லட்ச ரூபாய் என்ப தெல்லாம் அந்தக் காலத்தில் கற்பனை செய்ய முடியாதது. லட்ச ரூபாய்க்குச் சொத்து இருந்தால் லட்சாதிபதி. 1950 வாக்கில் ஒரு கிராம் தங்கம் 9 ரூபாய். அது 10 ரூபாய் ஆன போது தங்கம் விலை கிடு கிடு உயர்வு என்று நாளிதழ்களில் செய்தி வந்தது. இன்று கிராம் எட்டாயிரத்தைத் தொட்ட போதும் அதே வாசகங்களைத்தான் நாளிதழ்கள் உபயோகிக்கின்றன.
நாளிதழ்களே சாதாரணர்களுக்கு அன்றைக்குச் செய்திகள் வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தன. லட்சாதிபதிகளின் வீட்டில்தான் ரேடியோ இருக்கும். அது அந்தஸ்தின் சின்னம். அதன் பாதுகாப்பும் வீட்டுப் பெரிய ஆண்களிடமே இருக்கும். குழந்தைகள், பெண்களை அதன் பக்கமே போகவிட மாட்டார்கள். ஷாக் அடித்துவிடும் என்பார்கள். உண்மையில் அனுமதி கிடையாதென்றே சொல்ல வேண்டும். சில வீடுகளில் செல்லம் கொடுத்து வளர்க்கும் பெண்களுக்கு ரேடியோ கேட்க மட்டும் அனுமதி உண்டு.
உண்மையில் ரேடியோ வெல்லாம் வைக்கவே பெண்களுக்குக் கற்றுத்தரப்படவில்லை. எங்கள் வீட்டில் சின்ன பிள்ளை யானாலும் எனக்கு எல்லாம் விதிவிலக்கு. என் பெரிய அக்காவுக்கு சங்கீதம் பிடிக்கும். கொஞ்ச காலம் பாட்டுப் படித்தார். ஆர்மோனியம் வாசிப்பார். ஆனால், `மதராஸ்’ வானொலி வைக்கத் தெரியாது.
“ஏல, மெட்ராஸ் ஸ்டேஷன் வச்சுக்குடுத்துட்டுப் போலே, ஏழரை மணிக்கு ராதா ஜெயலட்சுமி `ராகம் தானம் பல்லவி’ இருக்குலே” என்பார். “நான் வைக்கறேன், ஆனா, திருச்சி ஸ்டேஷன்ல சினிமா பாட்டு எட்டு மணிக்குப் போடும்போது மாத்திருவேன்” என்பேன். முதலில் மறுத்தாலும் ,“சரி சரி அரை மணிநேரமாவது கேட்கிறேன் வை, அதற்குள் அப்பா வந்திருவாங்க பாரு” என்பார். அப்பாவும் கர்னாடக சங்கீதத்தைப் பிரியமாகக் கேட்பார்.
அகில இந்திய வானொலி சார்பாக ‘வானொலி’ என்றொரு மாதமிருமுறை பத்திரிகை வெளிவரும். அதில் சென்னை வானொலியை ‘மதராஸ்’ என்றே குறிப்பிடுவார்கள். `மதராஸ்’ வானொலி குறுகிய அலைவரிசை, தென் கோடியில் அவ்வளவு நன்றாகக் கேட்காது. அடிக்கடி முள்ளைச் சீர் செய்ய வேண்டும்.
அதுவே அக்காவுக்கு வராது. மாறாகத் திருச்சி மத்திய அலைவரிசை, தெளிவாகக் கணீரென்று கேட்கும். அப்புறம் 1964 வாக்கில் திருநெல்வேலி வானொலி நிலையம் வந்த பின் ரேடியோ சத்தம் அலறும். ஆனால், திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சிகளையே எடுத்து ரிலே யாக ஒலிபரப்புவார்கள்.
அப்போதெல்லாம் வானொலியில் ஒலி பரப்பினால் மட்டுமே, இலவசமாகப் பாடல்கள் கேட்க முடியும். அல்லது திருமணம் போன்ற நிகழ்ச்சி களில் ஒலி பெருக்கியில் போட வேண்டும். எது வானாலும் ‘காற்றில் மிதக்கும் ஒலிகளிலே, கடலில் தவழும் அலைகளிலே...’ என்று அழகான பாடல்கள் ஒலித்து காற்றை நிரப்பும்போது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். எங்கு ஒலித்தாலும் நின்று கேட்டுவிட்டுப் போவோம்.
`மதராஸ்’ திருச்சி வானொலிகளில், வாரம் ஒருமுறையோ இருமுறையோ அரை மணிநேரம்தான் திரைப்படப் பாடல் களை ஒலிபரப்புவார்கள். திரைப்படப் பாடல் ஒலிபரப்பினால் அந்தப் படத் தயாரிப்பாளருக்கு ஐம்பது பைசாவோ ஒரு ரூபாயோ கட்டணம் செலுத்த வேண்டும்.
அவர்களும் தயாரிப்பாளர் சங்கத்தில் இணைந்திருக்க வேண்டும். இல்லை யெனில் ஒலிபரப்பவே மாட்டார்கள். அதுவே அந்தக் காலத்தில் பெரிய தொகை. என்னுடைய நண்பர் நாராயணன் கணேசன் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார்.
அவருக்கு மாத ஊதியம் இருநூறு ரூபாய்தான். அவர்தான் இந்தத் தகவல்கள் எல்லாம் சொல்வார். இலங்கை வானொலியில் ஒரு பாட்டுக்கு ஐம்பது காசு என்று நினைவு. அதையே செலுத்த முடியவில்லை என்று அவர்கள் இருபத்தி நான்கு மணி நேரத்தில் இரண்டாவது முறை யாக ஒலிபரப்பினால் மட்டுமே ஐம்பது காசு என்று மாற்றி விட்டார்கள். அப்படி ஒலிபரப்பாமல் பார்த்துக் கொள்வார் கள்.
1985 வரை ரேடியோவுக்கு லைசென்ஸ் எடுக்க வேண்டும். Broadcast Receiver Licence (B.R.L) Fee என்று பெயர். ஆண்டுக்கு 15 ரூபாய் தபால் அலுவல கத்தில் கட்டி லைசென்ஸ் பெற வேண்டும். அதற்கொரு பாஸ்புக் போலத் தருவார்கள். ரேடியோ இன்ஸ்பெக்டர்கள் சோதனைக்கு வரும்போது அதைக் காண்பிக்க வேண்டும். டீ கடையில் டீ குடிக்க கிளாஸ் இருக்கிறதோ இல்லையோ ரேடியோ கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும் கரகரப்பாக எதையாவது 24 மணிநேரமும் அலறிக்கொண்டே இருக்கும்.
கொஞ்சம் சத்தமாக ரேடியோ வைத்தால் அப்பா, “இது என்ன வீடா இல்லை டீ கடையா” என்று சத்தம் போடுவார். டீ கடையில் முக்கியமாகச் செய்திகள் கேட்கப் பெரும் கூட்டம் சேரும். அதுவும் தேர்தல் செய்தி என்றால் கேட்கவே வேண்டாம். காதைத் தீட்டிக்கொண்டு அமைதியாகக் குழுமிவிடுவார்கள். எதிர்பார்த்த வெற்றி என்றால் செய்தியைச் சொல்லி முடிக்கும் முன் ஹோவென்று மகிழ்ச்சிக் கூச்சல் எழும்பும். “ஏய், இருங்கப்பா வாக்குகள் எவ்வளவுன்னு கேட்போம்” என்பதற் கெல்லாம் காது கொடுக்கவே மாட்டார்கள்.
1967 தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருந்த மாலையிலிருந்து டீ கடைகள் முன்பு செய்தி சொல்லும் நேரத்திலெல்லாம் கூட்டம் அப்பிக் கொண்டிருந்தது. அன்று இரவு கடைசித் தமிழ்ச் செய்தி சொல்லும் நேரம். செய்தித்தாள் சிறப்புப் பதிப்பெல்லாம் இனிமேல் வராது. மறைந்த முதல்வர் எம்ஜி.ஆர் தொகுதி பற்றிய செய்தி வரவில்லை. தொலைபேசிகளெல்லாம் பரவலாக இல்லாத காலம். டீ கடை முன் ஆவலாகக் குழுமினோம்.
எதையெல் லாமோ சொல்கிறார்கள் பரங்கிமலைத் தொகுதி பற்றிச் சொல்லவில்லை. கடைசியாகச் சொல்ல ஆரம்பித்தார்கள், “நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பரங்கிமலைத் தொகுதி முடிவு தெரிய வந்துள்ளது.” கேட்டுக் கொண்டிருப்ப வர்கள் ஒருவருக்கு இன்னொருவர், “ஏ, சத்தம் போடாதீங்க அமைதி, அமைதி” என்று கூறிக்கொண்டு தானும் அமைதியாக இருந்தார்கள்.
செய்தி வாசிப்பாளர், “பரங்கிமலைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதி 26,432 வாக்குகள் பெற்று…” என்று ஒரு விநாடி நிறுத்தினார், இங்கே அநேகம் பேருக்கு மூச்சே நின்றுவிட்டது. “…. தோல்வியைத் தழுவினார்” என்றதும் `ஹேய்’ என்று ஆரவாரக் கூச்சலும் கரவொலியும் பஜாரையே கலக்கியது. தொடர்ந்து, “தி.மு.க சார்பில் போட்டியிட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் 54,106 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்” என்பதை எல்லாம் கவனிக்கத் தயாரில்லை.
அப்படிச் சாதாரண மக்களின் கலாரசனையையும், அரசியல் சமுதாயத் தேவைகளையும் நிறைவேற்றியது அந்தக் கால வானொலி. தொலைக்காட்சி, அலைபேசி, இணைய சேவை, ஓ.டி.டி என்று தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி யடைந்துவிட்ட இன்றைக்கும் பண்பலை வானொலி, விரும்பிக் கேட்கும் சாதாரணர்களை மகிழ்வித்துக் கொண்டு தானிருக்கிறது.
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com