பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அடுக்கில் மாற்றங்கள் செய்யபட்டுள்ளன. தற்போது முன்னெடுத்துள்ள மாற்றத்துக்குப் பிறகு எல்லா பொருட்களுக்குமான ஜிஎஸ்டி 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகளில் அமைகிறது. வெகுசில பொருட்கள்கள் மட்டும் அவற்றின் உபயோகத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், அவை பாவ-வரிக்குள் (sin tax) வருகின்றன. இவற்றிற்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படும்.
ஆனால் பொதுவாக இவை தவிர பூஜ்ஜிய விகிதம் (Zero rated), வரி விதிக்கப்படாதவை (Nil rated), வரி விலக்கு பெற்றவை (Exempted), ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் வராதவை (Non-taxable) என்ற பிரிவுகளில் பல பொருட்கள் அடைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒரே மாதிரி பொருள் கொள்ளும் அளவில் அழைக்கப்படுகின்ற இந்த பிரிவுகளின் வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்.
உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit): உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) என்பது வணிகத்துக்கான கொள்முதல்களுக்கு செலுத்தப்படும் வரியைக் குறிக்கிறது. இதை வெளியீட்டு வரியின் மீது வரிசெலுத்தும்போது விலக்காக கோரலாம். நீங்கள் பதிவுசெய்யப்பட்ட டீலரிடம் இருந்து ஒரு தயாரிப்பு/சேவையை வாங்கும்போது, வாங்கியதற்கு வரி செலுத்துகிறீர்கள்.
விற்கும்போது, வரியை வசூலிக்கிறீர்கள். வாங்கும் நேரத்தில் செலுத்தப்பட்ட வரிகளை கழித்துக் கொண்டு விற்பனை மீதான வரியை அரசுக்கு செலுத்தலாம். இந்த வழிமுறை உள்ளீட்டு வரி வரவு பயன்பாடு என்று அழைக்கப்படுகிறது.
வரி விதிக்கப்படாதவை (Non-taxable): இந்த பொருட்கள் ஜிஎஸ்டி-க்கு அப்பாற்பட்டவை. மனித நுகர்வுக்கான மதுவகைகள், பெட்ரோலிய பொருட்கள் இதில் அடங்கும். மது மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிதான் மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ளது. எனவே இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. மது வகைகளுக்கு மாநில அரசு தனியாக வரிவிதிக்கிறது. பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் தனித்தனியாக வரி விதிக்கின்றன.
விலக்கு பெற்றவை (Exempted): கல்வி, சுகாதார சேவைகள் போன்றவை ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பொருட்கள்/சேவைகள் ஆகும். இதுபோன்ற வகைப்படுத்தப்பட்ட சேவைகளை மீண்டும் தனியாக அறிவிப்பதன் மூலம் திரும்ப வரிக்குள் கொண்டு வர முடியும்.
பூஜ்ஜிய விகிதம் (Zero-Rated): இவைவரிக்கு உட்பட்டவையே. ஆனால் தற்போது இதற்கு பூஜ்ஜிய வரி விகிதமாகும். எடுத்துக்காட்டாக ஏற்றுமதி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றுக்கு வரி பூஜ்ஜிய விகிதம் ஆகும். ஆனால் இந்த நிறுவனங்கள் ‘உள்ளீட்டு வரி வரவு’ பயனை பெற முடியும்.
நில் ரேட்டட் (Nil rated): நில் ரேட்டட் என்பது ஜிஎஸ்டி வரிக்கு உட்பட்டதே. ஆனால் இவற்றுக்கும் பூஜ்ஜிய வரியே. ஆனால் இவற்றுக்கு உள்ளீட்டு வரி வரவு பயன் கிடையாது. எடுத்துக்காட்டாக புதிய காய்கறிகள், உப்பு, பால் போன்றவை இதில் அடங்கும்.
- 1952kalsu@gmail.com