எப்போதுமே ஒரு புதிய ஊருக்குப் பணிமாறுதலாகி, அந்த ஊரில் சேரும்போது இங்கு எவ்வளவு நாள்களோ என்றுதான் தோன்றும். ஆனாலும் சேரும் முன்பு புதிய ஊர், மக்கள், வாடிக்கையாளர்கள், அலுவலகப் பணிகள், தண்ணீர் வசதி, பக்கத்தில் என்னென்ன ஊர்கள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள், தியேட்டர்கள் பற்றியெல்லாம் தகவல்கள் சேகரிப்பதும் நடக்கும். இப்போது மாறுதல் கிடைத்திருக்கும் அந்த ஊரைப் பற்றி எல்லாமே நல்லவிதமாகவே சொன்னார்கள்.
முதல் நாள் சீக்கிரமாகவே பேருந்து கிடைத்து, ரொம்பச் சீக்கிரமாகவே போய் இறங்கிவிட்டேன். இறங்கியதும் என்னைச் சற்றே ஒட்டியபடி ஒருவர் வந்து காதருகே, “கடலை வேணுமா” என்று கேட்டார். அந்தச் சின்ன பஸ் ஸ்டாண்டில் பலரும் அதை வேடிக்கை பார்ப்பதுபோலிருந்தது. ஆரம்பமே ஒரு மாதிரியா இருக்கே! கடலை என்பதற்கு வேறு அர்த்தம் உண்டோ என்றெல்லாம் நினைத்துச் சற்றுக் கலவரமானேன்.
விசாரித்து வைத்திருந்த வழியில் குத்துமதிப்பாகப் போனேன். அகலமான தெருவாயிருந்தது. பழமையான காரை வீடுகளுக்குள்ளிருந்து கைத்தறி நெய்யும் சத்தமும் தெருவில் இரண்டு வரிசையாகப் பாவு ஆத்துவதுமாக ஊரின் முக்கியமான நெசவுத் தொழில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
ஒன்றிரண்டு பேர் திண்ணையில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பெண்கள், “பாவாத்த கூடமாட நின்னா, ரெண்டு ரூபாய் கிடைக்கும்லா? `நாஷ்டா’வுக்கு ஆச்சுல்லா” என்று சொல்லிக் கொண் டிருப்பதும் கேட்டது.
எல்லாருமே என்னைக் குறுகுறுவென்று பார்த்தார்கள். வெளியூர்க்காரனென்றால் எப்படியோ தெரிந்துவிடும்போல. நடக்க நடக்க இது கடைவீதியில்லையே என்று புரிந்தது. கூடவே சற்றுத் தொலைவு கடந்து விட்டது மாதிரியும் தோன்றியது. அருகே நடந்துவந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தார்.
எனக்கு இன்னும் கலவரம் நீங்கியிருக்கவில்லை என்பதால் தயக்கமாகப் பின்தொடர்ந்து கொண்டிருக்கையில், அவர் என் தோளைத் தொட்டு ஒரு சிறிய சந்தைக் காண்பித்து, அதனுள்ளே போகும்படிக் கையைக் காட்டினார். ‘வாயைத் திறந்தால் முத்தா உதிர்ந்துவிடும், என்ன ஊர் என்ன மக்கள்’ என்று அலுப்பாக இருந்தது.
அந்த முடுக்கினுள் ஒரு கூரை போட்ட டீக்கடை, `இடியாப்பம், குடல்கறி கிடைக்கும்’ என்று ஒரு சின்னஞ்சிறிய போர்டுடன். வியாபாரம் மும்முரமாக இருந்தது. எல்லாரும் நாஷ்டா சாப்பிடுகி றார்கள் என்று நினைத்தேன். என் ஊரிலும் நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் காலையில் டீக்கடை முன்பு இப்படித்தான் கூட்டம் அலைமோதும். பாவாத்துவது கூட்டாக ஆணும் பெண்ணும் செய்ய வேண்டிய வேலை.
அதனால் வீடுகளில் காலைச் சாப்பாடு செய்யமாட்டார்கள். பெண்களுக்குப் பழைய சோறு. ஆண்களுக்கு அது இறங்காது. அங்கே புட்டு, பயறு பிரபலம். இங்கே குடல்கறி. எல்லா ஊரும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்று நினைத்தேன். டீக்கடையைக் கடந்ததும், அந்த முடுக்கு பஜாரில் இணைந்தது. நேரெதிரே அலுவலகப் பெயர்ப் பலகையும் கண்ணில் பட்டது.
அலுவலகம் முன்பு கொஞ்சம் வயதானவர் ஒருவர் நல்ல வடிவாகத் தலைப்பாகைக் கட்டி, சிறுவர்களை விரட்டிக்கொண்டிருந்தார். அவர்கள் ஓடுவதும் `கப்பல்’… `கப்பல்’ என்று சொல்லிக்கொண்டு அருகே வருவதும் இவர் விரட்டுவதுமாக இருந்தார். எல்லா ஊரிலும் இப்படி ஓர் ஆளை வம்புக்கு இழுப்பது குழந்தைகளுக்குத் தீராத பொழுதுபோக்கு. வேறொருவரும் வந்து விரட்டினார். பிள்ளைகள் தலைதெறிக்க ஓடினார்கள். அவர் பள்ளிக்கூட ஆசிரியர்.
அவரிடம் `கப்பல் என்பது என்ன கேலிக்குரிய சொல்லா’ என்று கேட்டேன். “பட்டப் பெயர்களுக்கு ஆதி அந்தம் யாருக்கும் தெரியாது. பிள்ளைகள் எப்படியோ வழிவழியாக இதற்குப் பழகிவிடுகிறார் கள்” என்றார் சிரித்துக்கொண்டே. “ஆமா, நீங்க யார் சார்” என்று விசாரித்தார். சொன்னேன். “அப்படியா, அலுவலகம் திறக்க இன்னும் நேரம் இருக்கே, டீ சாப்பிடலாம் வாங்க. உக்காருங்க, ஒரு பிளேட் இடியாப்பம் குடல்கறி சாப்பிடறீங்களா, ரொம்ப டேஸ்ட்டா, சுத்தமா இருக்கும்.
வயித்துப் புண்ணை ஆத்தும்” என்றார். நான் அவசர அவசரமாக மறுத்தேன். அதற்குள் யாரோ டீயை வைத்தார்கள். யாரென்று பார்த்தால் அலுவலகத்திற்கு வழிகாட்டியவர். அவரிடம் ஆசிரியர் ஜாடையில் வினவி னார், ‘தெரியுமா?.’ ‘தெரியாது’ என்று தலையசைத்து, வங்கியைக் காண்பித்து, ‘புதிதாகப் பணிக்கு வரப் போகிறார், சரிதானா’ என்று ஜாடையில் சொன்னார். சைகையை மொழிபெயர்த்தார் ஆசிரியர்.
அப்போது இன்னும் இரண்டு பேர், ஒரு கடலை மூட்டையுடன் வந்தார்கள். அவர்களும் ஜாடையில் பரோட்டா வீசுவது போலச் செய்து, `நாஷ்டா’ கேட்டார்கள். இரண்டு பேரிடமும் முதலாமவர் சைகையில் கடலை விதைத்தரமாக இருப்பதாகச் சொன்னார். புதியவர்கள் ஆசிரியரிடம் ஒரு மணிபர்ஸையும் முதலாமவரையும் காண்பித்து, `கெட்டிக்காரன்’ என்பது போலச் சைகை செய்தார்கள். முதலா மவர் கேலியாக அடிக்கக் கை ஓங்கினார். ஓட்டலில் சிரிப்பலை பரவியது.
ஆசிரியர் சொன்னார், “பேச்சுத்தான் வராது மற்றபடி கெட்டிக்காரர். இவரது தறிப்பட்டறைக் கணக்கு, வங்கி வரவு செலவு பூராவும் இவரேதான் பார்த்துக் கொள்கிறார். மங்களூர் வரை போய் ஆர்டர் எடுத்து வருவார். கடையில் இவர் சாமான்கள் வாங்குவதிலும் கெட்டிக்காரர் சார். நிரோத்துக்கு இவர் வைத்திருக்கும் குழூஉக்குறி மணிபர்ஸ். அதனால்தான் இவரை `மணிபர்ஸ்’ என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்கள். பாருங்க புதிதாக வந்த உங்களுக்கு டீ தந்து உபசரிக்கிறார்” என்றார்.
ஆசிரியரின் பேச்சில் என் அச்சம் முற்றிலும் நீங்கிவிட்டது. டீயைக் குடித்தாயிற்று. வங்கி திறக்க இன்னும் அரை மணி நேரம் இருக்குமே என்று யோசிக்கையில், அதை மூவரும் புரிந்துகொண்டது போல, பக்கத்திலி ருக்கும் பொது நூலகத்தைச் சைகையில் காட்டினார்கள். இவரைப் போய் `பேசினால் முத்து உதிர்ந்து விடுமோ’ என்று தப்பாக நினைத்தோமே. இவர் வாயில் மொழி இல்லையே தவிர, முத்து முத்தாகச் சிரிப்பு இருக்கிறதே! அவரிடம் மன்னிப்புக் கேட்க நினைத்தேன். ஆனால் எப்படி, எனக்குத்தான் அவர் மொழி தெரியாதே!
(அமிழ்தெடுப்போம்)