வீடு கட்டும்போது கடைசி அறை என்பது அடுப்பு கொண்ட அடுப்பங்கரை (அடுக்களை) தான். மேடை ஒன்று அமைத்து, அதில் இரட்டை அடுப்புகளைப் பதிப்பார்கள். ஓர் அடுப்பு தனியாக இருக்கும். இன்னோர் அடுப்பு உள்ளுக்குள் பாலம் கொண்ட இரட்டை அடுப்பாக இருக்கும். அதற்கு இன்னொரு பெயர் கொடி அடுப்பு. தாய்ச் செடியிலிருந்து கொடி போன்று சிறிய அடுப்புக்குத் தீ போவதால் அந்தப் பெயர்.
அந்தச் சிறிய அடுப்புக்கு என விறகு வைக்கும் வழியெல்லாம் கிடையாது. இப்படிக் கணவன், மனைவி, ஒரு குழந்தை என இப்போதைய சிறு குடும்பம்போல் அந்த மேடை இருக்கும். இந்த அமைப்பிற்கு மேசையடுப்பு என்று பெயர். சில வீடு களில் அடுப்புக்கும் மேலே புகைபோக்கி இருக்கும். பிற்காலத்தில் நேர்த்தியான புகைபோக்கி அமைப்பதற் கான வழிமுறைகள் வந்தன. வீட்டினுள் சிறிதும் புகை வராமல் முழுவதும் மேலே போய்விடும்.
ஆனால் அந்த அடுப்பு களைப் பயன்படுத்துவார் களா, என்றால் இல்லை. ஏனென்றால் வீட்டினுள் கரிப்பிடிக்குமே எனச் சிலரின் சமையல் வெளியே போய்விடும். மேசையடுப்பு என்றால், நன்றாகத் தரித்த நீளத்தில் குறைந்த விறகுகளைத்தான் வைக்க இயலும்.
மேடையைவிட்டு, விறகு வெளியில் வரும் நீளத்திலிருந்தால், எரியும் விறகு கீழே விழுந்து நம்மைப் பதம்பார்க்கும். இதற்கென ஒரு சுவரை ஆதாரமாகக் கொண்டு ஒரு சாய்வு அறை வீட்டின் பின்பகுதியில் முளைக்கும். புகை வெளியில் போகும் விதமாக ஏறக்குறைய திறந்த வெளியில் அது அமைக்கப்படும்.
சிலர் மேடை போடுவதுமுண்டு; தரையில் அடுப்புகளைப் பதிப்பதுமுண்டு. சிலர் அந்தச் சுவர் கரிப்பிடிக்கக் கூடாதெனத் தனியாக ஓர் அடுப்பை வாங்கித் தற்காலிகமாக எங்கு நிழல் விழுகிறதோ அங்கு வைத்துச் சமைப்பார்கள். பிற்காலத்தில் இதற்கென இரும்பு அடுப்புகள் வந்தன. மூன்று குமிழ் வைத்த சட்டி போலிருக்கும். அதன் அடியில் ஓட்டை இருக்கும். சாம்பல் அந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்துவிடும். வெந்நீர் போடுவது பெரும்பாலும் இவ்வாறான அடுப்புகளில்தான்.
அரசு, புகையில்லாச் சமையலறைத் திட்டத்தில் இந்த முறையை அறிமுகப்படுத்தியது. கரிப்பிடிக்காத சமையலறையாக இருந்தது. அடுப்பு பற்றவைப்பது, எரிவதைத் தக்கவைப்பது எல்லாம் பெரிய கலை. விறகு அடுப்பின் இன்னொரு சவால் கரிப்பிடித்த பாத்திரத்தைத் தேய்ப்பது.
அடுப்பு சாம்பலைக் கரைத்து பானையின் அடிப்பகுதியில் பூசினாலும், பாத்திரம் தேய்க்கும்போது அதன் சிரமம் தெரியும். விறகின் தன்மைக்கேற்ப கரிப்பிடிக்கும் அளவும் கூடும் குறையும். தென்னை ஓலை போன்றவை பயன்படுத்தினால், உணவு புகை வாடையடிக்கும். கொட்டாங்கச்சி போன்றவை எரித்தால் பாத்திரம் விரைவில் சேதமாகும் என இதில் பல நுட்பங்கள் உண்டு.
காலையில் எழுந்ததும், அடுப்பைச் சுத்தம் செய்வது, கோலம் போடுவது, சமையலைத் தொடங்குமுன் தொட்டு வணங்குவது எனக் கடவுளுக்கு நிகராக அடுப்பு பார்க்கப்பட்டது. நெருப்பு ஊதுகுழல் என்பது சீதனமாகக் கொடுக்கப்பட்டது. கிராமங்களில் விறகு வணிகம் உண்டு என்றாலும், பெருவாரியான மக்கள், தாங்களே காடுகளில் போய் விறகு எடுப்பது, வீடுகளில் நிற்கும் மரங்களின் கிளைகளைப் பயன்படுத்துவது எனச் சிக்கனம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதற்கெனவே வீடுகளில் பூவரசு, வேம்பு போன்ற மரங்களை வளர்ப்பார்கள். மாற்று எரிபொருளால் பெண்கள் புகையிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் இணைத்தே பார்க்க வேண்டியுள்ளது. தூசு பட்டு கண் சேதமானது; புகை பட்டு நுரையீரல் சேதமானது எல்லாம் இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது.
- bhathilahar@gmail.com