நதிகள் இணைப்பு ஏன் அவசியம்?

By அ.நாராயணமூர்த்தி

கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டம் ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்படும் என்று 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நதிகளை இணைக்கும் இத்திட்டத்தின் மூலம், 9.08 லட்சம் ஹெக்டேர் பாசனப் பகுதியும், 62 லட்சம் மக்களுக்குக் குடிநீர் வசதியும், 103 மெகாவாட் நீர் மின் உற்பத்தியும், 27 மெகாவாட் சூரிய மின் உற்பத்தியும் உருவாக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமங்கங்கா-பிஞ்சல், பார்-தாபி-நர்மதா, கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு-காவிரி ஆகிய ஐந்து நதி இணைப்புகளின் வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தால் பயனடையும் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டவுடன், இந்நதி இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால், பல ஆண்டுகளுக்குப் பிறகு நதிகள் இணைப்புத் திட்டத்திற்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டக்கனவு இப்போது நிறைவேறியுள்ளது. யமுனை ஆற்றின் துணை நதிகளான, கென் நதியிலிருந்து பெட்வா நதிக்குத் தண்ணீரை எடுத்துச்செல்ல இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதில், 2 கிமீ நீளச் சுரங்கப்பாதையுடன், மொத்தம் 221 கி.மீ. நீளக் கால்வாய்கள் இருக்கும். நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநிலங்களிலுள்ள, 13 மாவட்டங்கள் இத்திட்டத்தால் பயனடையும். குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள புந்டேல் கண்ட் பகுதியானது இத்திட்டத்தால் மிகுந்த பயனடையும். ஏன் நதிகள் இணைப்புத் தேவை, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பலன்கள்

நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது, ஒரு நதியின்உபரி நீரை செயற்கையான முறையில் கால்வாய்கள் அமைத்து தண்ணீர்ப் பற்றாக் குறையுள்ள மாநிலங்களின் பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் செயல்முறையாகும். நதிநீர் இணைப்புப் பற்றி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பேசப்பட்டுள்ளது. நீர் ஆதாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்காக பத்தொன்பதாம் நூற்றாண்டில் சர் ஆர்தர் காட்டன், கே.எல்.ராவ் ஆகியோரால் இந்திய நதிகளை இணைப்பதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன.

1980-களில் நாட்டின் நீர் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான தேசிய முன்னோக்குத் திட்டத்தை (National Perspective Plan) நீர்வள அமைச்சகம் வகுத்தபோது நதிகளை இணைக்கும் திட்டம் வலுப்பெறத் தொடங்கியது. நதிகளை இணைக்கும் இந்த லட்சியத் திட்டமானது, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, விரைவாகச் செயல் படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டு, வெற்றியை நோக்கி நகர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை (National Water Development Authority) வடக்கு இமயமலை நதிகளில் 14 நதிகள் இணைப்பையும், தெற்கு தீபகற்ப நதிகளில் 16 நதிகள் இணைப்பையும் அடையாளம் கண்டு அறிக்கை சமர்ப்பித்தது.

தண்ணீருக்கு மாற்றுப் பொருள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. விவசாய நிலத்தில் முப்போக விளைச்சலை உருவாக்குவதுடன், மானாவாரிப் பயிர்களை விட, இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக மகசூலை ஈட்ட உதவுவதால், நீரானது விவசாய வளர்ச்சியின் என்ஜினாகக் கருதப்படுகிறது. தண்ணீர்த் தேவைக்காகப் பருவமழையையே நம் நாடு பெரிதும் நம்பியுள்ளது. பருவமழை குறைகின்ற காலத்தில் விவசாய உற்பத்தியும், பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

ஓராண்டுக்கான மழையின் அளவில் பெரும்பகுதி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் நம் நாட்டிற்குக் கிடைக்கிறது. ஆனால், மழையின் அளவு மாநிலங்களுக்கும் மாநிலம் பெரிதும் வேறுபடுகிறது. கென்-பெட்வா போல், நதிநீர் இணைப்புத் திட்டம் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டால், வெவ்வேறு ஆற்றுப்படுகைகளில் உள்ள உபரி நீரை நீர்ப்பற்றாக்குறையுள்ள நதிகளுக்கு மாற்றி, வெள்ள அபாயங்களைக் குறைக்க முடியும். இல்லையெனில், நீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலையே நீடிக்கும்.

உபரி நீரைத் தண்ணீர்ப் பற்றாக்குறையுள்ள பகுதிக்குத் திருப்பி விடுவதால் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும், வறுமையும் குறையும். தேசிய ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுக்கான ஆணையத்தின் (National Commission on Integrated Water Resources Development, 1999) மதிப்பீட்டின்படி, வரும் 2050-ம் ஆண்டில் 150 கோடி மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய, ஆண்டுக்கு 4500 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவைப்படும். இந்த இலக்கை அடைய, 2050-க்குள் நாட்டின் பாசனப் பரப்பை 1600லட்சம் ஹெக்டேர்களாக விரிவுபடுத்த வேண்டியுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால்சமீப ஆண்டுகளில் கால்வாய்ப் பாசனப் பரப்பளவில் பெரிய வளர்ச்சி ஏற்படாத காரணத்தால் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவை தவிர, வட இந்தியாவில் பாயும் கங்கா-பிரம்மபுத்ரா-மேக்னா ஆற்றுப்படுகைகளில் வாடிக்கையாக வெள்ளப் பேரிடர் ஏற்படுவதால், அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மறுபுறம், மேற்கு மாநிலங்களும் (மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத்), தீபகற்ப மாநிலங்களும் (ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு) தொடர் நீர்ப்பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, மொத்த நீா்ப்பாசனப் பரப்பளவில் 1960-63 முதல் 2014-17 வரையிலான காலகட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் பெறாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் மூலம் அதிகப்படியான வெள்ள நீரைக் கொண்டுள்ள மாநிலங்களிலிருந்து தண்ணீர்ப் பற்றாக்
குறையுள்ள பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல வழிவகை செய்வதன் மூலம், தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள மேற்கு மாநிலங்களிலும், தீபகற்பப் பகுதி மாநிலங்களிலும் சுமார் 35 மில்லியன் ஹெக்டேர்கள் கூடுதல் நீர்ப்பாசனம் வழங்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பு, பயிர் உற்பத்தி, விவசாய வருமானம் அதிகரிக்கும்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தற்போது நீருக்கான தேவையில் விவசாயம், தொழில்துறை, குடிநீர் ஆகிய துறைகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, குடிநீர்ப் பிரச்சினை நாளுக்கு நாள் பூதாகரமாக அதிகரிக்கிறது. நிதி ஆயோக் 2018-ல் வெளியிட்டுள்ள ‘கூட்டு நீர் மேலாண்மைக் குறியீடு’ (Composite Water Management Index) அறிக்கையின்படி, 6000 லட்சம் இந்தியர்கள் நீருக்காகக் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கின்றனர், மேலும் பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காததால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் இறக்கின்றனர். தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நீரின்றித் தவிக்கும் நெருக்கடி நிலையைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுமார் 34 ஜிகா வாட் கூடுதல் நீர் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யமுடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கவலைகள்

நதிகளை இணைக்கவேண்டும் என்ற கருத்து உருவான நாளிலிருந்தே அது தொடா்பான சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. வெள்ளத்தையும், வறட்சியையும் தடுப்பதற்கும், குடிநீர்ப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், நீர்ப்பாசனத்தையும், உணவு தானிய உற்பத்தியையும் அதிகரிப்பதற்கும் இத்திட்டம் ஒரே தீர்வாக இருக்க முடியும் என்றாலும், இதனைப் பெரும் செலவிலான ஆடம்பரமான திட்டம் என்று சிலர் வாதிடுகின்றனர். நதிநீர் இணைப்புத் திட்டம், சீர்படுத்த முடியாத சேதங்களை ஏற்படுத்தும் என்று சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியலாளர்களும் கூறிவருகின்றனர்.

அணைகள்கட்டி, கால்வாய்கள் அமைத்து நீரின் வேகத்தை மாற்றி அமைப்பதால் வெள்ளப்பெருக்குக்கும், நீா் தேங்குவதற்கும் வழிவகுக்கும், இயற்கையான வடிகால்களை இத்திட்டம் மாற்றுவதால் பரந்த நிலப்பரப்புகள் நீரில் மூழ்கி, எண்ணற்ற மக்கள் இடம்பெயர்வதற்கும் வழிவகுக்கும் என்ற வாதமும் தொடர்கிறது. ஓர் ஆற்றிலிருந்து உபரி நீரைப் பெரிய அளவில் திருப்பிவிடுவதால் ஆற்றின் படுகைகளை வளமானதாக வைத்திருக்க முடியாமல் போய்விடும், இதனால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கலாம் எனவும் வாதிடப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கும் வளர்ச்சிக்கும் இடையே முரண்பட்ட விவாதங்கள் தொடர்ந்தாலும், எந்தவொரு நீா்த் தேக்கத் திட்டமும் 100 சதவீதம் சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் அமைப்பது கடினம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் உலகில் ஏதேனும் நீா்த் தேக்கத் திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளதா? ஒரு திட்டத்தை நிராகரிப்பதற்கு முன், அதன் நன்மைகளுடன் செலவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் அவசியம்.

நதிநீர் இணைப்புத் திட்ட யோசனை, தண்ணீர்ப் பற்றாக்குறை, வறுமை, வெள்ளம் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாகத் தோன்றுகிறது. ஆனாலும், இத்திட்டத்தைப் பெரிய அளவில் செயல்படுத்துவதற்கு முன், அதைப் பொருளாதார ரீதியாக சாத்தியமாக்குவதற்கு, நல்ல அறிவியல், தொழில்நுட்ப மதிப்பீடு கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். பற்றாக்குறையாக இருக்கும் நீர்வளத்தை, இலவசமாக யார் பகிர்ந்துகொள்ள முன்வருவார்கள் என்ற கவலை சிலருக்கு இருக்கலாம்.மாநிலங்கள் தங்கள் உபரி நீரை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்க விரும்பாததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.

இதைப்பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். நீர் உபரி மாநிலம், நீர்ப் பற்றாக்குறையாக இருக்கும் மாநிலத்திற்குத் தண்ணீரை வழங்குமானால், உபரி நீரைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் மாநிலத்திற்குப் பண ஊக்கத்தொகை அல்லது பிற சலுகைகள் கொடுத்து, அதைப் போதுமான அளவிற்கு ஈடுசெய்யவேண்டும். எது எப்படியிருந்தாலும், ஏற்கனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதால், சுற்றுச்சூழல் பேரழிவை உருவாக்காமல், தண்ணீரையும் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்த, நதிகளை இணைத்திடும் விரைவான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும்.

பேராசிரியர் அ.நாராயணமூர்த்தி
narayana64@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

18 mins ago

ஓடிடி களம்

39 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

6 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்