சவூதி மாறுகிறது! 

By முகம்மது ரியாஸ்

riyas.ma@hindutamil.co.in

சவூதி அரேபியா இரண்டு விசயங்களுக்கு பெயர் பெற்றது. ஒன்று, அதன் எண்ணெய் வளப் பொருளாதாரம். மற்றொன்று, அங்கு நிலவும் மதரீதியிலான கட்டுப்பாடுகள். தற்போது அவை இரண்டும் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகிவருகின்றன. 1938ம் ஆண்டு சவூதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அது முதலே, உலக அளவில் பொருளாதாரரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவூதி மாறத்தொடங்கியது.

அதன் ஊடாக, சவூதியில் தீவிரமாக வேறூன்றத் தொடங்கிய வஹாபியக் கோட்பாடு, அந்நாட்டை சமூகரீதியாக பெரும் இறுக்கத்துக்குள் ஆழ்த்தியது. பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது; கார் ஓட்டுவதற்கு அனுமதியில்லை; பெண்கள் தங்கள் உறவினர் அல்லாத பிற ஆண்களுடன் வெளியே செல்ல முடியாது; குடும்பத்திலுள்ள ஆணிடம் அனுமதி வாங்காமல் பெண் தனியாக வெளிநாடுகளுக்குப் பயணிக்க முடியாது; மால்களிலும் ஆண்கள், பெண்கள் என்று தனித் தனிப் பிரிவு. இவை பெண்கள் சார்ந்து பரவலாக பேசப்படும் கட்டுப்பாடுகள். இவை தவிர அன்றாட நடைமுறைகளில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் அங்கு உண்டு.

ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் சவூதியின் முகம் மாறிவருகிறது. திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது; ஆண் துணையின்றி விடுதிகளில் பெண்கள் தங்கலாம்; ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லலாம்; பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த வரிசையில். சவூதியின் சமீபத்திய அறிவிப்பு ஒன்று கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிப் பெருக்கிகளில் மூன்றில் ஒரு பங்கு அளவே ஒலி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சவூதி போன்ற ஒரு நாட்டில் இப்படி ஒரு அறிவிப்பு வருவதென்பது சாதாரண ஒன்றல்ல.

சவூதியின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பங்கு கணிசமானது. சவூதிக்கு ராணுவ உதவி செய்வது அமெரிக்காதான். இவ்வாறாக, கடந்த ஐம்பது வருடங்களாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களின் புழக்கம் சவூதியில் அதிகம் இருந்தபோதிலும், இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ளாத அந்நாடு, எப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவந்தது? 2017ம் ஆண்டு ஜூன் மாதம் சவூதியின் பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் அறிவிக்கப்பட்டார். 35 வயதே ஆகும் அவர், சவூதியின் இளம் தலைமுறையின் நம்பிக்கைக்குரிய ஆளுமையாகத் திகழ்கிறார்.

சவூதியின் பொருளாதாரம் முழுமையாக கச்சா எண்ணெயை சார்ந்தே இருக்கிறது. தற்போது உலகம் மின்சார வாகனங்களுக்கு மாறிவருகிற நிலையில், நீண்ட நாட்களுக்கு அந்நாடு கச்சா எண்ணெயை மட்டும் நம்பி தன் பொருளாதாரத்தை கட்டமைக்க முடியாது. எனவே, கச்சா எண்ணெய் அல்லாத பிற வழிகளிலும் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான நிர்பந்தத்தில் சவூதி இருக்கிறது. அதன் நீட்சியாகவே முகம்மது பின் சல்மான் ‘விசன் 2030’ என்ற திட்டத்தின் கீழ் சவூதியின் பொருளாதாரக் கட்டமைப்பையும், சமூகக் கட்டமைப்பையும் மேம்படுத்தும் முற்சிகளை மேற்கொண்டுவருகிறார். இதன்பொருட்டு மதரீதியிலாக அங்கு நிலவும் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவருகிறார்.

ஆண், பெண் என இருபாலரும் கலந்துகொள்ளும் வகையில் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், நவீன உணவு விடுதிகள் போன்ற பொதுக் கேளிக்கைகளில் அதிக முதலீடு செய்வதன் வழியே சவூதியை சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு 2016ம் ஆண்டு 19 சதவீதமாக இருந்தது. தற்போது அது 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. முகம்மது பின் சல்மானின் இத்தகைய முன்னெடுப்புகளை பொருளாதார நிர்பந்தத்தின்பாற்பட்டதாக சுருக்கிவிட முடியாது. அவர் தன்னளவில் ஒரு தொலைநோக்காளராகவே வெளிப்படுகிறார்.

அதேசமயம் அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் உள்ளன. தனக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்களை உடனே முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்று அவரை விமர்சிக்கின்றனர். அவர் பொறுப்புக்கு வந்த பிறகு, அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தப் போராளிகள் பலரை அவர் சிறையில் அடைத்திருக்கிறார். அனைத்திலும் உச்சமாக, புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலைக்கு முகம்மது பின் சல்மான்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், சவூதியின் இளைய தலைமுறையினர்களில் பெரும்பாலானோர் முகம்மது பின் சல்மானை ஒரு சீர்திருத்தவாதியாகப் பார்க்கின்றனர்.

இப்போது அந்தப் பார்வை சவுதியைக் கடந்தும் நீளுகிறது. மசூதிகள் செயல்பாடு சம்பந்தமாக சவுதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பை, மத அடிப்படைவாதத்திலிருந்து படிப்படியாக விடுபட்டு, தாராளச் செயல்பாட்டுக்குள் சவுதி செல்வதற்கான அறிகுறிகளில் ஒன்றாக இந்தியாவிலேயே பலரும் பேசுகின்றனர். இந்த சமயத்தில் நேர் எதிராகக் கொஞ்சம் கொஞ்சமாக மத அடிப்படைவாத வாழ்க்கை நோக்கி ஜனநாயக இந்தியா நகர்வது எவ்வளவு பெரிய முரண்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்