வாழ்வு இனிது

நீலக்கண்களில் மின்னிய ஆயிரம் விளக்குகள்! | பாற்கடல் 11

கலாப்ரியா

திருநெல்வேலியில் ஆனித் திருவிழாவையொட்டி நகராட்சி சார்பில் பொருள்காட்சி நடக்கும். பொருள்காட்சிக்கென்று தனிமைதானம் கிடையாது. நகராட்சி அலுவலகத்திற்கு எதிரான வயல் வெளிகள்தான் மைதானம். ஏனைய வயல்களில் நெல் நட்டு விட்டாலும் அந்த வயல்களில் தண்ணீர் வரத்தை நிறுத்தி பயிர் ஏற்றாமல் போட்டுவிடுவார்கள்.

நடப்பதற்கு வசதியாக வயல் வரப்பு களை எல்லாம் தட்டி நிரத்தி, பெரிய மைதானமாக்கி விடுவார்கள். அப்படியும் ஓரிரண்டு நாள்கள், நன்றாகச் சமப்பட்டிராத நிலத்தில் நடப்பதற்குச் சிரமமாகவே இருக்கும். என் அப்பா முதல் இரண்டு, மூன்று நாள்களுக்குப் போகவே மாட்டார், கரம்பைக் கட்டி கட்டியாகக் கிடக்கும், காலை அறுத்துவிடும் என்பார்.

பயிர் செய்து வருவதைவிட இரட்டிப்பு லாபம் கிடைக்கிற மாதிரி நகராட்சியிலிருந்து வயல் உரிமை யாளர்களுக்குப் பணம் தருவார்கள். ஆனால், பொருள்காட்சியில் லட்சக் கணக்கான காலடிகள் திரும்பத் திரும்ப நடந்து மண் கெட்டிப்பட்டு, கான்கிரீட் போலாகிவிடும்.

அதை மறுபடி வரப்பு வைத்து, உழுது பயிர் ஏற்றுவதற்கு விவசாயிகள் கடும் பிரயாசைப்பட வேண்டியிருக்கும். மறுபடி வரப்பு வைப்பதில் அடிக்கடி தகராறுகள்கூட வரும். ஆனால், வயலைக் கொடுக்காமல் தீராது. நகராட்சியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்றும் யோசிப்பார்கள். பொருள்காட்சி ஒவ்வொரு வயதின ருக்கும் ஒருவிதமான கொண்டாட்டம்.

பள்ளிக்கூட வயதில், பள்ளிக்கூடத் திற்கு எதிரேதான் அந்த மைதானமே இருக்கும். மதியச் சாப்பாட்டு இடைவேளையில் வெளிப்புறமாகச் சுற்றி வருவோம். நாடகத்திற்கான அரங்கப் பொருள்கள் வர, கடை களுக்குப் பொருள்கள் கொண்டு வரஎனச் சில நேரம் அபூர்வமாக நுழைவு வாயிலைத் திறந்து போட்டிருப்பார்கள்.

ஒருமுறை பழுதடைந்திருந்த ராட்சத ராட்டினத்தை மாற்ற பெரிய லாரியில் பாகங்கள் வந்திருந்தன. அது போன்ற நேரத்தில் மகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்து சுற்றிவருவோம். எல்லாக் கடை களிலும் வெள்ளைத் துணியில் படுதா போட்டு மூடித்தான் வைத்திருப்பார்கள். கடைக்காரர்கள் ஏர் ஸ்டவ் வைத்துச் சமைத்துக் கொண் டிருப்பார்கள்.

ஜலக் கன்னி, பாம்புப் பெண் எனஸ்டாலில் அந்த வேடமிடும் பெண்கள் கடையில் சாதாரண உடை யில் அமர்ந்திருப் பார்கள். ‘ஏலே ஜலக் கன்னிலே, ஏல மாப்பிளை பாம்புப் பெண்ணுலே’ என்று அவரைச் சுற்றிக் கூடி நிற்போம். அவர் வெட்கப்பட்டு உள்ளே ஓடுவார். உள்ளிருந்து யாராவது வந்து விரட்டுவார்கள். ஓடுவோம்.

சிலர் மைதானத்தில் குனிந்த தலை நிமிராமல் சுற்றி வருவார்கள். அவர்கள் மைதானத்தில் யாராவது தவறவிட்ட சில்லறைக் காசுகளைத் தேடுவார்கள். யாரோ ஒருவருக்கு என்றோ காசு கிடைத்திருக்கும். யாருக்கோ தங்கச் சங்கிலி கிடைத்த தாக வந்த வதந்தியே இந்த உடற்பயிற்சிக்குக் காரணம். அதுவே பிரச்சினைக்கும் உள்ளானது.

உண்மையில் பொருள்காட்சியில் சங்கிலி தவற விட்டவர்கள் போலீ ஸில் புகாரளித்திருக்க, பள்ளிப் பையன்கள் கையில் சங்கிலி ஒன்று கிடைத்ததாகக் கடைக்காரர்கள் சொல்ல, போலீஸார் பள்ளிக்கே வந்து விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள். உடனே மதிய இடை வேளையில் யாரும் சீருடை அணிந்து பொருள்காட்சி மைதானம் பக்கம் போகக் கூடாது.

அப்படியே போனாலும் சீருடை அணியக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி விட்டார்கள். ஆனாலும் சட்டையை மட்டும் மாற்றிக்கொணடு சிலர் போய்விட்டார்கள். அவர்களில் என் வகுப்பில் படித்த `பட்டர்’ என்கிற வளர்ந்து கெட்டவன் சில கடைக்காரர் களுடன் நெருங்கிப் பழகி விட்டான். ஜலக்கன்னி ஸ்டா லும் அதில் ஒன்று.

அவனே அந்தவருடம் முழுவதும் அந்தக் கடைக்கார ருடன் ஊர் ஊராகப்போனான் என்றும் பேசிக்கொண் டார்கள். ஆனால், அவன் வீட்டில் பலருக்கும் அம்மை போட்டிருந்தது எனக்குத் தெரியும். நெல்லைப் பொருள்காட்சியில் கடை போடுப வர்கள், ஆனித் திருவிழா முடிவடைந் ததும் தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழாவில் கடை போடச் சென்றுவிடுவார்கள். அது முடிந்தால் குழித்துறை வாவுபலி பொருள்காட்சி, வேளாங்கண்ணி என்று சுற்றிக்கொண்டே இருப் பார்கள். அவர்கள் பெரிய லாபம் அடைந்ததாகச் சரித்திரமே கிடையாது. நல்ல சாப்பாடே கிடையாது.

இது பள்ளிப் பருவத்தில். கல்லூரிக் காலத்தில் பொருள்காட்சி என்றாலே கலர் பார்ப்பது. கலர் கலராகப் பெண்கள் பின்னால் சுற்று வது. `முன்னே வருவான் பின்னே போவான், பின்னலைக் கண்டு தன்னை மறப்பான், எண்ணத்தைச் சொல்ல இடமில்லாமல் பெண்ணை விட்டவன் ஏப்ரல் ஃபூல்’ என்று கண்ணதாசன் பாடிய மாதிரி ஏப்ரல் ஃபூலாகக் காதல் புறாக்கள் பின்னால் சுற்றுகிற பருவம். இப்போதுபோல புரொபோஸ் பண்ணுகிற சமாச்
சாரங்கள் எல்லாம் கிடையவே கிடையாது.

மேலும் பொருள்காட்சி யில் தாகூர் சொன்ன, `சிறந்தவற்றை நாம் தேர்ந்தெடுப்பதில்லை; சிறந்தவை நம்மைத் தேர்ந்தெடுக் கின்றன’ என்பதற்கேற்ப அன்றன்று நம்மைக் கவர்கிற பெண் பின்னால் சுற்றுவதே பாலியத்திற்கு நாம் செய்கிற நியாயம்.
பள்ளிப்பருவத்தில் `பட்டர்’ என்றால், கல்லூரிக் காலத்தில் `பசை’ நடராஜன். யாரிடமும் நன்றாகவும் சீக்கிரமாகவும் பழகிவிடுவான்.

சீக்கிரம் ஒட்டுவதால் பசை என்று பட்டப்பெயர். பட்டர், ஒரு நாள் நெல்லையப்பர் கோயிலின் ஒதுங்கிய சன்னதி ஒன்றில் பட்டர் போலக் கொஞ்ச நேரம் நின்று சுற்றுலா வந்த வெளியூர்க்காரர்களிடம் காசு பார்த்து விட்டான், அவனே சொன்ன கதை இது. அதனால் பாலசுப்பிர மணியனுக்குப் பட்டம் சூட்டிய பெயர் `பட்டர்’. பசை நடராஜன், ஸ்கேட்டிங் ஸ்டால் போட வந்தவர்களுடன் ஒட்டிக்கொண்டு, காலில் சக்கரம் கட்டிக்கொண்ட முதல் இரண்டு நாள்கள் குப்புற விழுந்து மூஞ்சியை உடைத்துக் கொண்டாலும் அழகாக ஸ்கேட்டிங் பழகிவிட்டான். அங்கிருந்த காஷ்மீர் பெண்ணுடன் சினேகமும் ஆகி விட்டான்.

அவன் புண்ணியத்தில் எங்களிடமும் அந்தப் பெண் கொச்சைத் தமிழில் பேசுவார். அவன் கல்யாணத்திற்கு வந்திருந்த அந்தக் காஷ்மீர் காதலியின் கையிலிருந்த குழந்தை யின் பெயர் என்னவென்று கேட்டேன். `நட்டு’, நட்வார்சிங் என்றார். `எல்லா ரிடமும் ஒட்டிக்கொள்வான்’ என்று கண்ணில் நீர்வரச் சிரித்தார். அவரின்நீலக் கண்ணில் கோத்த ஆனந்தக் கண்ணீரில் ஆயிரம் விளக்குகள் மின்னின பொருள்காட்சி போல!

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT