வணிக வீதி

வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் நுகர்பொருள் வணிகம்

சுப.மீனாட்சி சுந்தரம்

இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருள்கள் (எப்எம்சிஜி) சந்தையில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மந்த நிலையில் இருந்த இந்தத் துறை சூடு பிடிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. 2023-ம் ஆண்டில் 230.14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இருந்த எப்எம்சிஜி வணிகம், 2030-ம் ஆண்டில் 1288.50 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொடும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் 2024 முதல் 2030 வரை 27.9% என்ற அசாதாரணமான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) எளிதாக எட்டி விடலாம்.

இதற்கு பல அடிப்படை காரணிகள் உள்ளன. வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், வேகமான நகர் மயமாக்கல், அதிகரித்து வரும் செலவழிக்க கூடிய வருமானம் ஆகியவை இதில் முக்கிய பங்கு வைக்கின்றன. உணவுப் பொருட்கள், பானங்கள், தனிப்பட்ட பராமரிப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள், உடல்நலம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

மேம்பட்ட உற்பத்தி திறன்களும் நவீனமயமாக்கப்பட்ட விநியோக அமைப்புகளும் நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நுகர்வு பொருட்களை தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்துகின்றன. கிராமப்புற சந்தையில் ஆழமான ஊடுருவல், பிரீமியம், இயற்கை-ஆர்கானிக் தயாரிப்புகள் மீதான நுகர்வோர் விருப்பங்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பலமான உந்துதலாக செயல்படுகின்றன.

டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கம்: டிஜிட்டல் மாற்றம் இந்தத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. பேக்கேஜிங், புதுமையான தயாரிப்புகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் அணுகுமுறையை வாடிக்கையாளர் சமூகம் ஏற்றுக்கொண்டது ஆகியவை புதுமைகள் நுகர்வோர் தேவைகளை நிறைவேற்றுவதில் அவசியமான வையாக உள்ளன. மின்னணு வணிகம், நேரடி-நுகர்வோர் (D2C) பிசினஸ் மாடல்கள் வளர்ச்சிக்கான புதிய பாதைகளை திறந்திருக்கிறது. முக்கிய பிராண்டுகள் ஆன்லைன் சில்லறை விற்பனையில் டிஜிட்டல் மாற்றங்களைப் பயன்படுத்தி தங்கள் இருப்பை வலுப்படுத்துகின்றன.

மாறிவரும் வாழ்க்கை முறைகள், பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், உடனடி உணவுகளுக்கான தேவை அதிகரிப்பால் உணவு மற்றும் பானங்கள் பிரிவு 2023-ல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது. நெஸ்லே இந்தியா, ஐடிசி, பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் இந்தப் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. 2023-ம் ஆண்டில் ஆன்லைன் சில்லறை விற்பனைத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது.

அமேசான் போன்ற முன்னணி மின்வணிக தளங்கள் தங்கள் சந்தை இருப்பை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்திலும் இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவியியல் ரீதியாக, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் அதிக நகரமயமாக்கல், பெருகிவரும் நடுத்தர வர்க்க மக்கள் தொகை காரணமாக சந்தையில் முன்னணியில் உள்ளன.

அதேநேரம், கிராமப்புற இந்தியா அனைத்து பிராந்தியங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இயக்கியாக திகழ்கிறது. மேற்கண்ட எல்லா காரணிகளும் சேர்ந்து இந்திய எப்எம்சிஜி சந்தை ஒரு பொற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.

அரசு ஆதரவு, கொள்கை மாற்றங்கள்: இந்திய எப்எம்சிஜி துறை அரசின் பல்வேறு முன்னோக்கு கொள்கைகள், திட்டங்களின் மூலம் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது. உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான கணிசமான நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI-PRODUCTIVITY LINKED INCENTIVE) திட்டம், துறையின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

சிறுதானியங்களை ஊக்குவிக்கும் கொள்கைகள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மீட்டெடுப்பதிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வளர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்ட தளர்வுகள் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளன. மல்டி-பிராண்ட் சில்லறை விற்பனைக்கு 51%, உணவு பதப்படுத்துதலுக்கு 100% அந்நிய முதலீட்டு அனுமதி வழங்கப்பட்டதால், புதிய தயாரிப்பு வரிசைகள் மற்றும் திறமையான விநியோக வலையமைப்புகள் உருவாகியுள்ளன.

2023-ல் எதிர்கொண்ட சவால்கள்: சாதகமான கொள்கைகள் இருந்தபோதிலும், 2023-ம் ஆண்டு இந்தத் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. நீடித்த விநியோகச் சங்கிலி இடையூறுகள், சில்லறை விற்பனையை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் மற்றும் பல்வேறு தலைமுறை நுகர்வோர்களின் மாறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய அவசியம் ஆகியவை முக்கிய சவால்களாக இருந்தன.

பிராண்ட்-விசுவாசமான முதியவர்கள் முதல் புதுமை தேடும் இளைஞர்கள் வரை எல்லோரது தேவைகளையும் திருப்திப்படுத்துவது சிக்கலான பணியாக மாறியது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் நிலவிய கடுமையான போட்டி, அதிக நிதி அபாயங்களும் கூடுதல் தடைகளை உருவாக்கின. இந்த சவால்கள் இந்தத் துறையின் பல்வேறு நிறுவனங்களை மேலும் புதுமையான அணுகுமுறைகளை கண்டுபிடிக்கவும் கடைபிடிக்கவும் தூண்டின.

உலகளாவிய விரிவாக்கம்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நுகர்வு பொருட்கள் வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க சந்தையை கைப்பற்றி இருப்பது இந்திய எப்எம்சிஜி துறையில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும். இந்துஸ்தான் யூனிலீவர் (HUL), ஐடிசி, மாரிகோ, கோத்ரேஜ், டாபர் மற்றும் AWL அக்ரி பிசினஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் தங்கள் உள்ளூர் விற்பனையுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி வருவாயில் கூடுதல் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

HUL போன்ற பெரு நிறுவனங்களுக்கு உள்நாட்டு வணிகம் அதிகமாக இருப்பதால் சர்வதேச வணிகம் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டுள்ளது (சுமார் 3%), ஆனால் டாபர், இமாமி மற்றும் மாரிகோ போன்ற நிறுவனங்களின் வருவாயில் 20%-க்கும் அதிகமாக ஏற்றுமதி உள்ளது. HUL-ன் ஏற்றுமதி துணை நிறுவனமான யூனிலீவர் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ், கடந்த நிதியாண்டில் விற்பனையில் 8% உயர்வையும் நிகர லாபத்தில் 14% உயர்வையும் கண்டது.

இது HUL-ன்ஒட்டுமொத்த 2% உள்நாட்டு விற்பனை வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க சாதனையாகும். HUL-ன் ஏற்றுமதி வளர்ச்சியை இயக்கும் தயாரிப்புகளில் சரும பராமரிப்பு, ஊட்டச்சத்து, முடி பராமரிப்பு ஆகியவை அடங்கும். டவ், ஹார்லிக்ஸ், வாஸ்லைன் போன்ற பிராண்டுகள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பாஸ்மதி அரிசி போன்ற பாரம்பரிய பொருட்களுக்கு அப்பால், கடுகு எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், கோதுமை மாவு, கடலை மாவு, சோயா, அவல் போன்ற பொருட்களுக்கு வெளிநாட்டு சந்தைகளில் கணிசமான தேவையை உருவாக்கி இருக்கிறது. வெளிநாடுகளில் இந்திய உணவகங்கள் பெருகி வருவதோடு மேற்கத்திய நாடுகளில் இந்திய உணவு வகைகள் பிரபலம் பெற்று வருவதால் இந்த தேவை மேலும் அதிகரிக்கிறது.

அசாதாரண வளர்ச்சி கண்ட நிறுவனங்கள்: AWL அக்ரி பிசினஸ் நிறுவனத்தின் பிராண்டட் ஏற்றுமதி வணிகம் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சியடைந்து, 2024-25 நிதியாண்டில் ரூ.250 கோடியைத் தாண்டியது. பிஸ்கட், நூடுல்ஸ், சிற்றுண்டிகளின் ஏற்றுமதியில் ஐடிசி நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. ஐடிசி-யின் ஆசீர்வாத் ஆட்டா ஏற்கெனவே பல நாடுகளில் மார்க்கெட் லீடராக இருப்பதோடு அதன் எப்எம்சிஜி தயாரிப்புகள் இப்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகின்றன. உணவு பதப்படுத்தும் துறைக்கான பிஎல்ஐ திட்டங்களால் இந்த ஏற்றுமதி அதிகரிப்பு மேலும் வலுப்படுகிறது.

மீட்சிக்கான நல்ல சூழல்: இப்போது பல முக்கிய மாற்றங்கள் ஒன்றாக சேர்ந்து இந்திய எப்எம்சிஜி துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருகின்றன:

* 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் பொருட்களின் வரியை குறைப்பது குறித்து அரசு யோசித்து வருகிறது. இது எப்எம்சிஜி நிறுவனங்களுக்கு அதிக லாபத்தையும், விலை நிர்ணயத்தில் சுதந்திரத்தையும் கொடுக்கும். நுகர்வோருக்கும் பொருட்கள் மலிவாக கிடைக்கும்.

* இந்த ஆண்டு நல்ல பருவமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். நல்ல மழை விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி, அவர்கள் அதிக பொருட்களை வாங்க வைக்கும். இது எப்எம்சிஜி தயாரிப்புகளுக்கான தேவையை கணிசமாக அதிகரிக்கும்.

* மக்களின் நுகர்வை அதிகரிக்கும் வகையில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே அதிக பணப்புழக்கம் ஏற்பட்டு, அதிக செலவு செய்ய தூண்டும். இதனால் அத்தியாவசிய பொருள்களுக்கும், வசதிகளை அதிகரிக்கும் பொருட்களுக்கும் அதிகம் செலவு செய்வார்கள்.

இது எப்எம்சிஜி நிறுவனங்களுக்கு நல்ல செய்தி ஆகும். முதலீட்டாளர்களும் ஆய்வாளர்களும் இந்த ஆரம்ப வேகம் நீடிக்குமா என்பதை கவனமாக பார்த்து வருகின்றனர். எல்லா அறிகுறிகளும் இந்திய எப்எம்சிஜி துறை ஒரு முக்கிய மாற்றத்தை நோக்கி செல்வதை காட்டுகின்றன. அரசு ஆதரவு, நல்ல மழை, நுகர்வு அதிகரிப்பு, வரவிருக்கும் பண்டிகை நாட்கள், வரிச்சலுகை / சீரமைப்பு எல்லாம் சேர்ந்து இந்தத் துறையை நீண்ட காலமாக எதிர்பார்த்த வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல தயாராக உள்ளன.

- somasmen@gmail.com

SCROLL FOR NEXT