கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி விகிதம் என்பது 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு முறையாக உள்ளன.
இது 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கார், ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 28%-லிருந்து 18% ஆக குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் பலர் வீடுகளுக்கு தேவையான கார், ஏசி, பிரிட்ஜ், வாசிங்மெஷின் போன்ற உபகரணங்கள் வாங்குவதை தள்ளிப்போடும் மன நிலைக்கு வந்துள்ளதாக விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், தீபாவளி வரை இவற்றின் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசி சாதனங்களுக்கான ஜிஎஸ்டி 28% ஆக உள்ளது. அதேபோன்று, எல்இடி டிவி 32 அங்குலம் வரை 12 % ஜிஎஸ்டியம், 32-க்கு மேல் 28% ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. ஸ்மார்ட் டிவியை பொருத்தவரை எந்த அளவாக இருந்தாலும் 28% வரியே விதிக்கப்படுகிறது.
28 சதவீத ஜிஎஸ்டி என்பது 18 சதவீதமாக குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் கார், ஏசி, டிவி விற்பனை தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இது, விநாயகர் சதுர்த்தி, ஓணம், துர்கா பூஜை பண்டிகை கால விற்பனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
எனவே, திருத்தப்பட்ட வரி விகிதங்களை அக்டோபர் மாதத்துக்கு அதாவது தீபாவளிக்கு முன்பாகவே அரசு வெளியிட வேண்டும் என்று வீட்டு உபயோக தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
அப்போதுதான் பண்டிகைக் கால கொள்முதல் மற்றும் விற்பனை சூடுபிடிக்கும் என்பது இத்துறை சார்ந்த வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. அத்துடன் விற்பனைக்கு ஆதரவாக சலுகைகள் மற்றும் எளிதான நிதி உதவி அறிவிப்புகளையும் வெளியிட வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ப்ளூஸ்டார் நிர்வாக இயக்குநர் தியாகராஜன். கூறும்போது, "இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் ஏசி வாங்க திட்டமிட்டிருந்த நுகர்வோர் பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு மலிவான விலைக்காக காத்திருக்கின்றனர். ஜிஎஸ்டி வரி குறைப்பை பொருத்தமட்டில் புதிய வரி விகிதங்களுடன் மாநில அரசு உடன்படுமா அல்லது கூடுதல் வரிகள் ஏதேனும் இருக்குமா என்பது குறித்து தற்போது வரை எந்த தெளிவும் இல்லை.
திருத்தப்பட்ட வரி விகிதம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதில்தான் அனைவரின் கவனமும் உள்ளது. அதன் பிறகு விற்பனை வேகமெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்கிறார் வரி குறைப்பு என்பது சாமானிய மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தூண்டும் என்பதுடன் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் வரி விதிப்பில் இந்தியாவை உலகளாவிய அளவு கோல்களுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு செல்லும். 2, 3 மற்றும் 4-ம் நிலை நகரங்களில் வீட்டு உபயோக சாதனங்களின் ஊடுருவலை இந்த வரிகுறைப்பு மேலும் விரிவுபடுத்த ஏதுவாக அமையும்.
எந்தவொரு வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கும் 28 சதவீதம் வரி விதிப்பு என்பது வளர்சிக்கான தடைக்கல்லாகவே பார்க்கப்படுகிறது. அதனால்தான், அதனை கணிசமாக குறைக்க வேண்டும் என்பது தொழில் துறையினரின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நமது நாட்டின் வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள ஜிஎஸ்டி வரி அடுக்கு குறைப்பு திட்டம் ஒரு வரலாற்று சீர்திருத்த நடவடிக்கையாகவே அமையும்.