வாழ்வு இனிது

வண்ணத்துப்பூச்சி பூங்கா | சூழலியல் சுற்றுலா

திலகா

திருச்சியில் உள்ள மேலூர் நடுக்கரை கிராமத்திலிருக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்குப் பயணித்தோம்.

வயல்கள், தோப்புகள், கிராமங்களைக் கடந்து அமைந்திருந்தது அந்தப் பிரம்மாண்டமான பூங்கா. நுழைந்ததும் செயற்கை நீரூற்றுக்கு மேலே மிகப் பெரிய நீல வண்ணத்துப் பூச்சியின் உருவம் நம்மை வரவேற்றது. இதுபோல் புழு, வண்ணத்துப் பூச்சி, தட்டான், எறும்பு, வெட்டுக்கிளி, வண்டுகள், பூக்கள் போன்ற உருவங்களை மிக நேர்த்தியாகப் பூங்காவின் உள்ளே ஆங்காங்கு செய்து வைத்திருக்கிறார்கள்.

வண்ணத்துப் பூச்சிகளுக்குப் பிடித்த முன்னூறுக்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கே உள்ளன. வண்ணத்துப்பூச்சிகளின் வகைகள் பற்றிய குறிப்புகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் கோடைக்காலத்தில் சென்றதால் மரங்களிலும் செடிகளிலும் பூக்கள் அதிகம் இல்லை. எனவே வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. ஆனாலும் அது குறையாகத் தெரியவில்லை.

அழகான மயில்கள் நடைபாதைக்கு வந்து, எங்களை ஒளிப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று நீண்ட நேரம் நின்றன. அருகில் சென்றாலும் அவை பதற்றம் அடையவில்லை. படம் எடுத்தது போதும் என்கிற நிலைக்கு நாமும் மயில்களும் வந்த பிறகே, அவை புதர்ச் செடிகளுக்குள் ஓடின. இவ்வளவு அருகில் மயில்களைப் பார்த்தது அதுவே முதல் முறை என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறிது தூரம் நடந்த பிறகு இரண்டு கீரிப்பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டோம். அடர்த்தியான மரங்களில் இருந்து பறவைகளின் விதவிதமான ஒலிகளைக் கேட்டோம். வண்ணத்துப் பூச்சிகளின் வளர்ப்புக்காக கண்ணாடியிலான அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் வந்தவண்ணம் இருந்தனர்.

நீண்ட தூரம் நடந்து பார்க்க வேண்டிய பூங்கா என்பதால் ஆங்காங்கு அமர்ந்து ஓய்வெடுக்
கும் விதத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டி ருக்கின்றன. தாகத்தையும் பசியையும் போக்குவதற்குக் கடைகளும் இருக்கின்றன. காலையில் சென்றால் மாலை வரை மெதுவாகச் சுற்றிப் பார்த்துவிட்டு, சாப்பிட்டு, ஓய்வெடுத்து விட்டுத் திரும்பலாம். நேரமின்மை யால் சில மணி நேரத்தில் திரும்பினாலும் அது தந்த புத்துணர்வுக்குக் குறைவில்லை!

SCROLL FOR NEXT