சைக்கிள் பழகுதல் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். சிலருக்கு அவர்களுடைய தந்தையோ அண்ணனோ கற்றுக் கொடுத்திருப்பார்கள். பெரும்பாலும் நண்பர்கள்தான் கற்றுக் கொடுப்பார்கள். 1960களில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதும் பழகுவதும் அரிது.
எனக்கு நண்பன் சுப்பிரமணியன் என்கிற பசுங்கிளிதான் பொறுமையாக அதிக நேரம் செலவழித்துக் கற்றுக் கொடுத்தான். முதல் குரு பெரிய கோபால். நான் கற்றுக்கொள்ளக் கொஞ்சம் சிரமப்பட்டேன். சிரமப்படுத்தினேன் என்பதே உண்மை. அவன், ‘போடா உனக்கு சைக்கிள் சீக்கிரம் வராது என் நேரத்தையெல்லாம் வீணடிக்கிறாய்’ என்று ஒதுங்கிக்கொண்டான்.
ஆனால், சுப்பிரமணியன் கைவிடவில்லை. ரொம்ப நாள்களுக்குச் சுப்பிரமணியன் மேல் சாய்ந்தபடியே பழகுவேன். இடுப்பை வளைக்காதே என்றால் வரவே வராது. மற்றவர்கள் என்றால், ‘நீ என்ன சரோஜாதேவியாலே, மேல சாஞ்சா பொறுத்துக்கிட்டே இருக்கறதுக்கு’ என்று இடுப்பில் சட்டென்று அடிப்பார்கள்.
சுப்பிரமணியன் அப்படி இல்லை. ‘இடுப்பை வளைக்காதே, ஹேண்டில் பாரை ஒடிக்காதே' என்று சைக்கிள் பழகுவதை அருமையாகவும் பொருத்தமாகவும் கண்ணதாசன் எழுதியிருக்கும் சினிமா பாடலைப் பாடிக் கொண்டே விளையாட்டாகச் சொல்லித் தருவான்.
எவ்வளவு தூரமென்றாலும் கூடவே ஓடிவருவான். இவ்வளவுக்கும் குரங்கு பெடல் என்கிற அரை பெடல் போட்டே, வீட்டருகே உள்ள காலி மனையிலும் பள்ளிக்கூட மைதானத்திலும், அவனே ஓட்டிக் கற்றுக் கொண்டவன்தான். ‘சைக்கிளோட்டும் போதெல்லாம் சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்தவரைநினைவு வைத்துக் கொள்கிறோமா’ – என்று ஒரு கவிதையில் எழுதியிருப்பேன்.
இந்தக் கவிதையின் மையப்புள்ளியே சுப்பிரமணியன்தான். பிற்காலங்களில் நான் சைக்கிள் பெடலில் கால் வைக்கும்போது பிரேக் பிடித்தாற்போல சுப்பிரமணியன் நினைவுக்கு வருவான். அவன் என்னைவிடச் சற்று உயரமானவன். சொல்லிக் கொடுப்பவர்கள் உயரமாக இருந்தால்தான் பழகுகிறவனைப் பிடித்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
அப்போதெல்லாம் சைக்கிள் வாடகைக்கு விடும் கடைகள் நிறைய உண்டு. ஒரு மணி நேரத்திற்கு ஐம்பது நயா பைசா வாடகை. அரை மணி நேரமென்றால் பாதி. எங்கள் ஊரில் சித்ரா ஒலிபெருக்கி, சைக்கிள் கடை ஒன்று உண்டு. அங்கே 18 அங்குலம் சின்ன சைக்கிள் இரண்டு, எட்டாம் நம்பர், ஒன்பதாம் நம்பர் என்று உண்டு.
இரண்டிற்கும் எப்போதும் கிராக்கிதான். முன்பே பேரை எழுதி வைத்து, காத்துக் கிடக்க வேண்டும். வாடகைக்கு எடுத்த பின்னும் மணி ஆகிவிட்டதா என்று கவலையாக இருக்கும். அடிக்கொருதரம் கடைக்கே போய், ‘அண்ணாச்சி டைம் ஆயிட்டா’ என்று கேட்போம். சைக்கிள் கிடைக்காத விடுமுறை நாள்களில் ஏற்கெனவே வாடகைக்கு எடுத்தவனிடம் நைசாக `உள் வாடகை’க்குப் பேசி நேரத்தை நீட்டிக்கச் சொல்லி ஓட்டுவோம்.
அது என்னவோ ஒலிபெருக்கிக் கடையோடு சைக்கிள் வாடகைக் கடைகளும் சேர்ந்தே இருக்கும். ஒலிபெருக்கிக்குக் கல்யாண சீசன் இல்லையென்றால் ஓட்டமே இருக்காது. சைக்கிள் வாடகையில்தான் வியாபாரம் ஓடும். சைக்கிளைக் கீழே போட்டு, பழுதாகி விட்டால் நைசாக வைத்துவிட்டு வந்துவிடுவோம். அடுத்தாற்போல எடுப்பவன் தலையில் விடியும். சிலர் சைக்கிளை சகல பரிசோதனைகளையும் செய்தே எடுப்பார்கள்.
ஆனாலும் அகப்பட்டவனுக்கு அட்டமத்துல சனி என்பதுபோல, சரி பார்க்காதவன் தெண்டம் அழவும் நேரிடும். இதனால் சைக்கிள் கடைக்காரர்கள் பழகுவதற்காக என்றால் சைக்கிள் தர மாட்டார்கள். பெடல் மிதித்து ஏறிக் காண்பிக்க வேண்டும். எனக்கு நன்றாகப் பழகிய பின்னும், பெடல் மிதித்து ஏற வராது.
பெடல் அச்சை மிதித்தே ஏறுவேன். அதனால் சுப்பிரமணியன் மட்டும் போய் எடுத்துவந்து சொல்லித் தருவான். அவனிடமும் உனக்கு எதுக்கு சின்ன சைக்கிள் என்று சந்தேகமாகக் கேட்பார்கள். `இதுதான் அண்ணாச்சி மோட்டார் பைக் மாதிரி ஓட்டலாம்’ என்பான். நான் நன்றாக ஓட்டுவதைப் பார்த்த பின் அப்பா எனக்கு 18 அங்குல சைக்கிள் ஒன்று வாங்கித் தந்தார். கைக் கூச்சம்விட்டு நன்கு பழகிய பின், தினமும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க குறுக்குத்துறைக்குப் போய்விடுவோம்.
சனி, ஞாயிறு எப்போது வரும் என்று காத்திருப்போம். ஆளுக்கொரு சைக்கிளை எடுத்துக்கொண்டு சுத்தமல்லி, மருதூர் அணைக்கட்டுகள், திருனாங்கோயில் என்கிற திருவேங்கடநாதபுரம் என்று சைக்கிளில் கிளம்பிவிடுவோம். அங்கேயும் போய் ஆற்றிலும் அணைக்கட்டிலும் ஆட்டம் போட்டுத் திரும்புவோம். நீச்சல் மட்டும் எப்படியோ நானே படித்துவிட்டேன்.
இவையெல்லாம் போரடித்த பின், கொஞ்சங்கொஞ்சமாகத் தூரத்தைக் கூட்டி சுற்றுவட்டாரத்தில் கிருஷ்ணாபுரம், ஆழ்வார் திருநகரி என்று கிளம்பிவிடுவோம். அதுவும் போரடித்த பின், மணிமுத்தாறு அல்லது குற்றாலத்திற்குப் போவது என்று பிளான் போட்டோம். மணிமுத்தாறு உறுதியானது.
அப்போதும் சின்ன சைக்கிள் வேண்டாம், பெரிய சைக்கிள் எடுத்து வந்தால் வா என்றார்கள். எங்கள் வீட்டில் 22” பெரிய சைக்கிளும் உண்டு. பெரிய சைக்கிள் கால் சரியாக எட்டாது. கடைசியில் ஆள்கள் அதிகரித்ததில், நான் இரண்டு சைக்கிள்களையும் எடுத்துவரச் சம்மதித்தார்கள்.
என் அப்பா சைக்கிளை முழுவதுமாகக் கழட்டி ஓவர்ஹால் செய்து மாட்டிவிடுவார். வீட்டிலிருந்து காற்றடிக்கும் பம்பும் சைக்கிள் பழுது நீக்கும் கருவிகளையும் எடுத்துக்கொண்டு அதிகாலையில் கிளம்பிவிட்டோம். போகிற வழியெல்லாம் சைக்கிள் ஓட்டும் பாடல்களும் குதிரையில் செல்லும் பாடல்களுமாக முழங்கிக்கொண்டு பத்துப் பேர் போனோம்.
ஒரு சைக்கிள் வழியில் பழுதாகிவிட்டது. ஒழுங்காக சைக்கிள் கடையில் ரிப்பேர் செய்திருக்கலாம், `எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் நான்’ என்று ஒருவன் ரிப்பேர் பார்க்க ஆரம்பித்து சைக்கிள் செயினே அறுந்துவிட்டது. இன்னொரு சைக்கிளில் டபுள்ஸ் ஏறி அந்த சைக்கிளைப் பிடித்துக்கொண்டே போனோம். அதுவும் அந்தக் காலத்தில் டபுள்ஸ் போகக் கூடாது.
இறங்கி ஏறிப் போனதில் தாமதமாகி விட்டது. ஆனால், எண்பது அடி ஆழத் தடாகத்தில் மாறிமாறி டைவ் அடித்து அருவியில் கண் சிவக்க ஆட்டம் போட்டதில், எல்லாம் மறந்து போய் நேரம் போனதே தெரியவில்லை. வீடு திரும்புகையில் முன்னிரவாகி விட்டது. மொத்தத் தெருவும் பிள்ளைகளைக் காணோமே என்று தேடிக்கொண்டிருந்தது. பெரிய சாதனையைச் செய்ததற்கு வரவேற்பு இருக்குமென்று எதிர்பார்த்தால், அடிதான் விழுந்தது. அடி விழாமல் தப்பித்தவர்களே சாகசம் செய்தவர்கள்!
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com