பொதுவாக, திருநெல்வேலியில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்துவ தென்றால் டவுன் காந்தி சதுக்கம் பகுதியையே அரசியல் கட்சியினர் விரும்புவார்கள். அங்கே மக்கள் புழக்கம் அதிகம். விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தி பேசிய இடம் அது என்பார்கள். பொதுவாக, ஆள்பவருக்கு எதிரான பேச்சைக் கேட்ப தற்கே மக்கள் அதிகமும் விரும்புவார்கள். ஏனென்றால் ஆட்சியில் இருப்பவர் மீது ஆட்சி சார்ந்து பெரும்பாலோருக்கு ஓர் ஒவ்வாமை வந்துவிடும். இதை incumbency syndrome என்று அழைப்பார்கள். எங்கள் பதின் வயதில் எல்லாரையும்போல அப்போது எதிர்க் கட்சியினைச் சேர்ந்த அண்ணா, கலைஞர் பேச்சுகள் மீது ஈர்ப்பு இருந்ததில் வியப்பில்லை.
1960களில் வட்டத்திற்கு வட்டம் அரசியல் கூட்டம் நடைபெறும். அதில் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பேச்சாளர்கள் பேசுவார்கள். அவர்கள் குறைந்த ஊதியமாக, 50 ரூபாயே பெற்றுக் கொள்வார்கள். அதிலும் ஓர் ஊரில் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டங்கள் ஏற்பாடு செய்தால் இன்னும் குறைவாகவே பெற்றுக்கொள்வார்கள்.
தங்கும் இடம், பயணப்படி தனி. 1966இல் எங்கள் பகுதியில் கூட்டம் நடத்த கலைஞரை அணுகியபோது தேர்தல் நிதியாக 200 ரூபாயும் கோவில்பட்டியிலிருந்து காருக்கு பெட்ரோல் செலவும் கேட்டார்கள். அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 பைசா. பெட்ரோலுக்கு மூன்று ரூபாய்கூட வராது. ஆசை ஈடேறவில்லை.
அந்த வட்டாரக் கூட்டங்களுக்கு அனுமதிக்கும் இடங்கள், சில நேரம் சாக்கடைகளின் அருகேகூட இருக்கும். கொசுக்கள் சொந்தம் விசாரித்துக் கொண்டே இருக்கும். அதையெல்லாம் கண்டுகொள்ளாது அரசியல் ஆர்வத் துடன் தரையில் அமர்ந்து கேட் போம். எல்லாம் `தானாகச் சேர்ந்த கூட்டம்’. ‘விடுதலைப் போராட்டக் காலத்தில் தெருமுனைக் கூட்டங்கள் ஆங்கங்கே நடக்கும். அவற்றை மகாகவி பாரதியார்தான் பிரபலப்படுத்தினாராம்.
மைதானத்தில் நடக்கிற பொதுக் கூட்டங்கள் பின்னரே பிரபலமாகின’ என்பார் நண்பர் கடற்கரய். மேடைப் பேச்சை ஒரு நிகழ்த்துக்கலை போல மாற்றியவர் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா. ‘சிவம் பேசினால் செத்த சவம்கூட எழுந்து கேட்கும்’ என்பது, அப்போதைய வெகு மக்கள் பாராட்டு. சிவாவும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியும் கனல் கக்கும் பேச்சாளர்கள்.
இவர்களுக்கு முன்னோடி சக்கரைச் செட்டியார் என்பார்கள். சென்னைத் தொழி லாளர் சங்கத்தைத் தோற்றுவிப்பதில் முதன்மையாக விளங்கியவர் சக்கரைச் செட்டியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றபோது, கல்லூரி மாணவர் தலைவராகவும் செயல் பட்டார்.
அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு, கிறித்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிட வருகை புரிந்தார். இறுதியில் மாணவர் தலைவ ரான சக்கரை செட்டியார் நன்றியுரை ஆற்றினார். அவரது ஆங்கில உரையைக் கேட்ட கர்சன் மிகவும் பாராட்டினார் என்று குறிப்பிடுகிறார் தயாளன்.
வ.உ.சி., சிவா ஆகியோரின் பேச்சுகளைக் குறித்து முதலில் ஆங்கிலேய அரசுக்கு அளிக்கப் பட்ட அறிக்கைகளில், ‘அவர்கள் ஒன்றும் அவ்வளவு ஆபத்தான பேச்சாளர்கள் இல்லை, மக்கள் மத்தியில் அவர்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது’ என்றே உளவுத் துறை குறிப்புகள் எழுதிற்றாம்.
ஆனால், கோரல் மில் தொழிலாளர்கள் மனதை அவர்கள் தொடும்படிப் பேசி, வேலைநிறுத்தத்தில் வெற்றிகரமாக ஈடுபடுத்தி, உக்கிரமாகப் போராடியதைக் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் ஆடிப் போயிற்றாம். வ.உ.சியும் சிவாவும் ஏற்றி வைத்த அந்தத் தொழிலாளர் ஒற்றுமை நெருப்பை திரு.வி.க. பின்னாளில் முன்னெடுத்துச் சென்றார்.
அவரது பேச்சுகளும் தமிழ் மேடைப்பேச்சு வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணின. பின்னாளில், ‘கவிதைகள் வழங்கு பாரதியைப் போல், மேடையில் முழங்கு திரு.வி.க. போல்’ என்று திரைப்படப் பாடல்கூட வந்தது. அதில் முதலில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் பாடல் பதிவானது. தணிக்கைத் துறை ‘அண்ணா’வை அனுமதிக்கவில்லை. அதனால் சினிமா ரசிகர் களுக்கும் திரு.வி.க. அறிமுகமானார்.
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர்கள் பலர். ராமன் வாயால் அனுமனைச் ‘சொல்லின் செல்வன்’ என்றழைக்கிறார் கம்பர். அதனால் தான் அவனும் சீதையைக் கண்டறிந்ததைச் சொல்லும் போது, ‘சீதையைக் கண்டேன்…’ என்று ஆரம்பித்து ராமனைப் பரபரப்புக்கு உள்ளாக்காமல், ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லி ராமன் வயிற்றில் பாலை வார்க்கிறான். தமிழ் மேடைப் பேச்சில் ‘சொல்லின் செல்வர்’ பட்டங்களைப் பெற்ற வர்களில் அந்நாளில் ரா.பி.சேதுப்பிள்ளை முக்கியமானவர்.
நாவலர் என்று அழைக்கப் பட்டவர்கள் சோமசுந்தர பாரதியாரும் நெடுஞ்செழியனும். நெடுஞ் செழியன் பேச்சுகள் முதலில் அறிவு ஜீவிகளுக்கானதாகவே இருந்தனவாம். அதைப் பாமரர்களும் கேட்டு இலக்கிய நயத்தை உணரத்தக்க வகையில் பேச அறிவுரை சொன்னவர் பெரியார் என்று அண்ணா குறிப்பிடுகிறார்.
இது முக்கியமான விஷ யம். பேசுகிற பேச்சு எல்லாரையும் சென்றடைய வேண்டும். `சென்று பற்றுதல்’ என்று பேச்சுக் கலையைச் சொல்வார்கள். தோழர் ஜீவா அப்படி ஒரு சிறந்த பேச்சாளர்.மேடையில் வீசுகிற மெல்லிய பூங்காற்று போலவும் அனற்காற்று போலவும் பேசுவது ஒரு தனிக் கலை. ஆனால், சொல் வன்மை ஒருவனை அதிகாரத்திலும் அமர்த்தும், அதிலிருந்து கீழேயும் இறக்கும். என் அம்மா அடிக்கடி ஒரு சொலவடை சொல்வார், ‘பல்லக்கு ஏறுவதும் வாயாலே; பல்லுடை படுவதும் வாயாலே’ என்று. ஹிட்லர் அதற்கோர் உதாரணம்.
சீஸர் கொலை செய்யப் பட்டதும் குழப்பம், கொந் தளிப்புடன் நிற்கும் மக்கள் மத்தியில் மரண அஞ்சலி செலுத்த வந்த ஆண்டனி, சதிகாரர்களின் செயலை உடனே அநியாயம் என்று கூறாமல், ‘நான் சீஸரைக் குழியிலிட்டுப் புதைக்கவே வந்திருக் கிறேன், புகழ்ந்து பேச அல்ல’ என்று ஆரம்பித்து மக்களைத் தன்வசப்படுத்தி, அப்புறம் சதிகாரர்களுக்கு எதிராக அவர்களையே திருப்பிய பிரபலமான பேச்சு இன்றளவும் புகழப்படுகிறது.
1863இல் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ஆபிரகாம் லிங்கன் கெட்டிஸ்பர்க் நகரில் பேசிய பேச்சின் இறுதி வரிகளான, ‘மக்களால், மக்களுக்காக, மக்களினால் உண் டாக்கப் படுவதே ஜனநாயகம்’ என்கிற வார்த்தைகளே இன்றளவும் ஜனநாயகத்திற்கான சிறந்த வரையறையாக விளங்கிவருகிறது.
இந்தியா விடுதலை பெற்ற தருணத்தில் நாடாளுமன்றத்தில் நேரு பேசிய உரையும் வரலாற்றில் இடம்பெற்ற ஒன்று. எல்லாச் சிறந்த பேச்சாளர்களும் பேசி முடித்த பின் நான் நன்றாகப் பேசினேனா என்று கேட்பதை நான் கண்டிருக்கிறேன். அதில் அவர் களுக்குத் திருப்தி வருவதே இல்லை. சிலருக்குப் பேச்சு வருவதே இல்லை.
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com