அலகாபாத் (இப்போது பிரயாக் ராஜ்) சென்றிருந்தோம். அது ஆன்மிகப் பயணம். நேரப் பிரச்சினை காரணமாகத் திட்டமிட்டபடி ‘ஆனந்த பவன்’ பார்க்காமல் சென்று விட அமைப்பாளர்கள் முடிவெடுத்து, ஆறுதலுக்காக வழியில் இருந்த ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம் என்றார்கள்.
நாட்டுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த ஆனந்த பவனின் மூன்று தலைமுறையும் நினைவில் வந்து போனார்கள். அங்கே கால் பட்டாலும் போதும் என்று அமைப்பாளர்களிடம் நிர்ப்பந்தித்தேன். என்னைப் போலவே இன்னொருவரும் வாதிட்டார். பெரும்பாலானவர்கள் கோயிலுக்குப் போகலாம் என்றார்கள். நேரம் கடந்தது. டிரைவருக்கு எங்கள் வாக்குவாதம் எப்படிப் புரிந்ததோ இரண்டையும் பார்க்கலாம், நான் நேரத்தைச் சரிக்கட்டிக்கொள்கிறேன் என்றார்.
அந்தத் தியாக மாளிகையின் தாழ்வாரங்களில் வெறுங்காலால் நடந்து, அதை வணங்காமல் வணங்கி வரு வதற்கு அரை மணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள்ளே போய் வந்ததும் பெரும் நிறைவாக இருப்பதை ஒருகைகுலுக்கல் மூலம் சொல்லலாமே என்று பேருந்தின் டிரைவரைத் தேடினேன்.
சிறுநீர் கழிக்க வசதியிருக்கிறதா என்று கேட்பதாக நினைத்துக்கொண்டு, ஒரு லேசான சிரிப்புடன் எதிரே இருந்த பழைய கட்டிட மொன்றில் இயங்கிவந்த இடதுசாரித் தொழிற்சங்க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்கும் ஆனந்தபவனின் வயதிருக்கும்போல! ஆனால் எளிமையாக, அதுக்கு உண்டான இலக்கணத்துடன் தோழமையாக வரவேற்றது.
அங்கே வரவேற்பறையிலிருந்த படங்களில் ‘தோழர் பர்வானா’ படம் ஒன்று பெரிதாக இருந்தது. அதைப் பார்த்த உடனே என் வங்கிப் பணிக்காலங்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளும் நினைவை ஆக்கிரமித்தன அந்தர நதியாக! நான் படங்களைப் புன்னகையுடன் பார்ப்பதைக் கவனித்த அங்கே இருந்த வயதான ஒருவர் வாருங்கள் என்றார். நான் படத்தைக் காட்டி, ``காம்ரேட் பர்வானா, இவர் பெயரில் நாங்கள் ஒரு மாத இதழ் நடத்தினோம் எங்கள் தொழிற்சங்கம் சார்பாக” என்றேன் உடைந்த ஆங்கிலத்தில்.
அவருக்கு அது புரிந்துவிட்டது. அதே போன்ற ஆங்கிலமும் இந்தியுமாக, “அப்படியா உட்காருங்கள், அவர் எங்கள் வங்கியின் ஆதிகாலத் தலைவர், பத்திரிகை பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றார். நான் வாட்சைப் பார்த்தேன், பயண ஏற்பாட்டாளர் மீதான கவலையில். இப்போதும் பேருந்து ஓட்டுநர் உதவிக்கு வந்து, `உட்காருங்கள், நான் இல்லாமல் வண்டி எப்படிப் போகும்’ என்பது போலச் சொன்னார். நான் பணிபுரிந்தது ஒரு தனியார் வங்கி. கண்டிப்புக்குப் பேர் போன வங்கி.
அங்கே தொழிற்சங்கத்தில் இருப்பதெல்லாம் மிகக் கடினம். அப்படியும் தங்கள் சுக துக்கங்களைப் பாராமல் ஈடுபாட்டுடன் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குத் தோள் கொடுப்பவர்கள் நிறையவே உண்டு. எல்லாரும் சங்கமிக்க சங்கத்திற்கு ஒரு கட்டிடம் உண்டு. அதில்தான் பல நாட்டுடைமை வங்கிகளின் தோழர்களும் ஒன்று கூடுவார்கள். வங்கிக்கு விடுமுறை எடுத்திருந்தால்கூட மாலையில் சங்க அலுவலகத்திற்கு வரத் தவற மாட்டோம்.
கிளைகளின் அன்றாடப் பிரச்சினை, வங்கிப் பிரச்சினை, நாட்டுப் பிரச்சினைகள் எனச் சகலத்தையும் குறித்துக் காரசாரமான விவாதங்கள் நடைபெறும். விவாதத்தின் சூட்டிற்கேற்ப டீயும் பீடியும் சிகரெட்டும் மளமளவெனக் காலியாகும். நேரம் ஆகஆகத் தரையெங்கும் சிகரெட் மிச்சங்கள் சேரும்.
மேசையில் ஆஷ்ட்ரே புத்தம் புதிதாக மிளிர்ந்து, `சாம்பலைத் தட்டுவதற்குத் தரை இல்லாதபோது உபயோகப்படும் சாதனமே ஆஷ்ட்ரே’ என்கிற கேலி வாக்கியத்தை நிரூபிக்கும். யாராவது இரவில் தங்க வேண்டியிருந்தால் தோழர்களே கூட்டி அள்ளிவிடுவார்கள்.
ஒருநாள் பயனுள்ள விவாதத்திற்குப் பின் எங்கள் வங்கித் தொழிற்சங்கக் கிளைக்காக ஒரு பத்திரிகை தொடங்குவதெனவும் அதற்கு, ‘பர்வானா’ என்று பெயர் சூட்டவும் மாறுபட்ட கருத்தின்றி முடிவெடுத் தோம். தோழர் பர்வானா பஞ்சாபைச் சேர்ந்தவர். இந்தியாவின் பெரிய வங்கித் தொழிற்சங்கத்தைக் கட்டி எழுப்பியதில் முக்கியப் பங்காற்றி யவர். பல சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்தவர். அவர் பெயரிலான முதல் இதழை வடிவமைப்பதில் நான் முக்கியப் பங்காற்றியதோடு தொடர்ந்தும் பங்களித்தேன்.
முதல் இதழின் அட்டையில் வெளியிட்ட பர்வானாவின் படமே அலகாபாத் வங்கித் தொழிற் சங்க அலுவலகத்திலும் இருந்தது. அங்கிருந்த மூத்த தோழர் குல்பூஷணுக்குப் பர்வானா பெயரி லான பத்திரிகை பற்றியும் அதற்கு என் பங்களிப்பு குறித்தும் அறிந்து அளவில்லாத மகிழ்ச்சி. அதைவிட இந்தியாவின் தென் மூலையிலிருந்து ஒரு வங்கித் தோழர் வந்து பேசிக்கொண்டிருப்பதும், அதுவும் ஒரு பேருந்து ஓட்டும் தோழர் அழைத்து வந்ததும் கண்டு அதிக மகிழ்ச்சி.
என் பயணத் திட்டம் பற்றிக் கேட்டு, அடுத்து நான் காசிக்குச் செல்வதை அறிந்ததும், குல்பூஷண் மளமளவென்று அவர் வங்கியின் வாராணசி நகர் கிளைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி என்னிடம் அளித்தார். காசியில் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், செய்வார் என்கிற வழிகாட்டுதலோடு.
மீண்டும் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு விடைபெற்றபோது கம்பன் சொல்லிய ‘தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?’ என்னும் வரியும் ஆழ நெடுந்திரைக் கங்கை ஆறும், பொங்கிப் பெருகும் குகனின் அன்பும், அந்தத் திரிவேணி சங்கமத்தில் ஒன்றாகச் சங்கமித்தது மனதுக்குள்!
(அமிழ்தெடுப்போம்)
- kalapria@gmail.com