இங்கிலாந்தின் ஈஸ்ட் இந்தியா கம்பெனி கடந்த 1600-ம் ஆண்டில் வர்த்தகம் செய்வதற்காக கடல் மார்க்கமாக இந்தியாவில் நுழைந்தது. ஆனால் அடுத்த இரு நூற்றாண்டுகளில் அந்நிறுவனம் படிப்படியாக இந்தியாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
ஆட்சியைக் கைப்பற்றி நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்து, இன்று நம்முடன் சமமான கூட்டாளியாக நின்று, இருதரப்புக்கும் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) 2025 ஜூலை 24-ம் தேதி, இந்தியப் பிரத மர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் கையெழுத்தானது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் இந்திய வணிகர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் புதிய வாய்ப்புகளை திறக்கவிருக்கிறது. மூன்று ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவின் மேற்கத்திய நாடுகளுடனான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இங்கிலாந்தில் இருந்து வரும் 90% பொருட்களுக்கான வரியை இந்தியா குறைக்கும் அல்லது முழுமையாக நீக்கும். இங்கிலாந்து பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் சராசரி வரி இப்போது 15% ஆக உள்ளது. இது 3% ஆக குறையும். இதனால் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி கூடுதல் லாபம் கிடைக்கும். இந்த தொகை 10 ஆண்டுகளில் ரூ.9,000 கோடியாக உயரும்.
இந்த ஒப்பந்தத்தால் இங்கிலாந்தில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை இந்தியாவில் கணிசமாக குறையும். இதனால் விற்பனை அதிகரித்து, இங்கிலாந்து நிறுவனங்களின் வருமானம் பெருகும். மேலும் உற்பத்தி அதிகரித்தால் இங்கிலாந்தில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும்.
* இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான சுங்க வரி 110%-லிருந்து வெறும் 10% ஆக குறைக்கப்படும்.
* புகழ்பெற்ற ஸ்காட்ச் விஸ்கி, ஜின் போன்ற மதுபானங்களுக்கான வரி 150% லிருந்து 75% ஆக குறைக்கப்படும். பத்து ஆண்டுகளில் இது 40% வரை குறையும்.
* இங்கிலாந்தின் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் இந்திய சந்தைக்குள் வரி இல்லாமல் நுழைவதால் அவற்றின் விலையும் குறையும்.
* அழகுசாதனப் பொருட்கள், சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றின் விலை குறையும். ஆட்டுக்கறி மற்றும் வேளாண் உணவுப் பொருட்களின் மீதான வரியும் 15-லிருந்து 3% ஆக குறையும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும்.
இந்தியாவுக்கு என்ன பலன்: இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 99% பொருள்களுக்கு இங்கிலாந்து வரி விலக்கு அளிக்கும். மேலே கூறிய அதே முறையில் இங்கிலாந்து குடிமக்கள் அதிக அளவில் இந்திய பொருள்களை வாங்கி னால், இந்தியாவில் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பெருகி தொழிலும் வணிகங்களும் வளர்ச்சி பெறும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை எளிமைப்படுத்த மின்னணு முறையிலான (காகிதப் பயன்பாடு இல்லாத) வர்த்தகம் செய்யவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
* இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு இங்கிலாந்தில் விதிக்கப்படும் 8-12% வரி முற்றிலுமாக நீக்கப்படும். இதனால் திருப்பூர், சூரத், லூதியானாவில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பயனடைவார்கள்.
* கடல் இறால், வாகன உதிரி பாகங்கள், விலை உயர்ந்த ரத்தினக் கற்கள், தங்க நகைகளுக்கு விதிக்கப்படும் 12% வரையிலான வரி ரத்து செய்யப்படும். இதனால் இந்தப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். இதன்மூலம் அடுத்த 2 ஆண்டுக்குள் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்தியாவின் பாரம்பரிய ஏற்றுமதி பொருட்களான பிரீமியம் தேயிலை, மசாலா பொருட்கள், பாஸ்மதி அரிசி, உடனே சாப்பிடக்கூடிய உணவு வகைகளுக்கு (Ready to Eat) முழு வரி விலக்கு கிடைக்கும். இதனால் இந்திய பொருட்கள் இங்கிலாந்து சந்தையில் அதிகம் விற்பனையாகும்.
போட்டியை சமாளிக்க முடியும்: இந்திய வணிகங்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் இங்கிலாந்து சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க முடியும். குறிப்பாக, ஜவுளி துறையில் வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுடன் சமமாக போட்டியிட முடியும். தோல், கைவினைப் பொருட்கள், பொறியியல் சாதனங்கள், வாகன உதிரிபாகங்கள் போன்ற துறைகளில் அதிக ஆர்டர்கள் கிடைக்கும். மேலும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவின் இடம் வலுவடையும்.
புனே, சென்னை, குர்கான் உள்ளிட்ட நகரங்களில் உள்ள உற்பத்தி மையங்கள் நேரடியாக பயனடையும். இந்திய ஏற்றுமதியாளர்கள் இங்கிலாந்து சந்தையில் பூஜ்ஜியம் அல்லது குறைந்த வரி விதிப்பில் எளிதாக பங்கு பெற முடியும். 2030-க்குள் இங்கிலாந்துக்கான ரசாயன ஏற்றுமதியை இரட்டிப்பாக்கவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய அரசு, பொது கொள்முதல் சந்தையில் ஆண்டுக்கு ரூ.38,000 கோடி மதிப்பில் பொருட்களை வாங்குகிறது. இந்த ஏலங்களில் இங்கிலாந்து நிறுவனங்களும் பங்கேற்க முடியும். இது வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத சிறப்பு உரிமை. 2040-க்குள் இங்கிலாந்தின் வருமானம் ஆண்டுக்கு 4.8 பில்லியன் பவுண்டு அதிகரிக்கும். இரு நாட்டு வர்த்தகமும் 34 பில்லியன் டாலராக உயரும்.
விசா விதிகள் தளர்த்தப்படும்: இந்த ஒப்பந்தம் நிபுணர்களையும் பரிமாறிக் கொள்ள வழிவகுக்கிறது. இந்திய சமையல் கலைஞர்கள், யோகா பயிற்சியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றவர்கள் எளிதாக இங்கிலாந்தில் வேலை செய்ய முடியும். விசா விதிகள் தளர்த்தப்படுவதுடன் எளிமையாக்கப்படும்.
பொறியியல், கட்டிடக்கலை, கணக்கியல் துறைகளில் இந்திய தொழில்முறை தகுதிகள் அங்கீகரிக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம், நிதி, சட்டம், சுகாதாரம் ஆகிய துறைகளில் 60,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். முதல் மூன்று ஆண்டுகள் சமூக பாதுகாப்பு வரி தள்ளுபடி செய்யப்படுவதால் இந்திய பணியாளர்களுக்கு பெரும் சேமிப்பு கிடைக்கும்.
இங்கிலாந்தும் இந்தியாவும் தங்கள் நாட்டில் உள்ள அனுமதி செயல்முறைகளை முடித்தவுடன், இந்த புதிய வர்த்தக ஒப்பந்தம் செயல் பாட்டுக்கு வரும். அரசு அதிகாரிகளின் கணிப்பின்படி, இது 2026-ம் ஆண்டின் மத்தியில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. ஒரு காலத்தில் "வெள்ளையனே வெளியேறு, சுதேசி பொருட்களையே பயன்படுத்துவோம்" என்று கோஷமிட்ட நாம், பிற்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பதை பெருமையாக கருதத் தொடங்கினோம்.
வெளிநாட்டில் தயாரான பொருட்களையே விரும்பி பயன்படுத்தினோம். ஆனால் இன்று நம் நாட்டிலேயே உயர்தர பொருட்களைத் தயாரிக்கும் திறனும், திறமை வாய்ந்த மனிதவளமும் இருப்பதால்தான், இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிந்தது.
காலம் மாறுகிறது, நாமும் மாறுகிறோம். மாற்றம் ஒன்றுதானே மாறாதது. கடந்த 2024-25-ம் நிதியாண்டில் இந்தியா 14.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தது. அதேநேரம் அந்த நாட்டிலிருந்து 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்து விதிக்கும் வரி
- somasmen@gmail.com