வாழ்வு இனிது

‘பதுங்கும் நிழல்’ | பாற்கடல் 4

கலாப்ரியா

கோபுரத்தினுள் அதன் உச்சிக் குச் செல்ல படிக்கட்டுகள் இருக்கும். அவை ஒரு தளத்திற்குள் வருவது இடதுபுறம் இருந்தால், அடுத்த தளத்திற்கு ஏறுவது வலது புறம் இருக்கும். இதை நான் முதன் முதலில் என் ஆறு, ஏழு வயதில் ஏறிய சுசீந்திரம் கோயிலில்தான் பார்த்தேன்.

வயது தான் ஆறு. நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அப்போதே கொஞ்சம் அதிகப்பிரசங்கியான பையன் நான். அது, “மாமாவுக்கு அஞ்சாம் வாய்ப் பாடு சொல்லிக் காண்பி, ஒரு இங்லீஷ் போயம் சொல்லு, அதுதாண்டே டூ ஃபோர் சிக்ஸ் எய்ட் சொல்லிக் காண்பி” என்றதும்,

“டூ ஃபோர் சிக்ஸ் எய்ட்
மீரா அட் தி கார்டன் கேட்
ஈட்டிங் ப்ளாண்டன் ஆஃப் எ ப்ளேட்
டூ ஃபோர் சிக்ஸ் எய்ட்”

என்று பெருமையுடன் சொல்லிப் பீற்றிக் கொள்வதில் ஆரம்பித்த அதிகப்பிரசங்கித் தனமாக இருக்கலாம். அப்போதெல்லாம் எல்.கே.ஜி, யு.கே.ஜி, ரைம்ஸ் எல்லாம் ஏது? ‘பாலர் வகுப்பு’ என்று ஒன்றாம் வகுப்புக்கு முன்பு ஒன்று, அதுவும் சில பள்ளிகளில் உண்டு. அதில் ஆனா ஆவன்னா, ஆத்திசூடி போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள். எழுதவெல்லாம் வேண்டாம். ஒன்றாம் வகுப்பில் சேரவே ஆறு வயது ஆக வேண்டும்.

அதற்கும் ஒரு தேர்வு உண்டு. அதாவது வலது கையால் இடது காதைத் தலைக்கு மேலாகச் சுற்றித் தொட வேண்டும். காது எட்டவில்லை என்றால், `நோ அட்மிஷன்.’ அடுத்த வருடம் வா என்பார்கள். இரண்டு வயதிலேயே படிக்கவைக்கிற ப்ளே ஸ்கூல் எல்லாம் கிடையவே கிடையாது. `டூ ஃபோர் சிக்ஸ் எய்ட்’ பாடலுக்கு ரைம்ஸ் என்கிற பெயர்கூடக் கிடையாது. அதெல்லாம் போயம்.

கோயிலில் ஒரு டார்ச் லைட்டுடன் முன்னே ஒரு வழிகாட்டி கோபுரம் பார்க்க அழைத்துச் சென்றார். ``இப்பத்தான் நல்ல வெளிச்சமா இருக்கே, அப்புறம் டார்ச் லைட் எதுக்கு” என்று பிரசங்கம் செய்தேன். அந்த வழிகாட்டி சிரித்துக் கொண்டே, ``அப்படியா மக்கா” என்றார். ``மக்காவா அப்படீன்னா” என்றேன்.

கூடவந்த அக்கா, ``சும்மா வர மாட்டியாலே” என்று அதட்டினாள். கோபுரத்திற்கு ஏறும் படிக்கட்டு அருகே வந்ததும் வெளிச்சம் சற்றே மங்கி இருந்தது. அதன் வாசல் கதவைத் திறக்கவே சற்றுச் சிரமமாயிருந்தது. படிகள் இருளில் இருந்தன. ``தம்பியாபுள்ளே ஏறுங்க பார்ப்போம்” என்றார். ``இருட்டில் எப்படி ஏற?” என்றேன். சிரித்துக்கொண்டே டார்ச் லைட்டை அடித்தார். அப்போதுதான் டார்ச் லைட்டின் அவசியம் புரிந்தது.

நல்லவேளை முகத்தில் வழிந்த அசடைப் பார்க்க வெளிச்சமில்லை. வௌவால்கள் வேறு முகத்தில் மோதின. பயமாக இருந்தது. அக்கா என் கையைப் பிடித்துக் கொண்டாள். நான் அவள் கையை. முதல் தளத்தில் நுழைந்ததும் வலது புறத்தி லிருந்து இடது புறமாக அழைத்துப் போய், படிக்கட்டுகளைக் காண்பித்தார். இரண்டு தளம் ஏறினதும் டார்ச்சை அணைத்தார். இப்போது வெளிச்சம் நன்றாக வர ஆரம்பித் தது. வௌவால் நாற்றமும் இல்லை.

மேலே போகப் போக நல்ல வெளிச்சமும் ஆளைத் தழுவுகிற காற்றும் அடிக்க ஆரம்பித்தது. எனக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டு போயிற்று. ஆய் ஊய் என்று கத்திக் கொண்டே பத்துப் பதினோரு தளத்தையும் ஏறினோம். வழிகாட்டிக்கு என்னை மிகவும் பிடித்துப் போயிற்று. ஒவ்வொரு தளத்திலும் அதிலுள்ள மாட வாசல் வழியாக ஊரைக் காண்பித்தார். வயலும் தெப்பக்குளமும் மாடும் மனிதர்களும் சிறுத்துக்கொண்டே போயின. நாங்கள் போயிருந்த மாட்டு வண்டி கீழே ஒரு பொம்மை போலத் தெரிந்தது இன்னும் மறக்கவில்லை.

கோபுரங்களை வெற்றியின், ஆளுமையின் சின்னமாக மன்னர்கள் கட்டியிருப்பார்கள் என்கிறார்கள். அவை காவல் கோபுரங்களாகவும் பயன்பட்டி ருக்கலாம். எனக்குத் தோன்றும் தமிழ் நாட்டில் கோயில்களே அரண்மனை களாக இருந்திருக்குமோ என்று.

ஏனெனில் இவ்வளவு கோயில்கள் உள்ள தமிழகத்தில் வடக்கே உள்ளது போல அரண்மனைகளே இல்லையே ஏன்? கோபுரக்கலசங்கள் விதை வங்கி போலச்செயல்பட்ட ஆதாரங்கள் உள்ளன. தென்காசி கோபுரத்தில் அரசு ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன.

அங்கேயே நவாப் அல்லது ஆங்கிலேய கம்பெனி ஆட்சியில் அரசு அலுவலகம் ஒன்று இயங்கியதாகவும் அது தீக்கிரையாகி, கோபுரம் இரண்டு பகுதிகளாக இடிந்து விட்டதாகவும் செய்திகள் உண்டு. பல வருடங்களாக அது இடிந்த மொட்டைக் கோபுரமாகவே விளங்கிற்று. 1990 வாக்கில்தான் மறுபடி கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

கோபுரங்களில் அவ்வப்போது நடைபெறும் திருப்பணிகளைச் சாக்கிட்டு, அவ்வப்போது பிரபலமாக இருப்பவர்கள் சிலை இடைச் செருகலாக வந்துவிடும். திருநெல்வேலி நெல்லையப்பர் சன்னதிக்குத் தெற்கே இருக்கும் கோபுரத்தில் நேரு சிலை இருக்கும். நானறிய 1974இல் நடைபெற்ற திருப்பணியின் போது அந்தத் திருப்பணிக்குப் பெரிதும் உதவியாக இருந்த கிருபானந்த வாரியார் சிலை செய்து வைத்தார்கள். திருப்பணி முடிந்து குடமுழுக்கிற்கு முந்தின தினம் கோபுரங்களைப் பார்வையிட அனுமதித் தார்கள், அப்போது நானே சென்று பார்த்தேன்.

தஞ்சாவூர் கோயில் கோபுரத்தில் இருக்கும் தொப்பி அணிந்த ஆங்கிலேயர் போன்ற உருவம் மார்கோபோலோ என்பார்கள். அதுவும் ஓர் இடையில் வந்த செருகலாக இருக்கும். எல்லாவற்றிற்கும் இடம் கொடுப்பவையே கோபுரங்களும் கோயில்களும். கம்பீரமாக நிற்கும் கோபுரங்களின் நிழல்களைப் பார்ப்பதே அழகுதான். ஆனால், அவை உச்சி வெயிலுக்குப் பயந்து அஸ்திவாரங்களுக்குள் பதுங்குவதுதான் ஏனென்று புரியவில்லை! இதை நான் ஒரு கவிதையில் அதிசயித்திருப்பேன்.

‘உச்சிவெயிலுக்குப் பயந்து அஸ்திவாரங்களுக்குள் பதுங்குது கோபுர நிழல்!’

(அமிழ்தெடுப்போம்)

- kalapria@gmail.com

SCROLL FOR NEXT