‘எதுக்குத்தான் லீவுன்னு விடுதாங்களோ, ஏழு நாளும் பள்ளிக்கூடம் வச்சா என்ன’ என்று காலையிலிருந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டு எரிச்சலும் கோபமுமாக வந்தது. அவர்களைக் கடிந்துகொள்கை யில் மனைவி சொன்னார், ‘பிள்ளைகள் அடிச்சிக்கிடும் கூடிக்கிடும்.’
அப்படிச் சொல்லிவிட்டுப் போகிற போக்கில், கூடவே சொலவடை ஒன்றையும் உதிர்த்துவிட்டுப் போனார், ‘ஒரு தொழுவத்து மாடு முட்டிக்கிடவும் செய்யும், நக்கிக்கிடவும் செய்யும்.’ அவர் சொன்னது போலவே கொஞ்ச நேரத்திலேயே குழந்தைகள் மறுபடி சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன.
எப்போதுமே எனக்குத் தீராத ஆச்சரியத்தை உண்டாக்குபவை சொலவடைகள். அவை மீது அப்படி ஓர் ஈர்ப்பை உண்டு பண்ணியவர் என் அம்மா. அந்த ஈர்ப்பின் கனல் அணையாமல் காத்துக்கொள்ள உதவுவது என் மனைவி. `சொலவடைகள் என்பது பலருடைய ஞான அனுபவம்.
ஒருவருடைய தேர்ந்தெடுத்த கெட்டிக்கார வார்த்தைகளில் வெளிப்படுவது’ (One man’s wit and all men’s wisdom) என்று ஜான் ரஸ்ஸல் என்னும் அறிஞர் கூறுவார். சொலவடைகளில் ஒரு நகைச்சுவை உணர்வும் சபைக்கு அஞ்சாமல், சம்பந்தப்பட்டவருக்கும் வலிக்காமல் கேலியாகச் சொல்லி, செய்த தவறை உணர்த்தும் வார்த்தைக் கூறுகளும்கூட இருக்கும்.
‘குமரிப் பெண் தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது’ என்று ஒரு சொலவடை சொல்வார் அம்மா. எவ்வளவு நுணுக்கமாக அவதானித்து வைத்திருக்கிறார். கொட்டாவி ஒரு தொற்று நோய்போல. ஒரு வகுப்பறையில் ஒரு மாணவனோ மாணவியோ கொட்டாவி விட்டால் அடுத்து ஒருவர், அடுத்து ஒருவர் என்று தொடர்ந்து ஆவென்று வகுப்பையே விழுங்கிவிடும் கொட்டாவி. சில ஆசிரியர்களுக்கு யாராவது கொட் டாவி விட்டாலே பழியாகக் கோபம் வரும். ஆனால், அவரே கொட்டாவி விடுவார்.
அப்போதெல்லாம், ‘மூளைக்கு ஆக்சிஜன் தேவைப்படும் போதுதான் கொட்டாவி வரும்டா’ என்று சமாளிப்பார். ஒரு மனிதனின் குணம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதைச் சொல்ல, ‘மூக்குச் சிந்தறதுக்குள்ள முந்நூறு குணம்’ என்பார்கள். இதையொட்டி தாத்தா ஒரு கதை சொல்வார். ‘கர்ணன், மாமனார் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தானாம். அப்போது ஒருவன் வந்து தானம் கேட்டானாம், அப்படியே எச்சிற்
கையால் கழுத்தில் கிடக்கும் நகைகளைக் கழட்டிக் கொடுத் தானாம். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், ‘மகா ராஜா, கையைக் கழுவி விட்டுக் கொடுத்திருக்கலாமே’ என்றாராம். ‘அதுக்குள்ள மனசு மாறிவிடும். நான் கொடுக்க நினைக்கும் அளவும் குறைந்துவிடும்’ என்றானாம் கர்ணன். யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு உண்மை என்று புலப்படும்.
கர்ணன் ஏன் நான்கு பேர் வருகிற இடத்தில் சாப்பிட்டான் என்பதற்கு கி.ராஜநாராயணன் சொல்லும் காரணம் அதைவிடச் சுவையானது. கர்ணன் தீண்டத்தகாத தேரோட்டி மகன் என்று கருதி அவனுக்கு அவன் மனைவி வீட்டில் விருந்து மண்டபத்தில் சாப்பாடு போட மாட்டார்களாம். `அப்படி ஏன் அவன் மனைவி வீட்டிற்குப் போக வேண்டு’ மென்று கேட்டால் கி.ரா, ‘எப்பா கதைக்குக் கண்ணு, மூக்கு கிடையாது’ என்பார்.
சொலவடைகள் வேறு பழ மொழிகள் வேறு என்பார், `சொல வடைகளும் சொன்னவர்களும்’ என்கிற அற்புதமான நூலைத் தொகுத்து வழங்கியுள்ள பேராசிரியர் ச.மாடசாமி. கி.ராஜநாராயணனும் அப்படித்தான் சொல்வார். கி.ரா. சொலவடையைச் ‘சொலவம்’ என்பார். ‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ என்பது பழமொழி. ‘காசுக்கு ஒரு சேலை வித்தாலும் நாய்க்கு உண்டுமா ஒருமுழத் துணி’ இது சொலவடை. சொலவடைகளின் அழகே அதன் பாமரத்தனமான சொல்லாடல்தான்.
சொலவடைகள் நீதி மொழிகள்போல ஞானத்தின் பிழிவுமில்லை வழிகாட்டி மரமு மில்லை, அவை சரியும் தவறுமான அனுபவங்களின் சிதறல்கள் என்று குறிப்பிடு வார் பேராசிரியர் மாடசாமி. ‘பரதேசம் சுத்தி வந்தாலும் ஊரு பார்க்குமா உள்ளாடை’ (கோவணம் என்பது நாட்டுப்புற வழக்கு) என்பது எப்படி ஓர் அழகான அனுபவச் சிதறல். ‘அவசரத்தில அண்டாவுக்குள்ளகூட கை போகாது’ என்று அடிக்கடி என் மனைவி அவசரப்படுகிற போது காரியம் தவறி விடுவதைச் சொல்வார். இதையே ‘பதறாத காரியம் சிதறாது’ என்று சொன்னால் அது ஒரு வழிகாட்டி வாக்கியமாகிவிடும்.
சில சொலவடைகள் சூழலை மறந்து பீற்றிக் கொண்டிருப்பவர்களையோ, அளவுக்கு அதிக மாக அலட்டிக் கொள்பவரையோ நாசூக்காக அடக்கிவிடும். ‘பல்லியையும் விரட்டணும் பானையும் உடையக் கூடாது’ என்கிற மாதிரியோ ‘மச்சு நெல்லும் குறையக் கூடாது மக்கமார் முகமும் வாடக் கூடாது’ என்கிற மாதிரியோ நைச்சியமாகச் சொல்லித் திருத்த சொலவடைகள் பெரிதும் கைகொடுக்கும்.
‘எதிலும் சாக்கிரதையான ஆளு ஆத்தைக் கடக்க ஏறுனானாம் முதலை மேல’. இது ஆப்ரிக்கச் சொலவடை. இதேபோல, ‘முந்தி முந்தி ஓடுனாலும் முதுகு பிந்தித்தான் வரும்’, ‘எலி பூனையைப் பார்த்துச் சிரிச்சா பக்கத்தில் வளை யிருக்குன்னு அர்த்தம்.’ இவையும் ஆப்ரிக்கச் சொலவடைகள். மலையாளத்தில் நாம் பழமொழி என்று சொல்வது போல ‘பழஞ்சொல்லு’ என்று அழைக்கிறார்கள். ‘ஆனை போற வழியில தானே அதோட வாலும் போகும்’ என்கிற மலையாள மொழிதலில் சொலவடையின் ஜாடையைக் காணலாம்.
‘கடல் தாண்டிப் போனாலும் கால்தடம் கூடவரும்.’ இது ஒரு ஸ்பெயின் நாட்டுச் சொலவடை. ‘கெட்ட நேரம் பொடதியிலேயே நிற்கும்’ -இது நம்ம ஊர் சொலவடை. ‘நான் வண்டியில் போனா, என் விதி நுகத்தடியில ஏறி எனக்கு முன்னால போயி இறங்குது.’ இதுவும் நம்ம ஊர்ச் சொலவடை. இதை நவீனமாகச் சிலர், ‘நான் ரயிலில் ஏறிப் போனால் என் விதி இஞ்சினில் ஏறி எனக்கு முன்பே போய் இறங்கிருது’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இப்படிக் கால காலமாக வாய்மொழியின் தோளேறி வருபவை சொலவடைகள். சொலவடை பேச்சுவாக்கில் தானே வந்து விழ வேண்டும், வெடுக்கென்று சொன்னால்தான் சுருக்கென்று தைக்கும். அதனால் அவற்றைச் சேகரிப்பதில் சிரமமேற்படுகிறதாகச் சொல்கிறார்கள். அப்படி யும் பேராசிரியர் மாடசாமி போன்றவர்கள் ஏகப்பட்டவற்றைச் சேகரித்து வழங்கியுள்ளனர்.
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com