வணிக வீதி

வணிக உலகத்துக்கு கோடாக் சொல்லும் பாடம்

சுப.மீனாட்சி சுந்தரம்

கடந்த 1880-ல் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் தொடங்கிய கோடாக், புகைப்பட உலகில் புரட்சி செய்த நிறுவனம். பிரவுனி, இன்ஸ்டாமேடிக் போன்ற எளிய கேமராக்களையும், பிரபலமான மஞ்சள்-சிவப்பு பிலிம் ரோல்களையும் தயாரித்து புகைப்படம் எடுப்பதை எல்லோரும் செய்யக்கூடிய எளிய காரியமாக மாற்றியது. 1950-ல் கோடாக் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம், டெக்னிகலர் நிறுவனத்தைவிட எளிமையானதாக இருந்து உலகளவில் பிரபலமானது.

1964-ம் ஆண்டு வெளியான ‘காதலிக்க நேரமில்லை’, தமிழ் சினிமாவின் முதல் ஈஸ்ட்மேன் கலர் படமாக வரலாறு படைத்தது. அதன் பிறகு பல தமிழ் படங்கள் கோடாக்கின் ஈஸ்ட்மேன் கலர் பிலிம்களைப் பயன்படுத்தி, தமிழ் சினிமாவின் காட்சி அழகை மேம்படுத்தின. 70-களில் அமெரிக்க புகைப்பட சந்தையில் பிலிம் விற்பனையில் 90% பங்கும், கேமரா விற்பனையில் 85% பங்கும் கோடாக் வசம் இருந்தது. ‘கோடாக் தருணங்கள்’ (Kodak Moments) என்பது மக்கள் மனதில் ஆழமாக பதிந்த வார்த்தையாக மாறியது.

இந்த இமேஜிங் ராஜாவுக்கு பின்னாளில் பெரிய சோதனைகள் காத்திருந்தன. ஜப்பானிய நிறுவனங்களின் போட்டி முதல் சவால். இரண்டாவது சவால், பிலிமிலிருந்து டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு இத்துறை மாறியபோது அதைப் பின்பற்றாததால் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால், 1975-ல் உலகின் முதல் டிஜிட்டல் கேமராவை கோடாக்தான் கண்டுபிடித்தது.

ஆனால் அந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பை போதுமான அளவு பயன்படுத்தாமல், தங்கள் பழைய பிலிம் வணிகத்தையே விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டது. வளர்ந்த போட்டியும், குவிந்த கடன்களும் சேர்ந்து கோடாக்கை 2012-ல் ‘திவால் நிலை பாதுகாப்பு’ கோர வைத்தது. திவால் ஆன பிறகு கோடாக் ஒரு பெரிய மாற்றத்துக்கு உள்ளானது. நிறுவனம் லாபம் ஈட்டாத பல பிரிவுகளையும் காப்புரிமைகளையும் விற்றது. கேமரா தயாரிப்பை முழுவதுமாக நிறுத்தியது.

தற்போது ஒரு சிறிய நிறுவனமாக மாறி, வணிக அச்சகம், பேக்கிங்களுக்கான பிரிண்டிங், ஸ்பெஷல் மெட்டீரியல் தயாரிப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்துகிறது. பழைய காலத்தில் சாமானிய மக்கள் பயன்படுத்திய பிலிம் தயாரிப்பிலிருந்து கோடாக் ஏறக்குறைய விலகிவிட்டது.

ஆனால் சினிமாத் துறை மற்றும் சில பிற தொழில்களுக்கு இன்னும் பிலிம்களையும் அதற்கான ரசாயனங்களையும் தயாரித்து வருகிறது. அதேசமயம் வேறு நிறுவனங்கள், நுகர்வோர் பொருள்களில் கோடாக் பிராண்டைப் பயன்படுத்த உரிமையும் அளித்து வருகிறது. சமீப காலத்தில் கோடாக்கின் நிதி நிலைமை பற்றிய ஒரு அறிக்கை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில் ‘தொடர்ந்து செயல்படுவதில் கவலை’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தது. 12 மாதங்களுக்குள் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதாலும், உடனடியாக பணம் இல்லை என்பதாலும் கோடாக் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியுமா என்பதில் கணிசமான சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தது.

இதனால் கோடாக் பங்குகளின் மதிப்பு வெகுவாக வீழ்ந்தது. ஆனால் கோடாக், இது வெறும் சட்ட நடைமுறை மட்டுமே, நிறுவனத்தை மூடும்திட்டம் எதுவும் இல்லை என்று சொன்னது. நிர்வாகம் தங்களது 477 மில்லியன் டாலர்கடனில் பெருமளவு பகுதியை முன்னதாகவே செலுத்திவிடுவோம் என்று தெரிவித்தது. டிசம்பர் 2025-க்குள் ஓய்வூதிய நிதியிலிருந்து 300 மில்லியன் டாலர் பெற்று கடனை அடைத்துவிட்டு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘ஏறக்குறைய கடனற்ற’ நிறுவனமாக ஆகிவிட வேண்டும் என்பது அவர்களின் இலக்கு.

அத்துடன் கோடாக் நிறுவனம் பல்வேறு துறைகளில் தனது வணிகத்தை பரவலாக்கி வருகிறது. மருந்து உற்பத்திக்கான தொழிற்சாலை ஒன்றை கட்டி முடிக்கும் நிலையில் உள்ளது - இது அரசு விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளைத் தயாரிக்கும். ஏற்கெனவே கோடாக் மருந்து தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களை தயாரித்து வருகிறது.

இந்த பயணத்தில் பல சவால்கள் இருந்தாலும், கோடாக் நிறுவனம் தன்னை மாற்றிக் கொண்டு வியாபாரத்தை பலவிதமாக விரிவாக்கி, நிதியை சரியாக நிர்வகித்து எதிர்காலத்தை பாதுகாக்க உறுதியுடன் செயல்படுகிறது. நிறுவனத்தின் நம்பிக்கையான அணுகுமுறைகளையும் திட்டங்களையும் பார்த்தால் கோடாக் மூடப்போகிறது என்ற செய்திகள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை என்று தெரிகிறது.

கோடாக் நிறுவனத்தின் வரலாறு வணிக உலகுக்கு கீழ்க்கண்ட முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது:

புதிய கண்டுபிடிப்புகளையும் மாற்றங்களையும் ஏற்பது அவசியம்: ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது மட்டும் வெற்றிக்குப் போதாது. அதைப் பயன்படுத்த தன்னுடைய வணிக திட்டத்தையே மாற்றிக்கொள்ளும் பார்வையும் துணிவும் வேண்டும்.

புரட்சிகரமான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்: கோடாக் டிஜிட்டல் கேமராவை முதலில் கண்டுபிடித்தும், அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியது. வளர்ச்சியும் மாற்றமும் நிகழும்போது பழைய பாதையிலேயே தொடர்வதின் பின்விளைவுகளை இது எடுத்துக்காட்டுகிறது.

மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம்: திவால் நிலை போன்ற பெரும் சரிவுகளுக்குப் பிறகும், புதிய வணிக வாய்ப்புகளைத் தேடி, தன்னிடம் உள்ள வலிமைகளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் மீண்டு வர முடியும். கோடாக்கின் கதை புலப்படுத்தும் முக்கியமான உண்மை - தொழில் நுட்பமும் மக்களின் விருப்பங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், மிகப் பெரிய வெற்றிகரமான நிறுவனங்கள் கூட எப்போதும் விரைவாக மாறவும் எதிர்காலத்தை முன்னோக்கியும் சிந்திக்க வேண்டும்.

- somasmen@gmail.com 

SCROLL FOR NEXT