செயற்கை நுண்ணறிவு (ஏஐ), நிதி தொழில் நுட்பம் (பின்டெக்) போன்ற பிரபலமான முதலீட்டு கருப்பொருள்களுக்கு அப்பால்,
கிராமப்புற இந்தியா கவர்ச்சி கரமான நீண்ட கால முதலீட்டு கருப்பொருள்களில் ஒன்றாக இன்று மாறி வருகிறது. கிராமப்புற இந்தியாவை இனி நாம் வளர்ச்சியில் இருந்து ஒதுக்கிவைக்க முடியாது.
நுகர்வு, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியின் மையமாக கிராமங்கள் உருமாறி வருகின்றன. உள்கட்டமைப்பு, சேவைகள் மேம்படும்போது அங்கு வருமானம் அதிகரிக்கும், செலவுகள் மேம்படும். அப்போது, அத்தியாவசிய பொருட்கள், நிதி, போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் எரிசக்தி உள்ளிட்டவற்றின் வணிகம் மேம்படும்.
முன்னேற்றம் என்பது சிறந்த உள்கட்டமைப்பிலிருந்து தொடங்குகிறது. அதற்காக, சாலைகள், மின்சாரம், குடிநீர், சுகாதார வசதிகளை சீராக மேம்படுத்தப்பட வேண்டும். ஸ்மாட்ர்ட்போன், இணைய இணைப்பு வசதிகள் குறைந்த செலவில் மக்களிடையே பரவலாகியுள்ளது. இது, லட்சக்கணக்கானவர்களை ஒருங்கிணைத்துள்ளது. கற்றல், பரிவர்த்தனை, கடன் வாங்குதல் மற்றும் ஷாப்பிங் செய்யும் வழிமுறைகளை ஸ்மார்ட்போன் மற்றும் இணைய சேவை வரவு அடியோடு மாற்றியுள்ளது.
பெண்கள் பெரும்பாலும் குறு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பணிகளைப் பெற்று குடும்பத்துக்கு இரண்டாவது வருமானத்தை தேடித்தருகிறார்கள். கூடுதலாக, தொழிலாளர்கள் அருகிலுள்ள நகரங்களில் வேலைவாய்ப்பைக் கண்டுபிடித்து உழைத்து வீட்டிற்கு பணம் அனுப்புகிறார்கள். பணிமுடித்து திரும்பும் அவர்களிடம் புதிய திறன் மற்றும் யோசனைகள் நிரம்பிக்கிடக்கின்றன. குளிர்பதன கிடங்குகள், உணவு பதப்படுத்துதல், பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட துறைகள் வேகமாக வளர்கின்றன.
வீட்டுவசதி, சுகாதாரம், நீர்ப்பாசனம், நேரடி பரிமாற்றங்களுடன் கூடிய திறன் பயிற்சி மற்றும் எளிதான கடன் போன்ற அரசுத் திட்டங்கள் கிராமவாசிகளின் கைகளில் பணம் கிடைக்க வழி வகுத்ததுடன் மட்டுமல்லாமல் அவர்களை மேலும் நம்பிக்கையூட்டுகின்றன. உள்ளூர் உற்பத்தியில் கவனம் செலுத்துவது சிறு நகரங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, அதே நேரத்தில் இ-காமர்ஸ் தளங்கள் கிராமப்புற சந்தைகளில் விநியோகச் சங்கிலிகளை ஆழமாக விரிவுபடுத்தி வருகின்றன.
கிராமப்புற இந்தியா அதிநவீன தொழில் நுட்பத்தின் கவர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை. என்றாலும் அதன் நிலையான நீடித்த வளர்ச்சி சக்திவாய்ந்த செல்வத்தை உருவாக்கும் திறன் கொண்டது. விவசாய உள்ளீடுகள், குறைந்த விலை உபகரணங்கள், நுண்நிதி, கட்டுமானப் பொருட்கள் தளவாடங்கள் என கிராமப்புற முதலீட்டில் வாய்ப்புகள் பன்முகத்தன்மை கொண்டவையாக உள்ளன. அதேநேரத்தில், பருவம் தவறிய மழை, நிலையற்ற உணவு விலை உள்ளிட்ட அபாயங்களும் நீடிக்கத்தான் செய்கின்றன. புத்திசாலி முதலீட்டாளர்கள் பல்வகைப்படுத்தல், இருப்பு நிலை குறிப்பு மற்றும் நீண்ட கால திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
பங்குகளில் விருப்பம் இல்லாதவர்கள், தரவுப் பகுப்பாய்வை சவாலாக கருதுபவர்களுக்கு கிராமப்புற கட்டமைப்பில் கவனம் செலுத்தும் பரஸ்பர நிதி சிறந்த முதலீட்டு வாய்ப்பினை வழங்குகிறது. அத்தகைய ஒரு நிதி திட்டம்தான் ஐசிஐசிஐ புருடென்ஷியல் கிராமப்புற வாய்ப்புகள் நிதி. இந்த திட்டம் முதன்மையாக கிராமப்புற இந்தியாவின் உருமாறும் வளர்ச்சியிலிருந்து பயனடையும் துறைகள் மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
- பி. ராமசாமி நிர்வாக இயக்குநர் & நிறுவனர், ஈஸி இன்வெஸ்ட்மென்ட்ஸ்