என் உயரதிகாரியின் சகோதரர் மறைந்து விட்டார் என்கிற செய்தி வந்தபோது, நான் வங்கியின் வேறு ஒரு கிளையில் பணிநிறைவு சிறப்புக் கூட்டத்தில் இருந்தேன். உடனே அங்கிருந்து கிளம்பினேன். வாசலில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். சடலத்தை எடுத்துச் செல்லும்போது, கூடவே வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தனர்.
இறுதிச் சடங்குகளில் அதிகாரி மூழ்கி இருந்தார். சடங்கு செய்பவரும் அவருக்கு உதவியாக இருந்தவரையும் தவிர, உறவினர்கள் என்று யாருமே இல்லை. இறந்தவரின் சடலத்தை எடுத்துச் சிதையில் வைக்க ஒருவருமில்லை. சட்டென்று உடலை எடுத்துச் சிதையில் வைத்தேன். அனைத்தும் நிறைவுபெறும் வரை அதிகாரியோடு நின்றுவிட்டு, ஆறுதல் கூறிவிட்டு, வீடு திரும்பினேன்.
தொழிற்சங்கப் பணி காரணமாக நான் அதிகமாக விடுப்பு எடுப்பேன். அலுவலகத்துக்குத் தாமதமாக வருவேன். அலுவலக நேரம் முடிவதற்கு முன் கிளம்பிவிடுவேன். அதனால் எனக்கும் அதிகாரிகளுக்கும் எப்போதும் சுமுகமான சூழல் நிலவியதே இல்லை. நகைச்சுவை உணர்வுமிக்க அந்த அதிகாரியே, நான் எதிரே வந்தால் இறுக்கமாகிவிடுவார்.
என் போன்றவர்களால் அவருக்கும் நெருக்கடி உண்டு என்பதையும் நான் அறிவேன். சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் பணிக்கு வந்தார் அந்த அதிகாரி. அவரைப் பார்த்து நட்புடன் புன்னகை செய்தேன். அவர் வழக்கம்போல் இறுக்கமான அதிகாரியாகத்தான் இருந்தார்.
என்னுடன் பணியாற்றும் ஒருவர், "சார் வீட்டுக்குத் துக்கம் கேட்கப் போயிருந்தேன். நீங்க மட்டும்தான் கடைசிவரை இருந்தீங்களாமே... உங்களுக்கு என்ன செய்யப் போறேன்னு சொல்லும்போதே சார் அழுதுட்டார். இது அவருடைய இயல்புதான்… யாரா இருந்தாலும் செய்திருப்பாருன்னு சொன்னேன்” என்றார். நான் அதிகாரியின் அறையைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அவரும் தன் இயல்புடன் என்னை நோக்கினார். - எஸ்.வி. வேணுகோபாலன்