காலை 6 மணிக்கு மன்றோ தீவில் படகுப் பயணம் எனத் திட்டமிட்டிருந்தோம். எதிர்பாராமல் அரை மணி நேரம் கொட்டித் தீர்த்தது மழை. சூடான கட்டஞ்சாயாவைக் குடித்துவிட்டுப் படகில் ஏறினோம். லேசான குளிரும் இருளுமாக ஆரம்பித்தது பயணம். அலையாத்தி மரங்களுக்குள் படகு சென்றபோது, மரங்களில் இருந்து விழுந்த நீர்த்துளிகள் சிலிர்க்க வைத்தன. கொக்கு, பாம்புத்தாரா, மீன்கொத்தி போன்ற பல பறவைகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
கிளைகள் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்திருந்த அலை யாத்தி மரங்கள் மீது ஏறச் சொல்லி, விதவிதமாக ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தார் படகு ஓட்டுநர். பயணத்தை சுவாரசியமாக்கும் விதத்தில் குறைவான ஒலியில் பாடல்களையும் ஒலிக்கவிட்டார். அரை மணி நேரம் கழித்து அந்த அற்புதமான காட்சியைக் கண்டோம். படகின் இரண்டு பக்கங்களிலும் உயரமான மரங்களின் உச்சியில் அமர்ந்து, நனைந்த உடலை லேசான
வெயிலில் காய வைத்துக்கொண்டிருந்தன பருந்துகள். ஒரே இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பருந்துகளைப் பார்த்ததில் பரவசமாக இருந்தது. ஒரு மணி நேரப் பயணத்தின் முடிவில் தெளிவான நீர் இருக்கும் பகுதிக்கு வந்துசேர்ந்தோம். முழங்கால் அளவுக்கே ஆழம் இருந்ததால், எங்களைப் படகிலிருந்து இறங்கச் சொன்னார் படகு ஓட்டுநர்.
சிறிது நேரம் தண்ணீருக்குள் நடை பயின்றோம். மீண்டும் படகில் பயணத்தைத் தொடர்ந்தபோது தாக மெடுத்தது. தண்ணீர் கொண்டுவரவில்லை என்று அப் போதுதான் தோன்றியது. உடனே கவலை வேண்டாம் என்ற படகு ஓட்டுநர், பத்து நிமிடங்களில் இளநீர் கடைக்கு அழைத்துச் சென்றார். தண்ணீருக்குள் இருந்தது அந்தக் கடை! தாகத்தைத் தணித்துக்கொண்டு மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்தோம்.
மதியம் பெரிய விசைப் படகில் மதிய உணவுடன் ஒரு பயணம் சென்றோம். அந்தப் படகு காலையில் பார்க்காத பகுதிகளைச் சுற்றிக் காட்டியது. கண்களுக்கு எட்டிய தூரம்வரை தண்ணீர். ஆங்காங்கே அலையாத்தி மரங்கள். பார்ப்பதற்கும் ஒளிப்படம் எடுப்பதற்கும் ஏற்றதான காட்சிகள். ஒரே நாளில் நான்கு மணி நேரம் படகில் பயணம் செய்தாலும் சிறிதும் அலுக்கவே இல்லை.
இயற்கையை நேசிப்பவர்களுக்கு அமைதியான, அழகான இடமாக மன்றோ தீவு அமைந்திருக்கிறது. கேரளத்தின் கொல்லம் மாவட்டத்துக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து உள்ளூர் ரயிலில் 15 நிமிடங்களில் மன்றோ தீவை அடைந்துவிடலாம். பட்ஜெட் சுற்றுலா வுக்கு ஏற்றது மன்றோ தீவு. தங்கும் விடுதிகள் குறைவான கட்டணத்தில் கிடைக்கின்றன. சுவையான கேரள உணவு வகைகளின் விலையோ நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மிகக் குறைவானதாக இருக்கிறது.