தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக 1967இல் அரசு சார்பாகப்பரிசுச் சீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. சற்றேறக்குறைய இதே காலக் கட்டத்தில் கேரள அரசு சார்பிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டது. அதுவே முன்னோடி. ஒரு லட்சம் முதல் பரிசு என்றதும் வாயைப் பிளக்காதவர்களே கிடையாது.
மில் அதிபர்கள், பஸ், தியேட்டர் முதலாளிகள்தான் லட்சத்தில் புழங்குவார்கள். திருநெல்வேலி யின் மிகப்பெரிய தியேட்டர் கட்டுவதற்கே அப்போது ஐந்து லட்சம்தான் ஆனது என்பார்கள். அதை அண்ணாந்து பார்த்தவர்கள் எல்லாரும், ‘சும்மாவா, அஞ்சு லட்சத்தை முழுங்கிட்டு நிக்கு தாம்லே” என்று வியந்தார்கள்.
பரிசுச் சீட்டு அறிமுகமானதும் மக்களிடையே அதுவே பரவலான பேசுபொருளாக இருந்தது. அதிலும் முதல் குலுக்கலின்போது அநேக மாக நிறைய பேர் அது என்னது என்று பார்த்து விடுவோமே என்று வாங்கினார்கள். அந்த ஒரு ரூபாய் இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று நேரமும் ஒருவர் ஓட்டலில் சிக்கன மாகச் சாப்பிட்டுப் பசியாறி விடலாம்.
முதல் குலுக்கலின் போது, ‘முதல் பரிசு யாருக்கு? இன்று லாட்டரி சீட்டுக் குலுக்கல்’ என்று பிரபல நாளிதழ்களில் எட்டுப் பத்தி அகலத்துக்குச் செய்திகள் வந்தன. ‘விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு’ என்கிற வாசகத்தோடு லாட்டரி அறிமுகமானது.
அதற்கு முன்னரும் சில கடைகளில் கல்கத்தா லாட்டரி டிக்கெட்டுகள் கிடைக்கும். அது ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும் லாட்டரி என்று நினைவு. அப்பாவின் சிநேகிதர் ஒருவர் தன் கடையில் விற்பார். அதற்கு மணி ஆர்டரில் பணம் அனுப்பவும் விண்ணப்பப் படிவம் நிரப்பி, தபாலில் விலாசம் எழுதவும் என்னைத் தேடுவார். ஐந்து அல்லது ஆறு டிக்கெட் வாங்கி விற்பார்.
ஒருமுறை வாங்கிய சீட்டுகள் விற்கவில்லை. அந்தச் சீட்டுகளுக்குப் பரிசு விழுந்திருக்கிறதா என்று அவருக்கு ரிசல்ட் வந்த தபாலில் தேடிப் பார்த்துவிட்டு, ”சரி, போ தர்ம காரியத்துக்குப் போய்ட்டுப் போகுது” என்றார். ஆனால், ஒருநாள்கடை வியாபாரத்தில் கிடைக்கிற லாபமே பத்து, இருபது ரூபாய்க் குள்தான் இருக்கும். இப்போது பன்னாட்டு நிறுவனங்களில் சாதாரணமாக லட்ச ரூபாய் ஊதியம் வாங்குகிறார்கள். அப்படித்தான் மக்களும், ‘விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு’ என்று நினைத்து, பரிசுச்சீட்டு வாங்கினார்கள். முதல் குலுக் கலில் அவ்வளவும் விற்று விட்டது.
ஆனால் அடுத்த குலுக்கலில் பாதிகூட விற்கவில்லை. அரசுக் கருவூலத்தில்தான் டிக்கெட்டை வாங்க வேண்டும். அதை விற்ப தற்குப் பெருமுயற்சி எடுத்தார்கள். அரசு ஒப்பந்தக்காரர் களிடமெல்லாம் கட்டாயப்படுத்தி விற்றதாக ஆவலாதி வந்தது. ஆனால், இரண் டாவதோ மூன்றாவதோ குலுக்கலில் ஒரு கைவண்டித் தொழிலாளிக்கு ஒரு லட்சம் விழுந்து விட்டது. கேரளத்திலும் கட்டிடத் தொழிலாளிக்கு விழுந்தது. அடுத்த மாதமே சீட்டு விற்பனை வேக மெடுத்துவிட்டது.
அதிகம் வாங்கியவர்களில் ஏழைத் தொழிலாளர்கள் தான் அதிகம். எங்கள் பகுதியில் பிரபலமான சமையல் தொழிலாளி ஒருவர். மிகவும் ருசியாகச் சமைப்பார். அதிக மான சம்பளம் வாங்கக் கூடியவர். அவர் குலுக்கல் தினத்தி லெல்லாம் மாலைமுரசு விசேஷப் பதிப்பை வாங்கி வைத்துக்கொண்டு, தெருமுனையில் உள்ள சுடலை மாடன் கோயிலில் உட்கார்ந்து விடுவார். யாராவது படித்த ஆள்கள் வந்தால் விடமாட்டார்.
குறைந்தது இருபது டிக்கெட்டாவது வாங்குவார். “நல்லா பாருங்க தம்பி” என்று பதற்றமாகச் சொல்லிக் கொண்டே இருப்பார். இருபதாவது டிக்கெட்டை நெருங்கும்போது, “நல்லா பாருடே” என்று கோபத்தில் கத்துவார். அவருக்கு ஒரே ஒரு முறை நூறுரூபாய் மட்டும் விழுந்தது. நாளா வட்டத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிப் பெருத்த நட்டத்துக்கும் வறுமைக் கும் உள்ளானார். சமையலில் ருசியும் பறிபோயிற்று.
கருவூலத்தில் விற்க முடியாத அளவு கூட்டம் பெருத்து, முகவர்கள் மூலம் விற்பனை ஆரம்பித்தது அரசு. முகவர்களும் முதலில் சில்லறை வியாபாரிகளிடம் கொடுத்து விற்ற வர்கள், ஒரு கட்டத்தில் தாங்களே விற்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கும் சிபாரிசும் பிரிமியத் தொகையும்கூடக் கேட்டார்கள். அதிகப் பரிசுத்தொகையுடன் பலவரிசைகளும் பல மாநில லாட்டரி களும் படையெடுத்தன. மாதம் ஒருமுறை என்பதையும் தாண்டி பொங்கல், தீபாவளி கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்புக் குலுக்கல் நடைபெற்றது.
பரிசுத் தொகையும் விலையும் கூடியதும் கூட்டணி சேர்ந்து கொண்டு டிக்கெட் வாங்கினார்கள். அலுவலகம், பள்ளிக்கூடங்கள், நிறுவனங்களில் பணிபுரிவோர் எல்லாரும் கூட்டணி சேர்ந்து வாங்கி அதிர்ஷ்டத்தைச் சோதித்தார்கள். அதிர்ஷ்டத்திற்காக அந்தக்கூட்டணியை மாற்றக்கூடச் செய் வார்கள்.
கடைகளிலேயே கூட்டணி டிக்கெட் விற்றார்கள். நான் பரிசுச்சீட்டு வாங்க மாட்டேன். எங்கள் அலு வலகத்தில் இயங்கி வந்த கூட்டணி ஒன்றில் என்னைச் சேர்க்கப் பிரம்மப் பிரயத்தனப்பட்டார்கள். அவர்கள் ஆசைக்காக ஒரேஒரு முறை இணைந்தேன். வழக்கம் போலக் கூவிவிட்டது. ‘விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட..’ என்று அதற்கப்புறம் என்னைக் கேட்கவுமில்லை, சேரவு மில்லை.
நான் சபரிமலை செல்கிற குழு, பல கோயில்களுக்கும் போய்வரும். அதனால் என்னிடம் பல ஊர்களிலும் கிடைக்கும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வரக் கேட்பார்கள். “நான் ஏதாவது கோயில் உண்டியலில் போட்டுவிடுவேன்” என்று சொல்லித்தவிர்க்கப் பார்ப்பேன், விட மாட்டார்கள். எங்கள் குழுவில் வரும் பல ஐயப்ப சாமிகளும் அங்கங்கே கோயில்கள் முன்னால் விற்கும் டிக்கெட்டுகளைச் சாமி கும்பிட்ட கையோடு வாங்குவார்கள்.
அவர்களிடம் கொடுத்து நானும் வாங்கி வந்து அலுவலகக் கூட்டணியினரிடம் கொடுப்பேன். கோயிலுக்குப் போகாவிட்டாலும் யோகம் இருந்தால் வீட்டுக்கே அதிர்ஷ்டம் தேடி வரும் என்று சொல்லிக் காட்டிய பின்னரே கொடுப்பேன். கோயில் பிரசாதத்தை விட லாட்டரி டிக்கெட்டுகளை ரொம்பப் பவ்யமாக வாங்குவார்கள்.
இப்படிக் கூட்டணி நடத்தியதில் தலைவராக இருந்த நண்பர் கடைசியில் பணியை விட்டே நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் மூட்டை மூட்டையாக லாட்டரி டிக்கெட்டுகள் இருந்ததாகச் செய்தி வந்தது. எல்லாரும் அதிர்ந்து போனோம். சுரண்டல் லாட்டரியில் சொத்துகளை இழந்தவர்கள்கூட உண்டு. பலரின் வாழ்க்கையில் விளையாடிய லாட்டரிச் சீட்டை 2003இல் ஒழித்துக் கட்டினார்கள். ஆனால், ஆசையை யாரால் ஒழிக்க முடியும்!
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com