சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் மைல் கற்கள் மூலம் அடுத்த ஊர் எது, எவ்வளவு கி.மீ. தொலைவில் இருக்கிறது என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள முடியும். தூரத்தை அளவிடப்படும் மைல் என்கிற அளவு கைவிடப்பட்டு, கி.மீ. என்கிற அளவிலேயே கணக்கிடப்பட்டாலும் ‘மைல்கல்’ என்றே அழைக்கப்படுகிறது.
இன்று சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மைல்கற்களுக்கு ஒரு வரலாறு உண்டு. பிரிட்டன் தங்கள் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தபோது, ரோமானியர்கள் பல பெரிய கட்டுமானத் திட்டங்களைச் செய்ததால், ‘மைல்கல்’ என்கிற கருத்தை ரோமானியர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் பெற்றனர்.
சாலைகளில் தூரக் குறியீடுகளை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் ரோமானியர்கள். ரோமப் பேரரசு காலத்தில் மைல்கற்கள் முக்கியச் சாலைகளின் ஓரத்தில் அமைக்கப்பட்டு, தூரத்தைக் குறிப்பதோடு பேரரசின் அடையாளமாகவும் திகழ்ந்தது. ஆரம்பத்தில் மைல்கல் என்பது கல்லால் வடிவமைக்கப் பட்டு, அதில் எழுத்துகள் பொறிக்கப்பட்டன. பின்னர் கறுப்பு வெள்ளையில் அடுத்த ஊரின் பெயர், தூரம் எழுதப்பட்டன. இன்று சிமெண்ட்டால் வடிவமைக்கப்பட்ட மைல்கற்களே பெரும்பாலும் காணப்படுகின்றன.
மைல்கற்களைப் பற்றி அறிந்தவர்கள் அவற்றின் வண்ணங்களைக் கொண்டே அது எந்த வகை சாலை என்பதை அறிந்துகொள்வார்கள். மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு எனப் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒரு வகை சாலையைக் குறிக்கும்.
மஞ்சள் தேசிய நெடுஞ்சாலையையும், பச்சை மாநில நெடுஞ்சாலையையும், நீலம் மாவட்டச் சாலையையும் இளஞ்சிவப்பு அல்லது கறுப்பு ஊரகச் சாலையையும் குறிக்கும். இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் இருப்பிடத்தை எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்றாலும் நெடுஞ் சாலைத் துறை நிர்வாக வசதிக்காகத் தொடர்ந்து மைல்கற்களைப் பராமரித்து வருகிறது.