அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, அவர் செய்து வரும் பல்வேறு அதிரடி மாற்றங்களில்ஒன்று, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான இறக்குமதி தீர்வை. உலக நாடுகளுக்கான இறக்குமதி தீர்வையை அறிவித்து உடனடி அமல் என்று தெரிவித்து, பின்னர் 90 நாட்கள் அவகாசம் என்று இறங்கி வந்தார்.
சீனாவின் இறக்குமதி மீது நூறு, இருநூறு, 245 % என்று எல்லாம் பேசி, பிறகு ஒரேயடியாக குறைத்து, 30%ல் முடித்துக் கொண்டுவிட்டார். அதேபோல ஐரோப்பிய யூனியன், ஈரான், மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிக்கு 30%. அண்டை நாடு கனடாவுக்கும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள வங்கதேசத்துக்கும் 35% ஜப்பானுக்கும் மலேசியாவுக்கும் 25%. என்ன காரணத்தினாலோ, மியன்மர் என்ற பர்மாவுக்கு 40% என்றெல்லாம் முடிவுசெய்துவிட்டார்.
பேச்சுவார்த்தை நடத்தாமலேயே சுமார் 100 சிறிய நாடுகளுக்கு 10% என்று முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார்கள். இந்தியாவோடு இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. 5 சுற்று முடிந்துள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், அமெரிக்க குழுவினருடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முதல் அறிவிப்பில் இந்தியாவின் இறக்குமதி மீது 26 சதவீதம் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதை குறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
இந்தியாவின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதிக்கிற தீர்வை அளவு என்பது இரண்டு விதங்களில் தாக்கம் கொடுக்கக்கூடியது. முதலாவது, அது 26 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் அந்த அளவுக்கு இந்திய பொருட்களுடைய விலை அமெரிக்காவில் அதிகரிக்கும். அதனால், வாங்குதல் குறைந்து, வியாபாரம் சுருங்கலாம். இந்தியாவுக்கு ஓரளவு அந்நிய செலவாணி இழப்பு ஏற்படும்.
இரண்டாவது ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு, உதாரணத்துக்கு, ஆயத்த ஆடைகளுக்கு 26 சதவீதம் என்று முடிவானால், அதே ஆயத்த ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு இறக்குமதி தீர்வை 35 சதவீதம் என்று இருக்கிறபடியால், அதே அமெரிக்க சந்தையில் குறைந்த இறக்குமதி தீர்வை காரணமாக இந்திய பொருள்களின் விலை குறைவாக இருந்து, வியாபாரம் அதிகரிக்கும்.
இதை மனதில் கொண்டுதான் இந்தியா அதன் ஏற்றுமதித் தீர்வையை குறைத்துக் கொள்ள முயற்சிப்பதுடன், அதன் போட்டி நாடுகளுக்கு இருக்கக்கூடிய தீர்வை சதவீதத்தைவிட குறைவாக இருக்க வேண்டும் என்றும் முயற்சிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு செய்த மொத்த ஏற்றுமதி, சுமார் 130 பில்லியன் டாலர்கள். செய்து கொண்ட இறக்குமதி, அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவு. அதனால், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா உபரியில் இருக்கிறது.
இதைக் கண்டிப்பதும், கேலி செய்வதுமாக இருக்கும் அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின், பால் பொருட்கள், காய்கறிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட, பாதாம், சோயா பீன்ஸ் மற்றும் பிற விவசாய பொருட்களை இந்தியா தடையின்றி வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்.
1989-ம் ஆண்டு முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட (Bt) பொருட்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ’த ஜெனிடிக் இன்ஜினியரிங் அப்ரைஸில் கமிட்டி’ (GEAC) மற்றும் ‘ஃபுட் சேஃப்டி அன்ட் ஸ்டாண்டர்ட் அத்தாரிட்டி’ (FSSA)I ஆகியவற்றின் அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்ய இயலாது. இதுவரை Bt காட்டன், GM சோயா பீன் மற்றும் கனோலா எண்ணைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கவின் பல விவசாய மற்றும் பால் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா அனுமதி கேட்கிறது. அவற்றை அதிக இறக்குமதி தீர்வை இல்லாமல் அனுமதிக்கும் பட்சத்தில், அவை இந்திய சந்தைகளில் நிறைந்து, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அதன் காரணமாக இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதைத்தான் அமெரிக்க அதிபர், ’இந்தியா கடுமையாக பேரம் பேசுகிறது’ என்று விமர்சித்து வருகிறார்.
அதிகப்படியான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய தோல் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இரும்பு, ஆயத்த ஆடைகள் மோட்டார் பாகங்கள் ஆகியவற்றின் இந்திய ஏற்றுமதிக்கு தீர்வையைக் குறைக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. 2 பக்கங்களிலும் உறுதியாக இருப்பதாலோ என்னவோ ஒரு முழுமையான வர்த்தக ஒப்பந்தம் இப்போதைக்கு ஏற்படாமல் போகலாம்.
தற்காலிக இடைக்கால ஒப்பந்தம் ஏற்படலாம். இந்திய ஏற்றுமதி மற்றும் அமெரிக்கஇறக்குமதிக்கு என்ன சதவீதம்? அவை இந்தியாவின் ஏற்றுமதியோடு போட்டியிடும் நாடுகளின் தீர்வையைவிட அதிகமா, குறைவா? மற்றும் இந்தியா எந்த பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி கொடுக்கப் போகிறது போன்றவை கவனிக்கப்பட வேண்டியவை. பொறுத்திருந்து பார்ப்போம்.
- writersomavalliappan@gmail.com