வாழ்வு இனிது

அனைத்தும் கிடைக்கும் ‘அணைஞ்சலைட்’ கடை | பாற்கடல் 20

கலாப்ரியா

பிளஸ் 2 எட்டிப் பார்த்திராத காலம். எஸ்எஸ்எல்சி என்கிற பதினோ ராம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு மும்முரமாகப் படித்தோம். அதில் 400/600 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுவிட்டால் தொலைபேசி, தபால் துறை, வங்கிகளில் எழுத்தர் வேலை உறுதி. வெள்ளைத்தாளில் எழுதி விண்ணப்பித் தால் போதும். பகலில் சித்திரை வெயில் வாட்டினால், இரவில் வற்றிச் சாக்கடையான வாய்க்காலில் உற்பத்தியாகும் கொசுக்கள் படையெடுத்துக் கடிக்கும்.

சொறிந்து மாளாது. அப்போதுதான் ஒரு மாமா சொன்னார், “வே பூதத்தான் முக்கு ‘சிங்கக்குட்டி லேகியம் கிடைக்கும்’ கடையில் ‘ஓடோமஸ்’ன்னு புதுசா ஒரு களிம்பு விக்கறாங்க, அதை வாங்கித் தேச்சுக்கிட்டே ருன்னா கொசு கடிக்காது. நிம்மதியாகப் படிக்கலாம், கூடவே சொகமா தூக்கம் வந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை.” அந்த மாமாவுக்கு எந்தக் கடையில் எது கிடைக்கும், எங்கே விலை மலிவு என்பதெல்லாம் அத்துப்படி.

பிளாஸ்க் எந்தக் கடையில், அதன் குடுவை மட்டும் எங்கே நல்லதாகக் கிடைக்கும், நகவெட்டி, சிகரெட் லைட்டர், வெளிநாட்டு வாட்ச் எங்கெங்கே கிடைக்கும் என்பதெல்லாம் தளபாடம். அப்போது உள்நாட்டு வாட்சே கிடையாது. குழந்தைகளுக்கான பால்பவுடர், ஹார்லிக்ஸ் எல்லாம் அப்போது தட்டுப்பாடு.

மாமாவுக்கா தெரியாது, “இன்ன லெக்கில ஒரு சேட்டு கடை இருக்கு, அங்கே பிளாக்கில் கிடைக்கும் ஆனால், வில்லாள கண்டன் இல்லேன்னுருவாரு, நைசா கேக்கணும், அது மட்டுமல்ல. சேட்டுகிட்ட மின்விசிறி, எலெக்ட்ரிக் பல்பு, டார்ச்லைட்டு சகலதும் முக்கால் விலைக்குக் கிடைக்கும்” என்பார்.

மாமா சொன்ன ஓடோமஸ் வாங்க, ‘சிங்கக் குட்டி லேகியம் கிடைக்கும்’ என்று போர்டு வைத்திருக்கும் கடைக்கு ஓடினோம். அது என்ன லேகியம் என்று இன்றுவரை தெரியாது. ஆறுக்கு மூன்றடி சின்னஞ்சிறிய கடை. ஓர் ஆள் உள்ளே நிற்கலாம். இந்தச் சின்ன கடையில் என்ன இருக்கும் என்றுதான் அதைக் கடந்து செல்லும் போதெல்லாம் நினைப்போம். ஆனால், ஊரிலுள்ள பெட்டிக்கடைக்கார்கள் தங்களுக்கு வேண்டிய சகல ஷாப் சாமான்களையும் அங்கேதான் மொத்த விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிஸ்கட், சாக்லெட்டுக்குத் தேரடியில் கப்பல் ஸ்டோர்ஸும், ஸ்டவ், கண்ணாடி சாமான்கள் வடக்கு ரதவீதி இப்ராஹிம் ஸ்டோர்ஸும், எஸென்ஸ், அல்வா, கேசரி பவுடருக்குப் பீர்பாத் கடையும் பிரபலம். வாகையடி முக்கு செய்யது ஸ்டோரில் மு.வ.வின் திருக்குறள் தெளிவுரை கையடக்கப் பதிப்பு நூல் வாங்காத மாண வர்களே இருக்க மாட்டார்கள்.

அதையும் மாமா, “ஏய், மருமகனே, பத்தடி வடக்கே தள்ளிப் போனால் அதை வெளியிட்ட சைவ சித்தாந்தக் கழகமே இருக்கு, அங்கே நிறையப் புத்தகங்கள் சௌகரியமா வாங்கலாமே” என்பார். நான் பத்துப் பைசா தள்ளுபடியில் 90 காசுக்கு அங்கே திருக்குறள் வாங்கியிருக்கிறேன். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பிரபலமான தனித்தனிக் கடைகளை மாமாவே நன்கு அறிவார். அது மாமாவின் காலம்.

என் காலம் சூப்பர் மார்க்கெட் காலம். அது எட்டிப் பார்க்காத கடையநல்லூரில் மயில் அண்ணாச்சி கடை தான் சூப்பர் மார்க்கெட். தணிவான கடை. நாற்பது வாட் விளக்கு எப்போதாவது எரியும். பேரே `அணைஞ்சலைட்’ கடை. கறாரான விலை என்றாலும் கரெக்டான விலை. பேரம் பேசினால் வச்சிட்டுப் போ என்பார். ஐந்து பைசாவுக்குத் தூண்டில் முள் வாங்க ஒரு பையன் வந்திருந்தால், அவன் வியாபாரம் முடிந்துதான் அடுத்த வியாபாரத்தைப் பார்ப்பார். அடுத்தது ஆயிரம் ரூபாய் வியாபாரமானாலும் சரி.

நான் டூத் பேஸ்ட் வாங்கத்தான் முதலில் போனேன். எல்லாரும் சொன்னார்கள் அவரு ஒரு டைப்பான ஆள் என்று. நான் எக்ஸ்பயரி தேதியைச் சரிபார்த்தேன். “என் கடையில் எல்லாமே புதுசுதான், காலியாகக் காலியாகத்தான் வாங்குவேன்” என்றார் வெடுக்கென்று. “இது என் சுபாவம்” என்றதற்கு லேசாகச் சிரித்தார். சொன்ன பணத்தைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். எனக்கு அடுத்து சிகரெட் வாங்க வந்தவர், “அண்ணாச்சி சிரிச்சது முதல் தடவையா உங்ககிட்ட மட்டும்தான்” என்றார் ரகசியமாக.

அப்புறம் என்னிடம் கொஞ்சம் சுமுகமாகவே பழகினார். ஆனாலும் கண்டிப்பு போகவே போகாது. மில்லர் சைக்கிள் டைனமோ திருநெல்வேலி, தென்காசி போன்ற ஊர்களின் பெரிய சைக்கிள் கடைகளில்கூடக் கிடைக்கவில்லை. மயில் அண்ணாச்சி கடையில் கேட்டேன். “இருக்கு தாரேன், அந்த சைக்கிள் மெக்கானிக்கைக் கூட்டிட்டு வந்து சரிபார்த்து வாங்கிட்டுப் போங்க, திரும்பக் கொண்டு வந்தா வாங்க மாட்டேன்” என்றார்.

எதிர்க்கடை மெக்கானிக்கை அழைத்து வரப் பெரிய பிரிசாலமாக இருந்தது. ரொம்பக் கிராக்கி செய்தபடி வந்து, நாக்கை வயரை இணைக்கும் இடத்தில் வைத்துக்கொண்டு டைனமோவைக் கையால் சுற்றினார். லேசான ஷாக்கை உணர்ந்ததுபோல் பட்டென்று நீக்கிவிட்டு, “சரியா இருக்கு” என்றார். நெல்லையில் கிடைக்காத மில்லர் டைனமோ இங்கே கிடைக்கிறதே என்று ஆச்சரியப்பட்டேன்.

அதைவிட ஆச்சரியம் ஒருநாள் நான் ஏதோ வாங்குகையில் யாரோ பதற்றமாக வந்து, “உங்கிட்ட மாருதி 800 கார் டயர் இருக்குதா, வண்டி டயர் வெடிச்சு மெயின் ரோட்டில் நிக்கிது” என்றார். அவர் பார்வையிலும் குரலிலும், ‘இந்தக் கடையில் கார் டயரா’ என்பது போல அவநம்பிக்கை தொனித்தது. எனக்குமே இருக்காது என்றே தோன்றிற்று. மாருதி அறிமுகமான புதிது. அண்ணாச்சி மெதுவாக எழுந்து போய் ஒரு டயரையும் கூடவே ஒரு டியூபையும் எடுத்துவந்தார்.

அவர்களுக்குப் பெரிய ஆச்சரியமும் நிம்மதியும். அதை வியாபாரம் என்பதைவிட மக்கள் தேவையை உணர்ந்த சேவை என்றே சொல்ல வேண்டும். “நல்லவேளை இங்கே இல்லைன்னா இருபது கிலோ மீட்டராவது போய்த்தான் வாங்க வேண்டும்னாங்க” என்று ஐம்பது ரூபாய் அதிமாகவே தந்தார். அண்ணாச்சி மறுத்துவிட்டு, டயர் வாங்கி வைக்க வேண்டுமென்று குறிப்பதில் கவனமாயிருந்தார்.

அப்போதெல்லாம் தலைச்சுமை வியாபாரிகள்தான் வயிற்றுப்பாட்டையும் சுமந்து வாசலில் வந்து விற்பார்கள். இன்றோ வாசலுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனைக்கு நம்மையறியாமலே அடிமையாகி விட்டோம். நாற்பது வாட் விளக்கு, கோழிக்கூடு போலக் கடை, சின்ன முதலீடு, குறைந்த விலை, தன்னிறைவான வியாபாரம். ‘கையில காசு வாயில தோசை’ என்று எளிமையான பரிமாற்றங்களில் விற்கும் வாங்கும் இருவருக்கும் லாபம் கிடைத்தது. எளிமையாக வாழ்க்கை நடந்துகொண்டுதான் இருந்தது. மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள்!

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT