பிரிட்டனிலிருந்து வெளியேறுகிறது மஹிந்திரா இ2ஓ

பிரிட்டனில் தனது பேட்டரி கார் விற்பனையை நிறுத்திக் கொள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பிரபல பேட்டரி காரான இ2ஓ சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரிட்டனிலிருந்து ஐரோப்பிய சந்தையில் தடம் பதிக்கலாம் என்ற உத்தியில் இ2ஓ கார் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிருந்து நார்வே, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டிருந்தது. ஓராண்டுக்கும் குறைவான காலத்தில், பேட்டரி கார்களுக்கான வரவேற்பு போதிய அளவு பிரிட்டன் மக்களிடையே இல்லாததால் அங்கிருந்து தனது செயல்பாடுகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

கார் விற்பனை மற்றும் மஹிந்திரா நிறுவன செலவு ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளி அதிகரித்து வந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து இங்கிருந்து தனது செயல்பாடுகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

தற்போதைக்கு இந்தியச் சந்தையில் கவனம் செலுத்தப் போவதாகவும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேட்டரி கார்களுக்கு பிரிட்டனில் தேவை ஏற்படும் போது மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE