வணிக வீதி

மறுசுழற்சி பிளாஸ்டிக் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்

உலக அளவில் அவ்​வப்​போது வெளி​யிடப்​படும் குறி​யீடு​களில் சில துறை​களில் முன்​னணி நாடு​கள் வரிசை​யில் இந்​தியா இடம் பெறு​வதை நாம் பார்க்​கிறோம். ஆனால் முன்​னிலை​யில் இருக்க வேண்​டாம் என நினைக்​கக்​கூடிய ஒரு பட்​டியலில் இந்​தியா இடம் பிடித்​திருப்​பதுகவலை அளிக்​கிறது. பிரபல​மான `நேச்​சர் (Nature)’ என்​கிற அறி​வியல் பத்​திரிகை பிளாஸ்​டிக் கழி​வு​களை அதி​க​மாக உரு​வாக்​கும் நாடு​கள் குறித்த ஒரு பட்​டியலை சமீபத்​தில் வெளி​யிட்​டது.

இதில் அமெரிக்​கா, சீனா, ஐரோப்​பிய யூனியனுக்கு அடுத்து இந்​தியா 4-வது இடத்​தில் இருக்​கிறது. மற்ற நாடு​கள் பிளாஸ்​டிக் கழிவுகளை அதி​க​மாக உரு​வாக்​கி​னாலும் நவீன முறை​களைப் பயன்​படுத்தி அவற்​றில் பெரும்​பாலானவற்றை மறுசுழற்சி செய்து விடு​கின்​றன. இதனால் அந்த நாடு​களின் சுற்​றுச்​சூழல் அவ்​வள​வாக பாதிக்​கப்​படு​வ​தில்​லை. ஆனால், பிளாஸ்​டிக் உமிழ்வைப் (plastic emissions) பொறுத்​தவரை​யில் இந்​தியா முன்​னணி​யில் இருக்​கிறது.

இந்​தி​யா​வில் உரு​வாகும் பிளாஸ்​டிக் கழி​வு​களில் சுமார் 12% மட்​டுமே மறுசுழற்​சிச் செய்​யப்​படு​கிறது. மீத​முள்ள 88% கழி​வு​கள் திறந்த வெளி​களில் குவிக்​கப்​பட்​டும், ஆற்​றி​லிருந்து நீர் செல்​லும் வழிகளை அடைத்​துக் கொண்​டும் இருக்​கின்​றன. அத்​துடன் தனி​நபர்​களாலும், கழி​வு​களைச் சேகரிப்​பவர்​களாலும் பொது வெளி​யில் எரிக்​கப்​பட்டு சுற்​றுச்​சூழல் மேலும் மாசுபடுத்தப்படுகிறது.

ஆண்​டுக்கு சுமார் 9.3 மில்​லியன் டன் பிளாஸ்​டிக் உமிழ்வு நமது நாட்​டில் உரு​வாகிறது. இது உலகள​வில் ஐந்​தில் ஒரு பகு​தி​யாகும். இதில் 5.8 மில்​லியன் டன் எரிக்​கப்​படு​வ​தால் சுற்​றுப்​புறத்​துக்​கும், மனித ஆரோக்​கி​யத்​துக்​கும் தீங்​கிழைக்​கும் பல வாயுக்​கள் வெளி​யாகின்​றன. மீத​முள்ள 3.5 மில்​லியன் டன் பிளாஸ்​டிக் கழி​வு​கள் குப்பை மேட்​டில் குவிக்​கப்​படு​கின்​றன. இதனால் நமது நிலம், நீர், காற்று ஆகியவை பெரு​மள​வில் பாதிப்​புக்கு உள்​ளாகிறது.

இந்​தி​யர்​கள் சராசரி​யாக நாளொன்​றுக்கு 120 கிராம் பிளாஸ்​டிக் கழிவை உரு​வாக்​கு​வ​தாக இந்த ஆய்​வறிக்கை கூறுகிறது. ஒப்பீட்டள​வில் இந்​தி​யா​வைக் காட்​டிலும் சீனா 4 முதல் 6 மடங்கு அதிக பிளாஸ்​டிக்கை உற்​பத்தி செய்​தா​லும் அதனுடைய பிளாஸ்​டிக் உமிழ்வு 2.8 மில்​லியன் டன்​தான் என இந்த அறிக்கை குறிப்​பிடு​கிறது.

ஆறு ஆண்​டு​களுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய பிளாஸ்​டிக் மாசுபடுத்தி என்​கிற நிலை​யில் இருந்த சீனா, அதைக் கட்​டுப்​படுத்த பல நடவடிக்​கைகளை எடுத்​ததன் மூலம் இன்​றைக்கு இந்​தி​யா​வுக்​குப் பின்​னால் இருக்​கிறது. இதற்​குக் காரணம் அது பின்​பற்​றும் சிறந்த மறுசுழற்சி முறை​களும், கடுமை​யான ஒழுங்கு நெறி​முறை​களும் ஆகும்.

ரூ.3.5 லட்​சம் கோடி வர்த்​தகம்: உலகள​வில் தனி​நபர் பிளாஸ்​டிக் நுகர்​வோடு ஒப்​பிடு​கை​யில் நமது நுகர்வு சராசரி 43% தான். அதாவது, அவர்​கள் 30 கிலோ அளவுக்கு பிளாஸ்​டிக் பொருள்​களை உபயோகித்​தால் நாம் 13 கிலோ​தான் உபயோகிக்​கிறோம்.

ஆனால் அவற்றை மறுசுழற்சி செய்​வ​தில் நாம் மிக​வும் பின்​தங்கி இருக்​கிறோம். பிளாஸ்​டிக் உபயோகப்​படுத்​தப்​ப​டாத துறையே இல்லை எனும் அளவுக்கு அதன் பயன்​பாடு எங்​கும் வியாபித்​திருக்​கிறது. 2023-ம் நிதி​யாண்​டில் பிளாஸ்​டிக் தொழிலின் மதிப்பு சுமார் ரூ.3.5 லட்​சம் கோடி.

இது நமது நாட்டு உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 1.4 சதவீத​மாகும். நமது நாட்​டில் ஏறக்​குறைய 30,000 பிளாஸ்​டிக் செய​லாக்க அலகு​கள் (processing units) இருக்​கின்​றன. இதில் 90% சிறு மற்​றும் நடுத்தர அளவி​லான நிறு​வனங்​கள். இந்​தத் தொழிலில் பணிபுரிவோரின் எண்​ணிக்கை கிட்​டத்​தட்ட 40 லட்​ச​மாகும்.

இத்தொழிலின் வளர்ச்சி விகிதம் 10 முதல் 15%. 2025-ம் நிதி​யாண்​டில் இந்​தியா ஏற்​றுமதி செய்த பிளாஸ்​டிக் பொருள்​களின் மதிப்பு சுமார் 12.5 பில்​லியன் டாலர் (ரூ.1.07 லட்​சம் கோடி). எனவே, பிளாஸ்​டிக் என்​பது தனிப்​பட்ட வாழ்க்​கை​யிலும் நாட்​டின் பொருளா​தா​ரத்​தி​லும் ஒரு தவிர்க்க முடி​யாத பொருளாகும்.

பிளாஸ்​டிக் பயன்​பாட்​டைக் கட்​டுப்​படுத்​தும் வகை​யில் இந்​திய அரசு 2022-ல் ஒரு முறை மட்​டுமே உபயோகப்​படுத்​தப்​படும் 19 பிளாஸ்​டிக் பொருள்​களுக்கு தடை விதித்​தது. அதாவது, `குறை​வான பயன்​பாடு; அதி​கக் கழி​வு’ எனக் கருதப்​பட்ட பிளாஸ்​டிக் பொருள்​கள் - தட்​டு​கள், அலங்​காரப் பொருள்​கள், ஸ்ட்​ராக்​கள், சமையலறை​யில் பயன்​படுத்​தும் பல பொருள்​கள் இதில் அடங்கும்.

அது​போல 100 மைக்​ரானுக்கு அதிக அடர்த்தி கொண்ட பிளாஸ்​டிக் பைகள் மட்​டுமே அரசாங்​கத்​தால் பயன்​பாட்​டுக்கு அனு​ம​திக்​கப்​பட்​டிருக்​கின்​றன. இருப்​பினும் மற்ற எல்​லா​வற்​றை​யும் போலவே இந்​தி​யா​வில் நல்ல நடவடிக்​கைகள் எல்​லாம் செயல்​படுத்​தலின்​போது தடு​மாறு​வது போல இது​வும் அதன் நிறைவேற்​றத்​தில் எதிர்​பார்த்த முடிவை எட்​ட​வில்​லை.

உலகள​வில் பிளாஸ்​டிக் என்​பது மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்​படுத்​தும் ஒரு பொருளாக உரு​வெடுத்​துள்​ளது. மக்​கும் தன்​மையற்ற பிளாஸ்​டிக் எனில், அது எங்​கும் எப்​போதும் இந்த பூமி​யில் நிறைந்​திருக்​கும்.

மனிதர்​களுக்கு மட்​டுமல்​லாமல் விலங்​கு​களுக்​கும், நீர்​வாழ் உயி​ரினங்​களுக்​கும் இது பேராபத்​தாக இருக்​கிறது. சமீபத்​தில் குஜ​ராத்​தில் பசு மாடு ஒன்று சினை​யாக இருக்​கிறது என 9 மாதங்​கள் வரை நினைத்து வந்த அதன் உரிமை​யாளர், கன்று எது​வும் ஈனாத பட்​சத்​தில் அதை மருத்​து​வரிடம் அழைத்​துச் சென்​றிருக்​கிறார்.

அப்​போது அதற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்​து​வர் அதன் வயிற்​றி​லிருந்து சுமார் 65 கிலோ பிளாஸ்​டிக் பைகள், கப்​பு​கள், ஒரு முறை மட்​டும் உபயோகிக்​கக்​கூடிய ஸ்பூன்​கள் ஆகிய​வற்றை எடுத்​திருக்​கிறார். இது​போல நீர் நிலைகளில் நாம் தூக்​கியெறி​யும் பிளாஸ்​டிக் பொருள்​களை உணவு என்று எண்ணி சாப்​பிட்டு உயி​ரிழக்​கும் உயி​ரினங்​கள் கணக்​கிலடங்​காது.

உற்​பத்​தி​யாளர் பொறுப்பு: பிளாஸ்​டிக் உபயோகத்​தைக் கட்​டுப்​படுத்​தும் வகை​யிலும் அதி​க​மாக மறுசுழற்சி செய்​யும் வகை​யிலும் இந்​திய அரசு 2022-ம் ஆண்டு ”பிளாஸ்​டிக் பேக்​கேஜிங்​கிற்​கான நீட்​டிக்​கப்​பட்ட உற்​பத்​தி​யாளர் பொறுப்பு குறித்த வழி​காட்​டு​தல்​களை (Guidelines on Extended Producer Responsibility – EPR – for Plastic Packaging) அறி​வித்​தன.

அதன்​படி பிளாஸ்​டிக் பொருள் தயாரிப்​பாளர், இறக்​கும​தி​யாளர், பிராண்டு உரிமை​யாளர் ஆகியோர் தாங்​கள் உற்​பத்தி செய்​யும் அல்​லது பேக்​கேஜிங்​குக்​காக பயன்​படுத்​தும் பிளாஸ்​டிக் அனைத்​தை​யும் அப்​புறப்​படுத்த வேண்​டும். இதற்​காக பிளாஸ்​டிக் பொருள்​களை சேகரிப்​பது, மறுசுழற்சி செய்​வது, மறு​முறை பயன்​படுத்​து​வது என ஒவ்​வொன்​றுக்​கும் இலக்கு நியமித்​துச் செயல்​படு​வதைக் கட்​டாய​மாக்கி இருக்​கிறது.

இந்த வருடம் ஏப்​ரல் மாதம் முதல் பெப்​சி, கோக் போன்ற குளிர்​பானம் தயாரிக்​கும் நிறு​வனங்​கள் அவை உபயோகிக்​கும் பாட்​டில்​களில் சுமார் 30% மறுசுழற்​சிச் செய்த பிளாஸ்​டிக்கை பயன்​படுத்​து​வது கட்​டாய​மாகும். அது​போல பல்​வேறு வித​மான நுகர்​வோர் பொருள்​களை தயாரிக்​கும் பிரபல நிறு​வன​மான இந்​துஸ்​தான் யூனிலீவரும் மறுசுழற்சி செய்த பிளாஸ்​டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட பேக்​கேஜிங் பொருள்​கள் உபயோகிப்​பதை 58,000 டன்​னிலிருந்து 1 லட்​சம் டன்​னாக அதி​கரித்​திருக்​கிறது. இது போல வேறு பல நிறு​வனங்​களும் அரசின் EPR வழி​முறை​களைப் பின்​பற்ற ஆரம்​பித்​திருக்​கின்​றன.

உலகளா​விய நடவடிக்கை அவசி​யம்: இப் பெரும் பிரச்​சினையைக் கருத்​தில் கொள்​ளும்​போது இதற்கு உலகளா​விய நடவடிக்கை அவசி​யம் எனக் கருதி 2022-ம் ஆண்​டு, 175 ஐ.நா. உறுப்பு நாடு​கள் பிளாஸ்​டிக் மாசு​பாட்​டைக் கட்​டுப்​படுத்த, முதல் முறை​யாக சட்​டப்​பூர்​வ​மாக பிணைக்​கும் ஒப்​பந்​தத்தை உரு​வாக்க ஒப்​புக்​கொண்​டன.

இருப்​பினும், பிளாஸ்​டிக் உற்​பத்​தியை கட்​டுப்​படுத்​து​வது உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் குறித்த கருத்து வேறு​பாடு​கள் காரண​மாக, கடந்த ஆண்டு தென்​கொரி​யா​வின் பூசான் (Busan) நகரில் நடந்த பேச்​சு​வார்த்​தை​யின்​போது இந்த ஒப்​பந்​தத்​தின் வெளி​யீடு ஒத்​திவைக்​கப்​பட்​டது.

இந்த ஒப்​பந்​தத்​துக்கு எண்​ணெய் மற்​றும் பெட்ரோ கெமிக்​கல் உற்​பத்தி செய்​யும் நாடு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. இது சம்​பந்​த​மான அடுத்த கூட்​டம் ஆகஸ்ட் மாதம் ஜெனீ​வா​வில் நடக்​கும் என அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறது. பிளாஸ்​டிக் மாசு​பாடு எனும் பேராபத்​தைக் கட்​டுப்​படுத்த அனைத்து நாடு​களும் விரை​வாக செயல்பட வேண்​டும் இல்​லை​யெனில் 2050-ம் ஆண்​டில் பூமி​யில் பிளாஸ்​டிக்​கின் எடை மீன்​களின் உயிர்​திரள் (biomass) எடை​யான 158 மில்​லியன் டன்​னை​விட அதி​க​மாகி​விடும்​, அது மட்​டுமல்​லாமல்​ இந்​த பூமி​யில்​ வாழும்​ அனை​வரின்​ ஒட்​டுமொத்​த உயிர்​திரளை​விட அ​திக​மாகி​விடக்​ கூடிய அ​பாயம்​ உள்​ளது.

பிளாஸ்டிக் கழிவைத் தடுக்க சில வழிகள்

1 பிளாஸ்டிக் உற்பத்தி, நுகர்வு, மறுசுழற்சிஆகியவை குறித்த தரவுகளை அரசு தீவிரமாக சேகரிக்க வேண்டும். இப்போது பல மாநில மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒழுங்கான தரவுகளை வழங்குவதில்லை.

2 பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இப்பிரச்சினையை அதன் மூலாதார நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.

3 பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் அவை பயன்படுத்திய அளவு, சேகரித்த அளவு, மறுசுழற்சி செய்த அளவு போன்றவற்றை வருடந்தோறும் அரசுக்குத் தெரிவிக்கும் முறையை மேம்படுத்துவதோடு கட்டாயப்படுத்தவும் வேண்டும். அதுபோல நவீன கழிவு மேலாண்மை முறைகளைக் கண்டறிந்து அதைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.

4 மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு அதற்கு சவாலாக இருக்கும் பிளாஸ்டிக் உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும்.

5 அரசு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதோடு தனிநபர்களும் சமூகமும் நிலைநிறுத்தத்தக்க நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவும், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் உபயோகிப்பைக் குறைக்கச் சொல்லியும் ஊக்கப்படுத்த வேண்டும்.

மக்கக்கூடிய அல்லது மறுசுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக் வகைகள்: Polyethylene Terephthalate (PET), High Density Polyethylene (HDPE) பெரும்பாலும் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் வகைகள்: Polyviny Chloride (PVC), Polypropylene (PP) மறுசுழற்சியே செய்யமுடியாத பிளாஸ்டிக் வகைகள்: Low Density Polyethylene (LDPE), Polystyrene (PS).

- sidvigh@gmail.com

SCROLL FOR NEXT