பள்ளியில் சேரும்போது ஒரு பையில் சிலேட்டும் குச்சியும் போட்டுத் தருவார்கள். கொஞ்சம் வசதியான வீடாக இருந்தால் ஜோல்னாபை, நடுத்தர வீடுகளில் பழைய துணியில் தைத்த பை அல்லது மஞ்சள் பை என இருக்கும். மதிய உணவு என்பது ஏழைகளுக்கு மட்டும் ஒரு நாள் கோதுமை ரவை; இன்னொரு நாள் உளுந்தங்கஞ்சி என இருந்த காலக்கட்டம் அது.
தண்ணீர் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பாட்டில், தோளில் தொங்கவிடும் அமைப்பில் அது இருப்பதால் அது ‘வாட்டர் பேக்’. மதியம் சாப்பாட்டிற்குப் பெரும்பாலானோர் வீட்டிற்குப் போய்விடுவோம் என்பதால், எல்லாருக்கும் அது தேவை இருக்காது. பென்சில், நோட்டு, புத்தகம், அழிப்பான் எல்லாம் கைக்கு வருவதே மூன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான். ஆங்கிலம் அறிமுகம் ஆவதும் இந்த வகுப்பில்தான்.
பென்சில் கைப்பிடிக்க இயலாத அளவுக்குச் சிறிதாகும் வரை வேறு பென்சில் கிடைக்காது. ஒரு பென்சிலையே ஓர் ஆண்டு முழுவதும் பயன்படுத்த வேண்டும் எனப் பெற்றோர் எண்ணுவார்கள். ஆனாலும் எல்லாராலும் முடியாது. அடிக்கடித் தொலைக்கும் பிள்ளைகள் உண்டு. அவர்களுக்கு ஒரு பென்சிலையே இரண்டாக வெட்டிக் கொடுப்பார்கள். பென்சில் சீவுவதற்குப் பழைய பிளேடுதான் பயன்படும். பள்ளி என்றால் ஆசிரியரும், வீடு என்றால் பெரியவர்களும் சீவித்தருவார்கள்.
திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய பாடங்கள் மட்டுமே நோட்டில் எழுதப்படும். வீட்டுப்பாடம் போன்றவை சிலேட்டில்தான் எழுத வேண்டும். எல்லாம் காகிதச் சிக்கனம்தான். குச்சி, பென் சில், அழிப்பான் எல்லாம் கொண்டுசெல்ல சிறு தகர டப்பாவோ பிளாஸ்டிக் டப்பாவோ இருக்கும்.
ஐந்தாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும் புத்தகம் என்கிற நிலை உருவானது. சில பிள்ளைகள் தங்கள் புத்தகங்களை நல்ல நிலை யில் வைத்திருப்பார்கள். அவற்றை அடுத்து வரும் வகுப்புப் பிள்ளைகள் பாதி விலைக்கு வாங்கிக்கொள்வார்கள். அவ்வாறு கிடைக்காதவர்கள்தான், பெரும்பாலும் புதுப் புத்தகம் வாங்குவார்கள். புத்தகங்கள் அனைத்திற்கும் அட்டைப் போட வேண்டும் என்பது பள்ளியின் விதிமுறைகளுள் ஒன்று. பெரும்பாலும் செய்தித்தாளைத்தான் அட்டை போடப் பயன் படுத்துவார்கள். கட்டுரை நோட்டுகளுக்கு மட்டும் பழுப்பு அட்டை போட வேண்டும்.
கிழிந்த நோட்டுப் புத்தகங்கள் ஒட்டுவதற்கு என வேப்பமரத்தின் பிசினைப் பயன்படுத்துவோம். இதற்கென எல்லா வீடுகளிலும் ஒரு சிரட்டையில் (கொட்டாங்குச்சி) பிசின் எடுத்து வைத்திருப்போம். ஒரு துளி தண்ணீர் விட்டால், ஒட்டும் பதத்திற்கு வந்துவிடும். ஐந்தாம் வகுப்பிற்கு வரும்போதுதான் பேனா அறிமுகமாகும். ‘உழக்குப் பேனா’ எனச் சொல்லப்படும் ஃபவுண்டன் பேனாக்கள்தான் பயன்பாட்டில் இருந்தன.
அதற்கான மை பாட்டில், மை ஊற்றுவதற்கான ஃபில்லர் போன்றவற்றைச் சில வீடுகளில் வாங்கி வைத்திருப்பார்கள். சிலர் கடைகளில் சென்று அவ்வப்போது நிரப்பிக்கொள்வார்கள். பள்ளியில் வைத்து ஒரு சொட்டு, இரண்டு சொட்டு எனப் பக்கத்தில் இருக்கும் மாணவர் களிடம் கடன் வாங்கும் வழக்கமும் இருந்தது.
ஐந்தாம் வகுப்பிற்கும் மேல்தான் தேர்வுகளைத் தாளில் எழுதினோம். அதற்கான அட்டையாக, துணிக்கடையில் துணி மடக்கி வைத்திருக்கும் அட்டை அல்லது காலண்டர் அட்டையைத்தான் பயன்படுத்தினோம். உயர்நிலைப் பள்ளிக்கு வந்தபோது, சில அப்பாக்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரும் ஹீரோ, பைலட், பார்க்கர் போன்ற மை உறிஞ்சும் பேனாக்கள் நடமாடின.
பேனா எடை குறைந்த பொருள் என்பதால், டஜன் கணக்கில் கொண்டுவருவார்கள். நண்பர்களின் பிள்ளைகளுக்கும் கொடுப்பார்கள். பொன்மொழிகள், பொதுஅறிவுத் தகவல்கள், பாடல்கள் எழுதி வைத்த நோட்டுகளும் டைரிகளும் பல வீட்டில் ஆண்டாண்டு காலமாக இருக்கும். இப்போதெல்லாம் எந்த நோட்டும் படிக்கும் ஆண்டுக்குப் பின் வீடுகளில் தங்குவதில்லை. அவற்றின் ஆயுள் காலம் மிகவும் சுருங்கிவிட்டது.
- bhathilahar@gmail.com