வாழ்வு இனிது

ஓய்வு நேரத்தில்...

ஏ.மூர்த்தி

ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் அவசரமாக எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், “உனக்கு நேரம் இருந்தால் என்னுடன் வர முடியுமா?” என்று கேட்டார்.

நானும் எங்கே என்று கேட்காமல் அவருடன் சென்றேன். அது ஒரு முதியோர் இல்லம். நண்பர் அந்த இல்லத்தில் பெருக்குவது, துடைப்பது, படுக்கைகளை ஒழுங்குபடுத்துவது, குளியலறைகளைச் சுத்தம் செய்வது என வரிசையாக வேலைகளைச் செய்து முடித்தார். பிறகு முதியவர்களிடம் அமர்ந்து பேசினார்.

அனைவரும் அவரிடம் அன்பாகப் பேசினர். ‘எப்போ ஞாயிற்றுக் கிழமை வரும் என்று உனக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கோம்’ என்று நண்பரிடம் சொன்னார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர். அதே அன்பை என்மீதும் காட்டினார்கள்.

நண்பரும் நானும் கிளம்பினோம். “அதுக்குள்ளே கிளம்பிட்டியா? நீ வந்தால் நேரம் போறதே தெரியல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கும் வேலை இருக்கும். அதனால உன்னை இருக்கச் சொல்ல முடியல. நீ நல்லா இருக்கணும்” என்று சொல்லி நண்பரை அனுப்பி வைத்தார்கள் அங்கிருந்த முதியவர்கள்.

அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம். நண்பரிடம் இந்தச் சேவையை எவ்வளவு நாள்களாகச் செய்கிறார் என்று கேட்டேன். 3 ஆண்டுகளாகச் செய்வதாகச் சொன்னார். எப்படி இந்த யோசனை வந்தது என்று கேட்டேன், “என்னால் பொருளுதவி அதிகம் செய்ய இயலாது.

இந்த முதியோர் இல்லத்துக்கு ஒருநாள் சென்றபோது, பொருளாகத்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களால் இவர்களுடன் நேரம் செலவழிக்க முடிந்தால், அதுவும் பெரிய விஷயம்தான் என்றார்கள்.

அவர்களுடன் பேசுவதோடு என்னால் முடிந்த சிறு உதவிகளையும் செய்துவிட்டு வருகிறேன். ஒவ்வொரு ஞாயிறும் போக வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. நம்மால் முடிந்தபோது சென்றால் போதும். அவர்களுக்கும் மகிழ்ச்சி; நமக்கும் மகிழ்ச்சி” என்றார். நானும் இப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

SCROLL FOR NEXT