வாழ்வு இனிது

கிணறுகள் எங்கே?

செய்திப்பிரிவு

அன்றைய கிராமங்களில் கிணறுகள்தான் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தன. சிறு கிராமத்திலும் குறைந்தது மூன்று கிணறுகளாவது இருக்கும். இவற்றில் ஒரு கிணற்றின் நீரைக் குடிநீருக்கும் பிற கிணற்றின் நீரை இதர உபயோகத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஏனென்றால் ஒவ்வொரு கிணற்று நீரின் சுவையும் வித்தியாசமாகவே இருக்கும்.

கிராமத்தில் உள்ள கிணறுகள் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் இருக்கும். ஒவ்வொரு கிணற்றுக்கும் ஒரு பெயர் உண்டு. மக்களால் அமைக்கப்பட்ட கிணறு என்றால், அது அமைந்திருக்கும் கோயில், தெரு, திசையின் பெயருடன் அழைக்கப்படும். தனிநபரால் அமைக்கப்பட்ட கிணறு என்றால், அவர் பெயரில் அழைக்கப்படும்.

சில கிணறுகள் ஏரி, கண்மாய், குளம் போன்றவற்றுக்குள்ளும் அமைக்கப்பட்டிருக்கும். கனமழையின்போது இந்தக் கிணறுகள் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். கோடைக் காலத்தில் இந்தக் கிணறுகளில் தண்ணீர் இருக்கும். மக்களுக்கு உதவியாக இருக்கும். அந்தக் காலத்தில் கிணற்று நீரே முக்கியமான குடிநீர் ஆதாரமாக இருந்ததால், கிணற்றைப் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைத்திருந்தார்கள். ஆண்டுக்கு ஒருமுறை அனைவரும் சேர்ந்து கிணற்றைத் தூர்வாருவார்கள்.

சதுரம், வட்டம் போன்ற வடிவங்களில் கிணறுகள் அமைக்கப் பட்டாலும் வட்ட வடிவக் கிணறுகளே அதிகமாக இருந்தன. கிணற்றைச் சுற்றி வட்ட வடிவில் தளம் அமைக்கப்பட்டு, வழிந்தோடும் நீர் ஓரிடத்துக்குச் சென்று வெளியேறும் வகையில் சாய்தளமாக அமைக்கப்பட்டிருக்கும்.

பலரும் இங்கேயே குளிப்பார்கள், துணிகளைத் துவைப்பார்கள். அதனால் கிணற்றின் சுவரில் எதிரெதிர் திசையில் இரண்டு பக்கங்களிலும் தூண்கள் போன்ற அமைப்பை உருவாக்கி, அதன் மேல் கிடைமட்டமாக இரும்புக் குழாயைப் பொருத்தி, இரண்டு உருளைகளைத் தொங்கவிட்டிருப்பார்கள். அவரவர் வீட்டிலிருந்து வாளியையும் கயிற்றையும் கொண்டு சென்று, தண்ணீரை இறைத்து வந்தனர்.

கிணற்றடியிலிருந்து வீட்டுக்குத் தலையில் ஒரு பானை, இடுப்பில் ஒரு குடம் என்று பெண்கள் தண்ணீரை எடுத்து வருவார்கள். நாளடைவில் வீடுகளுக்கே குடிநீர்க் குழாய்கள் வந்துவிட்டதால், கிணற்றின் பயன்பாடு குறைந்துவிட்டது. இன்று கிணறுகளைத் தேடத்தான் வேண்டியிருக்கிறது.

- பெ.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT