வாழ்வு இனிது

புளியமர நினைவுகள்...

பாரதி திலகர்

சமையலின் ஓர் அங்கம் புளி. புளியமரங்களுக்கு ஓர் ஆண்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் போதும். அதன் பிறகு ஆண்டுக் கணக்கில் வாழும். இதனால் முதல் ஆண்டு மட்டும் அருகில் இருக்கும் தோட்டங்கள், குளங்களில் இருந்து தண்ணீரைப் பெற்று, ஊற்றி வளர்ப்பார்கள். வறட்சியை நன்கு தாங்கும். புளியமரத்தின் சிறு கம்பைப் ‘புளிய விளார்’ என்பார்கள்.

தோட்டத்தில் கிணறு வைத்திருந்தவர்கள் பல்வேறு பயிர்களை விளைவிப்பார்கள். கிணறு இல்லாத நிலம் வைத்திருப்பவர்கள் வறட்சியைத் தாங்கக்கூடிய புளியமரங்களைத் தங்கள் விளைகளில் வைத்தார்கள். மழைத் தண்ணீர் பூமிக்குள் இறங்கி, மரங்களுக்குப் பலன் கொடுக்கும் என்பதால், மழைக்காலத்தில் மண்ணை உழுது, பயறுகளை விதைப்பார்கள். புளி பழுத்த பின் குடும்பமே புளி உலுப்பப் புறப்பட்டுவிடும்.

ஒருவர் புளியமரத்தைக் கொக்கியைக் கொண்டு அசைக்க அசைக்க (உலுப்புதல்), கீழே விழும் புளியம்பழங்களை அனைவரும் பொறுக்க வேண்டும். பிறகு புளியம்பழங்களின் ஓடுகளை நீக்கிக் காய வைத்து, உள்ளிருக்கும் கொட்டை களை நீக்கி, ஓராண்டுக்குச் சேமித்து வைப்பார்கள். தங்கள் தேவைக்குப் போக, அதிகமாக இருந்தால் விற்றுவிடுவார்கள்.

மதியத்துக்கு மேல் பெண்கள் குழுமி, கதை பேசிக் கொண்டே அனைத்து வேலைகளையும் செய்வார்கள். செய்யும் வேலைகளுக்கு ஏற்ப, புளியைப் பெற்றுக்கொள்வார்கள். புளியை வாங்குவதற்கு மட்டுமல்ல, புளியங்கொட்டையை வாங்குவதற்குக்கூட வணிகர்கள் வருவார்கள். மாட்டுத் தீவனம், சாயம் போன்றவற்றைத் தயாரிக்க புளியங்கொட்டை பயன்படும். சிறார்கள் புளியமரத்தின் இளம் தளிர்கள், பூக்கள், பிஞ்சுகள் போன்றவற்றைப் பறித்து, கருப்பட்டி சேர்த்தும் உப்பு சேர்த்தும் சாப்பிடுவார்கள்.

புளி உலுப்பும் பருவத்துக்கு வரும் முன், ‘ஓர் புளி’ எனும் ஒரு பருவம் உண்டு. உள்ளே பச்சையாக இருக்கும், ஓடு கழன்று வரும் பருவம். அதை அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். கொதிக்கும் பதநீரில் சேர்த்துச் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். சிலர் அந்தப் பருவத்துப் புளியை அப்படியே குழம்பில் போடுவார்கள். புளியங்கொட்டையின் துவர்ப்புச் சுவை குழம்பில் இறங்கி ருசியைக் கூட்டும்.

புளியங்கொட்டையை வறுத்துத் தோலை நீக்கி வாயில் போட்டால், மணமும் சுவையும் பிரமாதமாக இருக்கும். சிலர் வறுத்த புளியங்கொட்டைகளை ஊற வைத்தும் சாப் பிடுவார்கள். புளியங்கொட்டை களை வைத்து பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளையும் விளையாடுவார்கள்.

SCROLL FOR NEXT