாள் காலங்களில் எல்லார் கையிலும் காசு புரளும். அப்போது உயர் வகுப்புக்கும் கூட்டம் அலைமோதும். டிக்கெட்டுகள் பிளாக்கில் தாறுமாறாக விலை ஏறும். பிரம்மாண்டத் தயாரிப்பு என்று பத்திரிகைகள் உசுப்பேத்திவிட்ட சில படங்களுக்கு முன்பதிவுக்கும் கூட்டம் அலைமோதும். எனக்குத் தெரிந்து ‘அடிமைப் பெண்', ‘சிவந்த மண்' படங்களின் உயர் வகுப்பு முன்பதி விற்கே, முதல் நாள் போல `சனக்கூட்டம் பொணக்கூட்டமாக’ இருந்தது. மதுரையில் கூட்ட நெரிசலில் ஓரிருவர் மரணமடைந்தனர்.
தமிழ்நாடெங்கும் அடிபிடி போட்டு முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு முதலாவதாக வெளிவரும் ரசிகக் கண்மணி என்ன விமர்சனம் சொல்கிறாரோ, அதை வைத்துத்தான் படம் ஓடும். அவர் அமைதியாக உதட்டைப் பிதுக்கிவிட்டால் ஓடாது. `செத்தான் எதிரி, படம் டாப் கிளாஸ், நூறு நாள் நிச்சயம்’ என்று கங்குலிக்கு முன்னுதாரணமாகக் கசங்கிய சட்டையைக் கழற்றிச் சுற்றிக்கொண்டு வந்தால் படம் ஓடோ ஓடென்று, நூறு நாள்களையோ வெள்ளி விழாவையோ எட்டும்.
இப்போது ஐம்பது, நூறு நாள்கள், வாராவாரம் போஸ்டர் என்பதெல்லாம் பொய்க்கதை. கோடி ரூபாய் வசூலை சில நாள்களிலேயே அள்ளி விடுகிறது நட்சத்திரப் படங்கள். ஃபிளெக்ஸ் போர்டு வரவால் பேனர் ஓவியர்கள் பிழைப்பும் அருகிவிட்டது. தியேட்டர்களே இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கட் அவுட் கலாச்சாரமும் அதற்குப் பாலாபிஷேகமும் தொடர்கிறது.
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com