வாழ்வு இனிது

‘வாசனை’ தாத்தா | பாற்கடல் 12

கலாப்ரியா

அம்மா தன் அப்பாவை `அம்மானோ” என்றுதான் கூப்பிடுவார். அவரின் அம்மா சீக்கிரமே இறந்து போய்விட்டார். ஒத்தைக்கு ஒரு பிள்ளையான அவரை அப்பாதான் அம்மாவைப் போலக் கவனித்துக்கொண்டார். அதனாலோ என்னவோ அம்மான் என்றே அழைப்பார்.

பதினைந்து வயதிலேயே கல்யாணம் கட்டிக் கொடுத்துவிட்டார். பக்கத்து ஊர்தான் என்றாலும் அவர் காலத்தில் மாட்டு வண்டியும் குதிரை வண்டியும்தான் பயணம் செய்ய. முப்பது மைல் தூரத்தில் உள்ள திருச்செந்தூர், கழுகுமலை, சங்கரன் கோயிலுக்கு எல்லாம் வண்டியில்தான் போக்குவரத்து. அவரின் ஊர் டவுனிலிருந்து எட்டு, ஒன்பது மைல் தூரத்தில்.

தாத்தாவே வண்டியை ஓட்டிக்கொண்டு கிராமத்திலிருந்து வந்துவிடுவார். அப்பா கேலியாகச் சொல்வார், “அவரெங்கே ஓட்டு கிறார், ஏறியமர்ந்து, நேர்ப்பாதை வந்ததும் தூங்கிவிடுவார்.

மாடுகள் பழக்கத்திற்குத் தானே வந்துவிடும்” என்று. தாத்தா ஊருக்கு வந்த கொஞ்ச நேரத்திற்கு அவரைச் சுற்றி, ஓட்டிவந்த மாட்டு வாசனையும் வண்டியில் விரித்திருக்கும் வைக்கோல்கூளம் அடைத்த சாக்கு மெத்தை வாசனையுமே அடிக்கும். ரொம்ப நாளைக்கு அவர் வாசனையே அதுதான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் ஒரு துணிப்பையில் காசும் கொஞ்ச ரூபாய் நோட்டுகளும் வைத்து, ஏட்டுச் சுவடி போலச்சுருட்டி இடுப்பு மடிப்பில் வைத்திருப்பார்.

அதன் ஒரு முனையில் கட்டியிருக்கும் பம்பரக் கயிற்றை அரைநாண் கயிற்றில் முடிச்சிட்டு வைத்தி ருப்பார். அந்தத் துட்டுப்பை அவர் தூங்கும் போதும் இடுப்பில்தான் இருக்கும். அந்தப் பைக்கென்று துட்டு வாசனையிருக்கும். அவர் வந்த மறுநாள் வேட்டியை நனைத்தால், அதிலி ருந்து அதே செப்புக் காலணா வாசனை வரும்.

தாத்தா ஆனித் தேரோட்டத்துக்கு வந்தால் ஒரு வாரமாவது தங்குவார். கோயிலுக்குப் போவது, சிவபூசை தீட்சை எடுத்த சக நண்பர் களைப் பார்ப்பது, பலசரக்குச் சாமான்கள் வாங்குவது என்று ஒவ்வொரு நாளும் ஒரு வேலை வைத்திருப்பார். பலசரக்கு வாங்கப் பையெல்லாம் கொண்டு போக மாட்டார்.

ஒரு பெரிய பழைய வேட்டி கொண்டு போவார். சரிபாதியில் மல்லி, வத்தல், பயறு, பருப்பு வகைகள் என்று சாமான்களைக் கொட்டி, எல்லாவற்றையும் சிறு சிறு மூட்டைகளாக் கட்டி, அதையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிப் பெரிய மூட்டையாக்கித் தலையில் தூக்கி வருவார். அப்படிச் சாமான்களைக் குட்டி குட்டி மூட்டைகளாகக் கட்டுவதே அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் பலசரக்குப் பொருள்களைத் துணியில்தான் பொட்டலமாகக் கட்டுவார்கள். தாளில் பொதிவதெல்லாம் பிறகு வந்தது.

தாத்தா சாமான்கள் வாங்கும்போது தவறா மல் பேரீச்சம் பழம் வாங்கித் தருவார். அவர் வந்தால் நான் அவர் கூடவே இருப்பேன். ஊருக்குத் திரும்பிப் போகையில் காலணாவோ அரையணாவோ தருவார். அரையணா என்பது மூன்று நயா பைசா. அதுவே பெரிய துட்டு. தாத்தா குளிப்பதற்கு சோப்பு உபயோகிக்க மாட்டார்.

குளியல் பொடிதான் உபயோகிப்பார். தாத்தா கூழ்ப்பதினி, கருப்பட்டி சகிதம் வரப் போகிறார் என்றாலே அம்மா குளியல் பொடி தயாரிக்க ஆரம்பித்துவிடுவார். இதில் கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு, முட்டா மஞ்சள், பூலான்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், ரோஜா இதழ், மகிழம்பூ, சந்தனம் போன்ற பொருள்களெல்லாம் சேரும், முக்கியமாகப் பாசிப்பயறு. பேரே பலமணப் பொடி.

தாத்தா குளித்துப் பூசையெல் லாம் முடித்து வரும்போது மேலே இந்த நறுமணப் பொடி வாசனையும் திருநீற்று வாசனையும் வரும்.தாத்தா வாசனையைக் கண்டறிவதிலும் கெட்டிக்காரர். மத்தியானம் நாற்காலியில் உட்கார்ந்தே கொஞ்ச நேரம் கோழித்தூக்கம் தூங்குவார். தாத்தா வந்தால் அம்மா, மதியச் சாப்பாடெல்லாம் முடிந்த பின் முறுக்குச் சுடுவார். எண்ணெய் காயும் வாசனை வந்தாலே தாத்தா முழித்துக் கொள்வார்.

``ஏல, அம்மா முறுக்குச் சுடுதாளா” என்பார். அம்மா முதல் சுற்று முருக்கை நன்றாக வெந்து எடுத்துவிடுவார். அதை விளக்கு முன்னால் வைத்துப் பூசை செய்யச் சொல்வார். இரண்டாவது சுற்று எடுக்கும்போது அரை வேக்காட்டு முறுக்கு எடுத்து தன் அம்மானிடம் கொடு என்று தருவார். தேங்காய் எண்ணெயும் அரிசிமாவு வாசனையும் கலந்து தனி வாசமடிக்கும். பாதி வெந்த முறுக்கு தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

பல்லுக்கும் பதமான, நாவுக்கும் ருசியான வேகாத முறுக்கை ரசித்துத் தின்றுகொண்டே தோட்டத்து வில்வ மரத்தின் பூ வாசனையைக் கண் டறிந்து விடுவார். ``வில்வம் பூத்தி ருக்கோடே..” என்பார். வில்வப் பூவுக்கென்று ஓர் அசாத்திய மணம் உண்டு. கூடவே, “மரத்தில கொக்கு கூடு கட்டியிருக்கோ, கொக்கு எச்சம் வீசுதே” என்பார்.

அதே போலக் கோழித்தூக்கம் போடும் போதே, ``தென்னை மரத்தில மரநாய் ஏறுதுடே, பச்சை ஓலை கிழிக்கிற வாசனை அடிக்குது” என்பார். வாசனையை வைத்தே தேங்காய் எது, இளநீர் எது என்று சொல்லி விடுவார். பூக்குடலையை ஈரத்துணி போட்டு மூடியிருந்தாலும் வாசனையை வைத்தே பூ எது, வில்வதளம் எது என்று சொல்லிவிடுவார்.

பால் குடிக்கையில், “பால் சீக்கிரம் கறந்துட் டானோ கொஞ்சம் புளிச்ச வாசனை வருதே” என்பார். இல்லைன்னா, ``மடுவைச் சரியாகக் கழுவலையோ கொஞ்சம் கோமியம் வாசனை வருதே“ என்பார். தாத்தா ஆயிரம் பிறை கண்டு, கண் பார்வை மங்கி கடைசிக் காலத்தில் எங்கள் வீட்டோடே வந்துவிட்டார். அப்போதெல்லாம் ஊரிலிருந்து சம்சாரிகள் வந்து நிலபுலன்கள் பற்றி விவரம் சொல்லக் காத்திருந்தால், அவர் உடல் வாசனையை வைத்தே இன்னார் வந்திருக்கிறது என்று குசலம் விசாரிப்பார்.

நடமாட்டமே இல்லாமல் உணவும் செல்லாமல் படுக்கையில் இருந்த கடைசிச் சில நாள்களில் பால் பொங்கி அடுப்பில் விழுவது போல் வாசனை வீடு நிரம்பி வழிந்தது. `இறப்பு நாடி’ பார்க்க வந்த வைத்தியர் அந்த வாசனையை நுகர்ந்தபடியே சொன்னார், “அம்மா, உங்க அம்மான் பட்டுப் போய்ட்டாக, ஆனா சீவன் தொண்டைக் குழியில் நிக்குது, பிறந்த மண்ணை எடுத்துட்டு வந்து ஒரு சிட்டிகை தண்ணியில் கரைச்சு வாயில் விடுங்க, அந்த மண் வாசம்தான் அவுக போற வழிக்கு வாசல்” என்றார். அப்படியே மண்ணெடுத்து வந்து புகட்ட, மண் வாசனையோடு பிரிந்தது தாத்தாவின் ஆவி.

- kalapria@gmail.co

SCROLL FOR NEXT