வாழ்வு இனிது

வானகமே இளவெயிலே.. | பாற்கடல் 17

கலாப்ரியா

அது தகரம் வேய்ந்த தாழ்வாரம். தகரத்திற்குக் கீழாகப் பிரப்பந்தட்டி என்கிற மூங்கிலால் செய்த தட்டி அடித்துக் கோடைகாலத்தில்கூட அந்த இடம் குளிர்ச்சியோடு இருக்கும். தோட்டத்துக் காற்றும் துணைக்கு வீசும். அதன் வடமேற்கு மூலையில் நல்ல வெள்ளைக்கல்லில் வடித்த ஓர் ஆட்டுரல் பதித்திருக்கும். சாப்பாட்டுக் கடையெல்லாம் முடிந்த ஓய்வான மதிய வேளையில் அதில்தான் வளவுப் பெண்கள் மாவரைப்பார்கள்.

அப்படி யாராவது மாவரைத்தால் அவரை நெருங்கி, அல்லது நடுவில் வட்டமாக மற்ற பெண்கள் அமர்ந்துகொண்டு வீட்டுக்கதை, தெருக்கதை, ஊர்க்கதை, சினிமாகதை எல்லாம் பேசுவார்கள். ‘ஊட்டுக்குள்ள இருக்கிற ஊசக் குமரிக்குத்தான் ஊர்க்கதை எல்லாம் தெரியும்’ என்று சொலவடை சொல்கிற மாதிரி சகல விஷயங்களையும் பேசு வார்கள். அவ்வப்போது பொதுவில் அரைத்த மருதாணியை ஒருவருக்கு இன்னொருவர் வைத்துக்கொண்டே பேசுவார்கள். மருதாணி பறித்து வருவது என் வேலை.

ஆனந்தவிகடனோ, கல்கியோ ஏதேனும் ஒரு பத்திரிகையை அக்காக் கள் யாராவது படிக்க, மற்றவர்கள் கேட்டுக்கொண்டு மிருப்பார்கள். ஆலவாய் அழகன், ராவ் பகதூர் சிங்காரம் என்று தொடர் கதையை வாசித்துக் கேட்க ஆவலாகக் குழுமி உட்கார்வார்கள். வார, மாதப் பத்திரிகைகள் அனைத்தும் ‘சுழலும் படிப்பகம்’ என்கிற சர்குலேட்டிங் லைப்ரரி மூலம், மாதம் மூன்று ரூபாய் சந்தாவில் வரும். நான் எப்போதாவது ஒன்றிரண்டு கதைகளை வாசிப்பேன். அதிலும் ஏதாவது வயதுக்கு மீறின படமுள்ள கதைகளாக இருந்தால், ஜாடையாகச் சொல்லி என்னைத் தவிர்த்து விடுவார்கள்.

கோடைக்காலம் வந்துவிட்டால் கூழ்வற்றல், வடகம் போடுவதற்கான யோசனையையும் சேர்த்தே அழைத்து வரும். கூழ்வற்றல் போடுவதென்றால் அதற்கு அரிசியை ஊறப்போட்டு மாவரைத்துக் கூழ் காய்ச்சுவார்கள். வெங்காய வடகம் போடுவதென்றால் நல்ல உள்ளியாக (சின்ன வெங்காயம்) வாங்கி, அதை அரிந்து, வடைக்கு அரைப்பதுபோல உளுந்தமாவு அரைத்து, சீரகம் கடுகு, பூண்டு எனச் சேர்மானங்களுடன் அரிந்த வெங் காயத்தைச் சேர்த்துப் பிசைந்து, முதல் நாளே அல்லது `பிரம்ம முகூர்த்தத்தில்’ தயாரித்து வைத்துக்கொள்வார்கள். வெங்காயம் அரிவதற்குக் கூட்டாகச் சேர்ந்துகொள்வார்கள்.

அவரவர் வீட்டு, பழகிய அரிவாள்மனையைக் கொண்டு வந்து தாழ்வாரத்தில் அமர்ந்து அரிவார்கள். அரியும்போது பழகியப் பெண்களுக்குப் புது வெங்காய மென்றாலும் கண்ணீர் வராது. புதிதாக வெங்காயம் வெட்டுபவர்களுக்குக் கண்ணீர் வராமலிருக்க ஒரு வெங்காயத்தை அரிவாள்மனையின் முனையில் சொருகி வைப்பார்கள்.

ஒரு கோடையில் போடுவதுதான் வருடம் முழுவதும் பயன்படும். அதனால் மகிழ்ச்சியாகவே செய்வார் கள். சில வீடுகளில் மகள் வீட்டிற்குத் தருவதற்கும் சேர்த்துப் போடுவார்கள். அதிலும் எங்கள் அக்காவைக் கட்டிக் கொடுத்தது தென்காசி. அங்கே குரங்கு தொல்லை யால் வற்றல் போடுவது சிரமம். ஆனாலும் அங்கேயும் வற்றல் போடத் தான் செய்வார்கள். ஒரு தென்காசிப் பெரியம்மா, ‘பூனை இருக்கிற வீட்டில தான் எலி பேரன் பேத்தி எடுக்குதுங்கிற கதையா, நாங்களும் வற்றல் எல்லாம் போட்டு காவல் இருந்துக்கிடுவோம்’ என்பார்.

கூழ்வற்றலுக்கோ வடகத்திற்கோ கல் உரலில் அரைக்கும் போதும் வேலையைப் பங்கு வைத்துக் கொள்வார்கள். அதிகாலைப் பொழுதில் தட்டட்டியில் (மொட்டை மாடி) பழைய வேட்டியை விரித்து, சுற்றி உட்கார்ந்து கொண்டு ஒரு கொண்டாட்ட மனநிலையோடு வற்றல் இடுவார்கள். வற்றல் இடுவதற்கான வசதியான, விசாலமான மொட்டை மாடி சில வீடுகளிலேயே இருக்கும். அந்த வீட்டில் நைச்சியமாகப் பேசி, அனுமதி வாங்கிக்கொள்வார்கள்.

எங்கள் வீட்டில் மொட்டை மாடிக்குப் படிகள் கிடையாது. ஏணி வைத்தே ஏற வேண்டும். திடீரென்று மழை வந்தால் படபடவென்று ஏறி எடுக்க முடியாது. அதனால் ஆச்சி ஒருவரின் பக்கத்து வீட்டு தட்டட்டியில் இடுவார் அம்மா. அந்த ஆச்சிக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அதனால் அம்மா கேட்டால் `ரெட்டை ரெடி’யாகச் சம்மதித்துவிடுவார். அங்கே ஆச்சியும் தாத்தாவும் இரண்டு பேர்தான்.

ஆச்சி வற்றல் வடகமெல்லாம் போட மாட்டார். அம்மா போடுவதில் கொஞ்சத்தைக் கொடுப்பார். அதுவே அவருக்குத் தேவைக்கு மேல் வரும். ஆசையும் படமாட்டார். காணாததற்கு ஆச்சி கிழமைக்கொரு விரதமிருப்பார். விரத நாள்களில் வற்றல் பொரிக்க மாட்டார். அது பழைய சோற்றுக்கு ஒப்பானது என்பார். காகம் கொத்தாமலிருக்க பழைய கறுப்புத்துணி, பெரும்பாலும் கிழிந்த குடைத்துணியை ஒரு கம்பில் சுற்றிநட்டு வைப்போம். காக்கா அருகே கூட வராது.

அல்லது வற்றல் மேல், அகலக் கண்கள் உள்ள ஒரு நூல் வலை விரிப்போம். அது திருச் செந்தூரில்தான் கிடைக்கும். யாராவது வைகாசி விசாகத்திற்குப் போகிறவர்களிடம் சொல்லி அனுப்பி அம்மா வாங்கி வைத்திருப்பார். அதை இரவல் கேட்டால் கொடுக்க மாட்டார். அப்பா, ‘தாராளம் தண்ணி பட்ட பாடு’ தூக்கிக் கொடுத்துவிடுவார். அதனால் அம்மா இரவலுக்கென்றே ஒரு கிழிந்த வலை வைத்திருப்பார்.

அம்மா எவ்வளவோ சொத்துடன் வந்தவர். எல்லாவற் றையும் கொடுத்துவிட்டார். இந்த அரிவாள்மனை, கூழ் வற்றல் வலை, முறுக்குப் பிழிகிற உழக்கு இவற்றை இரவலே தர மாட்டார். நாங்கள் கேலியாக, ‘யானையே போய்ட்டு... தொறட்டியை ஒளிச்சு வச்சு என்னம்மா செய்யப் போறே’ என்போம். அவருக்குக் கல்யாண வீட்டில் விரிக்கிற, ஐம்பது அறுபது பேர் வசதியாக உட்கார்கிற `பெரீய்ய’ ஜமுக்காளம், சாப்பிடும்போது அமர்கிற பந்திப்பாய், ஏன் பத்துப் `பழு’, பன்னிரண்டு பழு (படிகள்) உள்ள ஏணியெல்லாம் கூடச் சீர் செனத்தியாக வந்தவை தான். எல்லாமே எங்கள் அப்பா இரவல் கொடுத்துக் கிழிந்தும் உடைந்தும் திரும்பிவந்தன அல்லது வரவே இல்லை. ஏனென்று ஒரு வார்த்தை கூடக் கேட்க மாட்டார் அம்மா.

வற்றல் காய்ந்த பிற்பாடு வேட்டியின் பின்புறம் லேசாகத் தண்ணீர் தெளித்து சேதமில்லாமல் பிய்த்து எடுக்கும்போதும் பெண்கள் கூட்டாகச் சேர்ந்துகொள்வார்கள். இப்போது சொல்கிறோமே கம்யூனிட்டி கிச்சன் என்று அதுபோல அன்றே ஒன்று சேர்ந்து வடகம், வற்றலிடும் பழக்கம் இருந்தது. வேம்பும் வாகையும் இலுப்பம்பூவும் மணம் வீச, நீலவானக் கூரையின் கீழ், மரச் செறிவிலிருந்து அக்காகுருவி சங்கீதம் இசைக்க, கோடை இளவெயிலில் மொட்டை மாடியில் ஒற்றுமையாக வற்றல் இடும் சுகமெல்லாம் இப்போதைய அடுக்கக, விரைவு வாழ்வில் சாத்தியமே இல்லையோ!

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT